இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் திரு. ஜி.ஆர். இரவீந்திரநாத் தெரிவித்துள்ள கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணமாக PG-MD/MS 9.6 லட்சம் UG-MBBS 5.4 லட்சம் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பல் மருத்துவ மாணாக்கர்களுக்கு ரூ 3.5 லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இக்கட்டணங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை விட மூன்று மடங்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை விட 30 மடங்கும் அதிகமாகும்.
இக்கட்டணங்களை, இதர தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க வேண்டும் எனக் கோரி, மாணாக்கர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் பலக் கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்களுக்கு தி.மு.க உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணாக்கர்களை சந்தித்து, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் மரியாதைக்குரிய திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணாக்கர்களுக்கு, இதர தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் கல்விக் கட்டணம் குறைத்து நிர்ணயிக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.
இப்போராட்டங்களின் விளைவாக, கடந்த ஆட்சியில் அரசாணை (GO-45 ) 01.02.2021 அன்று வெளியிடப்பட்டது.
தற்போது பயின்றுவரும் மாணாக்கர்களுக்கு இனிவரும் கல்வியாண்டிற்கான (2021-22) கல்வி கட்டணம், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக நிர்ணயித்து அந்த அரசாணை வெளியிடப்பட்டது.
அதே போல் கடந்த ஆட்சியில் 26.02.2021ல் வெளியிடப்பட்ட அரசாணை (GO122)ல், பழைய வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை ஏற்கனவே உள்ளது போல் 9.6 லட்சம் (MD/MS) மற்றும் 5.4 லட்சம் (MBBS) செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த அரசாணை 122யை ரத்து செய்யக் கோரி, மீண்டும் மாணாக்கர்களின் போராட்டம் நடத்தப்பட்டது.
தற்போது தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன், மருத்துவ மாணாக்கர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
* பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணாக்கர்களின் பயிற்சிக்கால உதவி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
* அகில இந்திய மருத்துவத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
* சமூக நீதியை காத்திட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு விலக்குப் பெற, தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
* புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
* மருத்துவம் அல்லாத இதர தொழிற் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தனியாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான கல்வி, விடுதி மற்றும் கலந்தாய்வுக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்று, ஏழை மாணாக்கர்களின் உயர் கல்விக் கனவை நனவாக்கியுள்ளது.
இவை மாணாக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும், பெற்றுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும், உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாற்றப்பட்டு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. அதற்கான அரசாணை எண் 354, 24.08.2021 அன்று வெளியிடப்பட்டது.
இது அரசு இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையிலும், தற்போது பயின்று வரும் மாணாக்கர்களுக்கும், எதிர் காலத்தில் படிக்க வரும் மாணாக்கர்களுக்கும், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிகப்படும் எனத் தெளிவாகக் கூறப்பட்டது. இது மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதே போன்று, சென்னை உயர் நீதி மன்றத்தில் மாணாக்கர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கு எண் WP No.: 7539 of 2021ல், தற்போது பயின்று வரும் மாணாக்கர்களுக்கும், எதிர் காலத்தில் படிக்க வரும் மாணாக்கர்களுக்கும் , தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அரசாணை (G.O. Ms.No.45 health and family welfare (MCA-2) Department, dated 01.02.2021)யை செல்லும் என உறுதி செய்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரிகளுக்கு, உயர் கல்வித்துறை புதிதாக ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில் (GO 204 Dated 26.10.2021), தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணாக்கர்களுக்கு இனி வரும் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, அரசு கட்டணமாக அல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, ACADEMIC YEARS 2018-19 to 2020-2021 MBBS 4.0 லட்சம், MD/MS 3.5 லட்சம், BDS 2.50 லட்சம், MDS 3 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த அரசாணையால், மாணாக்கர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். கவலை அடைந்துள்ளனர். பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, தற்போது படித்துக் கொண்டிருக்கும் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணாக்கர்களுக்கும், இனி வரும் கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை (ACADEMIC YEARS 2021-2024 FOR CURRENTLY STUDYING STUDENTS) தமிழ்நாடு அரசின் பிற மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக (ACADEMIC YEARS FROM 2021-22 ONWARDS MBBS – 13,600 , MD/MS – 30,000, BDS-11,600, MDS- 30,000 FOR CURRENTLY STUDYING STUDENTS AS PER Go 45&122 H&FW) நிர்ணயித்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருங் கவலையை போக்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
முதுநிலை மருத்துவப் படிப்பை படித்து முடித்தவர்களில் ஒரு சிலர், கடும் பொருளாதாரப் பிரச்சனைகளால், கல்விக் கட்டணப் பாக்கிகளை செலுத்த முடியாமல் சான்றிதழ்களை பெற முடியவில்லை.
தங்களது முதுநிலை பட்ட படிப்பை தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொள்ளவும் முடியவில்லை.
அத்தகையோரது கல்விக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசு கருணையோடு ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
—
மருத்துவர் திரு. ஜி.ஆர். இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்.
9940664343
9444181955