“ஓய் நித்தி.. என்னம்மா… இவ்ளோ சீரியஸா உக்காந்திருக்க?? என்ன அடுத்த கதைக்கு கன்டன்ட் ரெடி பண்ணிட்டிருக்கியா??”, என ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த தன் தோழியின் தோளை தட்டிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் தன் தோள் பையை வீசிவிட்டு அமர்ந்தாள் சந்தியா..
சந்தியாவின் தீண்டலில் சுயத்திற்கு வந்தவள் ‘ஒன்னும்மில்லடி.. இன்னைக்கு என் கண்ணுல பட்ட விஷயத்தெல்லாம் யோசிச்சிட்டிருந்தேன்’, என எப்பொழுதோ ஹாஸ்டல் கேன்டினிலிருந்து பிடித்து வந்த ஆறிய தேநீரை குடிக்கலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருந்தாள்..
“அப்படி என்ன இன்னைக்கு நடந்துச்சு மேடமோட வாழ்க்கைல?? என்ன யாராவது டீஸ் பண்ணாங்களா?? இல்ல ஃபாலோ பண்ணி வர்றாங்களா?? இல்ல ஆஃபீஸ்ல எதாவது ப்ராப்ளமா?? என்ன அந்த நெட்ட சொட்ட மேனேஜர் சீண்டினானா??”, என இதற்கு முன் அவள் கூறிய விஷயங்களாக இருக்குமோ என அடுக்கி கொண்டிருந்தாள் சந்தியா..
‘விட்டா நீயே இதெல்லாம் நடக்க சொல்லி சாபம் குடுப்ப போல.. இதெல்லாம் எனக்கு பழகிடுச்சு.. ஐ கேன் டேக் கேர் ஆஃப் மைசெல்ஃப்”, என கூறியவள் கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு சந்தியாவை நோக்கி திரும்பினாள்..
“ஏன் சன், இந்த சொசைட்டினா என்ன??”
“என்னடி திடீர்னு… எனக்கு இப்படி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு மூளை இல்லனு உனக்கு நல்லாவே தெரியும்”, விளையாட்டாய் பதிலளித்தவள் நித்யாவின் சற்று மாறிய முகத்தைக் கண்டு
“நம்ம சுத்தி இருக்கவங்கடி”, என்றாள் தப்பித்த குரலில்..
“நம்ம சுத்தி இருக்கவங்க னா.. யாரெல்லாம் சொல்லுவ?”
“நம்ம சுத்தி இருக்கவங்கனா நம்ம சுத்தி இருக்கவங்க தான்.. இதுல நா யாரன்னு பின் பாய்ன்ட் பண்ணி சொல்ல முடியும்… நம்ம அப்பா அம்மா, குடும்பம், படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ், அந்த இன்ஸ்டிட்யூஷன், ஒர்க்குக்கு போறவங்களுக்கு அந்த ஆஃபீஸ், போர வர்ற இடம், இப்படி எல்லாமே சொல்லலாமே டி”
“அப்போ சொசைட்டினா நம்மல இன்ப்ளூயன்ஸ் பண்ற, நாம இன்ப்ளூயன்ஸ் பண்ற மனுஷங்க தான்-ல”, என மற்றுமொரு சந்தேகத்தை முன் வைத்தாள் நித்யா..
அவள் பேசுவது புதிராய் இருப்பதாய் உணர்ந்த சந்தியா,” அம்மா தாயே இப்படி சுத்தி வளைச்சு கேள்வி கேட்டு என்ன பைத்தியமாக்காத, நானே அந்த டி.எல் என்ன திட்டிட்டான்ற கடுப்புல இருக்கேன்”, என சற்று சளித்துக்கொண்டவளாய் தன் படுக்கையில் படுத்து கண்ணை மூடி கொண்டாள் சந்தியா..
“சரி, சரி, டென்ஷன் ஆகாத.. என்னன்னு சொல்றேன்.. என்கூட ஒர்க் பண்ற வினோத் தெரியும்ல.. அவனும் கவிதை கட்டுரைனு எழுதுவான்ல.. அவனோட தான் ஒரு இஷ்யூ ஆய்டுச்சு”
“என்னடி சொல்ற?? என்ன கவிதைல காதல சொல்லிட்டானா??”, என துள்ளி எழுந்த சந்தியா அவளை கட்டியணைத்தவாறு கேட்டாள்.
“காதல சொல்லியிருந்தா பரவால்ல.. அவன் ஒரு மாதிரி அசிங்கப்படுத்திட்டான்.. ஐ திங்க் ஹீ இஸ் எ மேல் சாவனிஸ்ட்”, என சந்தியாவின் அணைப்பை விலக்கியபடி தன் மெத்தையில் சென்றமர்ந்தாள் நித்யா.
