உயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள்:
மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை!
தமிழ்நாட்டில் அனல் மின்நிலையங்களில் இருந்து நச்சு வாயுக்கள் மிக அதிக அளவில் வெளியேறுவது குறித்தும், அதனால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மாசுக்கட்டுப்பாட்டு அமைப்புகளின் பரிந்துரை, எச்சரிக்கை உள்ளிட்ட எதையும் மதிக்காமல் அனல் மின்நிலையங்கள் சுற்றுச்சூழலையும், மனிதர்களின் உடல் நலத்தையும் சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது; இத்தகைய கொடுமையை ஒருபோதும் ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் 40 அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 13,600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான இரு மின் நிலையங்கள் தவிர மீதமுள்ள 38 அனல் மின் நிலையங்களில் நச்சுவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகள் (Flue Gas Desulfuriser) பொருத்தப்படவில்லை.
நச்சுவாயுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படாததால் அனைத்து அனல் மின்நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு, நைட்ரசன் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியாகி வருகின்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான ஓர் மின்னுற்பத்தி அலகில் அனுமதிக்கப்பட்டதை விட 5 மடங்கு அதிகமாகவும், இன்னொரு அலகில் நான்கு மடங்கு அதிகமாகவும், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் நான்கு மடங்கு வரை கூடுதலாகவும் கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுவதாக பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு வேறு இரு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் காற்று மாசு அளவுகளுக்கான வரம்புகளை கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. 2017-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் அனல் மின் நிலையங்களின் காற்று மாசு அளவுகள் அந்த அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த அமைப்புக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களிலும் காற்று மாசு அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. அதைத்தொடர்ந்து காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கான அவகாசம் 2024-25 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும் எந்த அனல் மின் நிலையங்களும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்த அளவில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படாததால், ஆண்டுக்கு 76,000 அப்பாவிகள் தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். நெய்வேலி பகுதியில் தான் இந்த பாதிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. அடுத்து சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் அனல் மின்நிலைய மாசுக்களால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அப்பகுதிகளில் சுற்றுச்சூழலும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கவும், அனல் மின் நிலையங்கள் அமைக்கவும் அப்பகுதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் தான் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். ஆனால், அவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதையும் வழங்காமல், நச்சு கலந்த காற்றின் மூலம் அவர்களின் உயிர்களையும் பறிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? மின் நிறுவனங்களின் லாபப் பசிக்கு அப்பாவி மக்கள் பலியாகக்கூடாது.
அனல் மின் நிலையங்கள் அளவுக்கு அதிகமாக அமைக்கப்படுவதால் திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது; அதனால், அங்குள்ள மக்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். அதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் சார்பில் மட்டும் 7500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த பத்தாண்டுகளில் 17,970 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
புதிய அனல் மின்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் சீரழிவும், அதன் விளைவுகளும் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இவை அனைத்தையும் கடந்து இன்றைய சூழலில் அனல் மின் திட்டங்கள் பொருளாதார அடிப்படையிலும் லாபகரமானது அல்ல. தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.4.70 செலவாகிறது. அதைவிட பாதிக்கும் குறைவான செலவில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவை அனைத்தையும் ஆய்வு செய்து மின்னுற்பத்திக் கொள்கையை மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக தமிழக அரசின் சார்பில் இப்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் திட்டங்கள் தவிர, புதிதாக எந்த அனல் மின் திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக ஒரே இடத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலப்பின மின்னுற்பத்தி (Hybrid Power Generation) முறைக்கு தமிழக அரசு மாற வேண்டும். நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களை எரிவாயு அடிப்படையிலான அனல் மின்நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் முன்னதாக நிலக்கரி அனல்மின் நிலையங்கள் அனைத்திலும் உடனடியாக நச்சுவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.