சுமார் 267 மில்லியன் மக்கள் வசித்து வருகின்ற உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி பூகம்பம், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று. ஏனென்றால் இந்தோனேசியாவின் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளது. இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக் கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு காரணமாக வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை மற்றும் சாம்பல் பரவியுள்ளது.
எரிமலையில் இருந்து புறப்பட்ட தீக்குழம்பு 20 கி.மீ., வரை வழிந்து ஓடியது. எரிமலை குறித்து ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக, மலை அடிவாரத்தில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இடி முழக்கம் போன்ற சப்தத்துடன் வெடித்து சிதறியதால் மக்கள் வெகுவாக அச்சமடைந்தனர். அந்த பகுதியே கருமையான புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
வெடிப்பு தொடரும்பட்சத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் லாவா குழம்பு வரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், எரிமலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் படிந்து வருகிறது. எரிமலை வெடித்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாதபோதும், அருகில் உள்ள குடியிருப்புகளில் சிதறியுள்ள சாம்பலை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தற்போது, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், எரிமலை சீற்றம் அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
— இளவரசி இளங்கோவன்,
கனடா