“என்னடி சொல்ற..கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு”
“ஒன்னுமில்லடி.. கொஞ்ச நாள் முன்னாடி ஆஃபிஸ் கல்ச்சுரல்க்கு நான் ஒரு கவிதை வாசிச்சேன்ல… மேல் ப்ராஸ்டிட்யூஷன் பத்தி.. நீ கூட படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொன்னியே.. அந்த கவிதைனால வந்த பிரச்சன”
“அந்த கவிதைக்கு என்ன டி?? நல்லா தான இருந்துச்சு.. எனக்கு வித்தியாசமாவும் இருந்துச்சு.. எப்பயும் விலை’மாது’-னு தான் நா படிச்சிருக்கேன்.. நீ விலை’மகன்’னு எழுதவும் எனக்கு ஆச்சர்யம் தான்..உங்க ஆஃபீஸ்ல கூட நெறய பேரு அப்ரிசியேட் பண்ணதா சொன்னியே.. சரி அப்டி இவன் என்ன சொன்னான்னு இவ்ளோ டீப்பா யோசிச்சிட்டிருக்க??”, என அவள் அருகில் அமர்ந்தாள் சந்தியா..
“இன்னைக்கு ப்ரேக்ல கேஃபிடேரியால உக்காந்திருக்கும்போது ஏதோ பேச்சு வந்து இன்னொரு டீம் பொண்ண பத்தி டாக் வந்துச்சு.. அவளோட கேரக்டர் சரியில்ல.. ஆஃபீஸ்லயே நெறய பேரோட ரிலேஷன்ஷிப் வச்சிருக்கா அப்டி இப்டின்னு.. எல்லாருமே ஒவ்வொரு ஒப்பினியனா சொல்லிட்டிருந்தாங்க.. நானும் என்னோட ஒப்பினியன் சொன்னேன்.. அவள மட்டும் பேசி என்ன பிரயோஜனம்.. அவகிட்ட போறவங்களையும்ல பேர் சொல்லனும், திட்டனும்னு”,
“கரக்டா தான சொல்லிருக்க” – சந்தியா சொல்ல
“நீ சொல்ற நா கரக்டா சொன்னேன்னு…ஆனா என் கூட இருந்த யாரும் இத சொல்லலயே.. நா, வினோத், சுந்தர், மீனாட்சி, கல்பனா, ஜோசப்-னு எல்லாருமே இருந்தோம்.. ஆனா எல்லாருமே நா சொல்றத தப்புனு தான் சொன்னாங்க.. அதுலயும் அந்த வினோத் ஒரு படி மேல போய் எனக்கு லெக்ச்சர் எடுக்க ஆரம்பிச்சுட்டான்”.
“என்ன சொன்னான்?”, சந்தியா..
“என்ன நீ வழக்கத்துல இருக்குறத பத்தி பேசாம என்னன்னமோ புதுசா சொல்ற?? அந்த காலத்துலயே பாலிகாமிலாம் வழக்கத்துல இருந்துச்சுல்ல… முள்ளு மேல சேல விழுந்தாலும் சேல மேல முள்ளு விழுந்தாலும் பாதிப்பு சேலைக்கு தான… இப்போ நீங்க படிச்சு வேலைக்கு வந்துட்டா எல்லாமே உங்க இஷ்டம்னு நெனச்சிப்பீங்களோ?? சரி நீ சொல்ற மாதிரியே அந்த மாதிரி பொண்ணுக்கிட்ட போற ஆம்பிளைகள பேர சொன்னா மட்டும் என்னவாகிடப்போது?? புடிச்சு ஜெயில்ல போட்றுவாங்களா என்ன?? அப்டியே ஜெயில்ல போட்டாலும் ‘தொழில்’ பண்றாங்கன்னு அந்த பொம்பளைங்கள தான் ஃபர்ஸட் புடிப்பாங்க”
“அவன் இப்படி சொன்னதும் எனக்கு கோவம் வந்து நானும், ‘சரி வினோ, அப்ப தப்பெல்லாம் பெண்கள் மேலதான்னு சொல்றியா?? உங்க மேல தப்பே இல்லையா??’-னு கேட்டேன்”..
அதுக்கு அவன், “தப்பா..இதெல்லாம் எங்க டிக்ஷனரில தப்பே கெடையாது… கற்புக்கரசின்னு உங்கள தான் பாய்ன்ட் பண்ணுவாங்க.. எங்களுக்கு அந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இல்லப்பா… உனக்கு எங்கள அசிங்கப்படுத்தனும்னு நெனப்பு இருந்தா சொல்லு.. நானே ரூம் புக் பண்றேன்.. நானே உனக்கு பேமன்ட் தர்றேன்.. அடுத்த நாள் நீ இத யார்க்கிட்ட வேணும்னாலும் சொல்லு… கேரக்டர்லெஸ் கேர்ள்-னு உனக்கு தான் அவார்ட் தருவாங்க… அவன் கூப்டான்னா உனக்கெங்க போச்சு புத்தின்னு உன்ன தான் பாய்ன்ட் பண்ணுவாங்க..யூ நோ பிக்காஸ் செக்ஸ் இஸ் மென்ட் ஒன்லி ஃபார் அவர் சேட்டிஸ்ஃபேக்ஷன்… உங்களுக்காகன்னு இங்க எதுவும் டிசைன் பண்ணல, பண்ணவும் மாட்டாங்க.. அப்டி நீ பண்ணனும்னு நெனச்சா யாருக்கு தெரயும் இன்னும் பல ஜென்மங்கள் கூட நீ எடுக்க வேண்டி வரும்-னு அவன் சொல்ல எல்லாரும் சிரிச்சுட்டாங்க.. சரி பசங்க தான் சிரிக்கிறாங்கன்னா இந்த கல்பனாவும் மீனாட்சியும் சேர்ந்து சிரிக்கிறாங்க.. எனக்கு அவன் என்ன சொன்னதுக்கு ஒரு பக்கம் கோவம் இருந்தாலும் இவளுக ரெண்டு பேரு கூட சேந்து சிரிச்சது தான் இன்னும் கடுப்பாய்டுச்சு”, எனக்கூறியாவாறு முகத்தை கைகளால் மறைத்து கொண்டாள்..
தோழியின் நிலையை உணர்ந்தவளாய், “அவன் உன்ன சொன்னதுக்கு நீ எதுவுமே சொல்லலயா??”, என கேட்டாள் சந்தியா..
” எனக்கு சொல்லனும்னு தோணல..அதுவுமில்லாம என்னன்னு சொல்றது?? அவன் பேசுனதெல்லாம் வாடிக்கையான விஷயம் தான? இதுல கூட இருந்தவளுகளும் அவன் சொல்றது தான் சரின்னு நிக்குறப்ப நா என்ன சொல்ல முடியும்?? நா பேசிருந்தேனா எனக்கு தான் இன்னும் அசிங்கமாயிருக்கும்.. அதோட எனக்கு இந்த டாபிக் உறுத்திட்டியிருந்துச்சு..”, என மறுபடியும் ஏதோ யோசனைக்குள் புகுந்துவிட்டாள் நித்யா..
“நீ சொல்றதும் சரி தான்.. நீ பேசியிருந்தா அவன் இன்னும் அசிங்கமா பேச வாய்ப்பிருக்கு… என்ன பண்றது இப்படிப்பட்ட சமுதாயத்துல தான் நாம வாழனும்னு இருக்கு..
நியாயத்த பேசிடலாம்..ஆனா நாம் பேசுறது நியாயம் தான்னு ஒத்துக்கக்கூட நமக்கு ஒத்தாச இல்லையே… உன்கூட இருந்த பொண்ணுங்களே உனக்கு சப்போர்ட் பண்ணலன்னு சொல்ற.. அப்போ இதே தான 100 பேர்க்குள்ளயும் இருக்கும்..பெண்ணியம்,பெண் சுதந்திரம்னு எழுதுனவங்க பேசுனவங்க எல்லாருமே அவங்க வீட்டு பொண்ணுங்கள எப்படி நடத்திருப்பாங்களோ?? யாருக்கு தெரியும்.. எப்படி சாதி, மதம்லாம் இல்லன்னு பேசிட்டிருக்கறப்பவே வன்முறைகள் நடக்குதுன்னு நியூஸ் வருதோ அப்றம் இது மட்டுமென்ன எக்சப்ஷனா?? விடு டி.. இதெல்லாமே உனக்கும் புரிஞ்சிருக்கும்.. அப்றம் ஏன் டீ அப்சட் ஆகுற??”, என சமாதானப்படுத்தியவளை பார்த்த நித்யா, தன் மெத்தையை விட்டு எழுந்தாள்.
ஆறிய தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தவள், “நீயுமே என்ன தான டி சமாதானம் பண்ற… அவன் சொன்னது தப்புன்னு தெரிஞ்சும் என்ன தான அமைதியா போக சொல்ற?? கூட நீயும் நிக்காதது எனக்கு வருத்தம் தான்.. இப்போ நா யோசிக்குற மாதிரி நாளைக்கு நீயோ, உன் தங்கச்சியோ, இல்ல உன் குழந்தையோ, உன் பேரக்குழந்தையோ யோசிக்குற நெலம வரலாம்… அப்போ மறக்காம என்ட்ட பேச சொல்லு… நா பேசிக்குறேன்”, என்றபடி ஆறிய தேநீரை வாஷ்பேசினில் ஊற்றியவள், தேநீர் ஊற்றியதற்கான தடயம் ஏதும் இல்லாதவாறு நீக்க தண்ணீரை திறந்து வைத்து, தன் இடப்பக்கம் இருந்த டேபிளில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்.
“சிறந்த பெண்மணி” என்ற விருதில் “சந்தியா” எனும் பெயர் சற்று பெரிதாய் பொறிக்கப்பட்டிருப்பதை புன்னகையுடன் பார்த்தவள், குழாயை மூடத்திரும்பிய நொடியில் தேநீர் கொட்டியதற்கான கரை இல்லாதிருப்பதை பெருமூச்சுடன் கண்டு நகர்ந்தாள்..
– கனிமொழி பாலாஜி, மன்னார்குடி
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
படஉதவி: https://unsplash.com/@loverna