Home>>அரசியல்>>வ.கெளதமன் யார்?

என்னை திட்டி தங்கள் சுய வெறியை தீர்த்துக்கொள்ளும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இன்னும் கூட திட்டுங்கள்.

வ.கெளதமன் யார்?

(எனது வாழ்க்கை வரலாற்றில் உணர்ச்சிப் பெருக்கான ஒருசில துளிகள்)

ஐயாவைவைப் பற்றி ( தமிழ்த் தேசிய போராளி அ. வடமலை – எனது தந்தை) எனது அகம் உள்வாங்கிக்கொண்ட முதல் நிகழ்வினை ஞாபக கிடங்கினில் தேடித்தேடி பார்க்கிறேன். மிகப்பெரிய மன அலசலுக்குப் பின் ஒரு சம்பவம் சாம்பல் படிந்து எட்டிப்பார்க்கிறது.

அனேகமாக எனக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கலாம். எப்பொழுதும் போல வறுமை தாண்டவ மாடும் காலம். பசியால் தேம்பித் தேம்பி அம்மாவிடம் கெஞ்சி, இரவு கூடக்கூட களைத்துப்போய் தூங்கி விடுகிறேன். வழக்கமாக இதுபோன்ற நாட்களில் அம்மா புலம்பும், அழும், எழுந்து போய் திட்டக்குடியிலிருந்து வரும் பேருந்துகளில் எதாவது ஒன்றில் தனது கணவர் இறங்கி வந்து – கொண்டு வரும் பொருளினால் தன் பிள்ளைகளின் பசியினை தீர்த்துவிடமாட்டோமா? என கிழக்கு திசையினை பார்த்துவிட்டு ஏமாந்தபடி சோர்ந்து போய் வந்து எங்கள் வீட்டு திண்ணையில் சரிந்து படுத்துவிடும்.

நடு இரவில் கடைசி பேருந்தும் கடந்துவிட்ட நிலையில் ஏதாவது லாரி ஒன்றிலோ அல்லது மண்ணடிக்கும் டிராக்டர் ஒன்றிலோ இறங்கி வந்து அரைப்படி அல்லது ஒருபடி அரிசியினை தர – அம்மா புலம்பியபடி ஓடிச்சென்று கஞ்சி காய்ச்சி மயங்கிய நிலையில் தூங்கும் பிள்ளைகளைத் தூக்கி சோறூட்டுவது என்பது எங்கள் வீட்டில் கால காலமாக நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள்.

அன்று தூங்கிக் கொண்டிருந்த என்னை அம்மாவும், ஐயாவும் மாறி மாறி எழுப்புகிறார்கள். அம்மா ஐயாவிடம் கடுமையாக சண்டையிடுகிறது. நான் கண்விழித்து பாதி தூக்கத்தில் எழும்ப, எனக்கு முன்னாடியே பெரியக்கா தமிழரசியும், தமிழ்மணியும் எழுந்து உட் கார்ந்திருக்கிறார்கள். அப்பொழுது கல்பானாவும், லெனினும் பிறக்க வில்லை.

“எள்ளையும் கம்பையும் கமிட்டியில போட்டவுடனே வர வேண்டியதுதானே – ஆறுமணிக்குள்ள கணக்க முடிச்சிறுப்பான்ல புள்ளங்க பசியோட கெடக்கும்னு ஒனக்குத் தெரியல”

“வெவசாயிய மூக்கு மசுரா பாக்குறானுவோ…. நா என்னா பண்றது – நாளைக்கு வந்து வாக்கிக்கன்னுட்டான். தோழர்கள் வந்தாங்க, பேசிக்கிட்ருந்தேன்”

என்றவாறே வாங்கி வந்த உணவு பொட்டலங்களைப் பிரித்து எனக்கும் அக்காக்களுக்கும் ஊட்ட ஆரம்பித்தார். பிறகு தமிழ்மணியும் தமிழரசியும் தானாக சாப்பிட்டார்கள். சீமெண்ணெய் சிமிளி விளக்கு கண் சிமிட்ட எனக்கு மட்டும் ஊட்டிவிட்டு வாய் துடைத்துப் படுக்க வைத்தார். “கோசல என்னை பெத்து இப்படி கொண்டுக்கிட்டு வந்து போட்டுட்டு போயிட்டா” என்று இறுதிவரை புலம்பிய அம்மாவின் புலம்பலை கேட்டபடியே நான் உறங்கிப் போனேன்.

மூன்றரை வயது வரை புதுத்துணியில் எனக்கே எனக்கு என்று எடுத்து தைத்த அல்லது வாங்கிய கால்சட்டையினை நான் அணிந்த தில்லை. யாரோ போட்டுக்குடுத்த ஒரு சட்டையை அணிந்து அதுவும் பிட்டத்தில் ஓட்டை விழுந்து அதன்பின் ராமலிங்கம் சித்தப்பா, பாலக்கிருஷ்ணன் அப்பா, பெரியசாமி மாமா ஆகியோரின் துண்டுகளை மட்டுமே இடுப்பில் கட்டிக்கொள்வேன். இதில் சில துண்டுகளை அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் மெதுமெதுவாக சென்று எதிர்ப்பார்க்காத நேரத்தில் உருவிக்கொண்டு ஓடிய தேங்காப்பூ’ துண்டுகளும் உண்டு. பலமுறை ஐயாவிடம் புதுச்சட்டை கேட்டுவிட்டேன். “பாக்கலாம், வாங்கித்தரேன்” என்ற சொல்லோடு காணாமல் போய்விடுவார், பல நாட்கள் ஆளையே பார்க்க முடியாது.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் “ஃபுல்டைம் ஒர்க்கர்” அவர், ஒரு நாள் இரவு எழுப்பி ஒனக்குப் புதுத்துணி எடுத்து வந்துருக்கேன்’ என்றதும் ஒரு நொடியில் தூக்கம் கலைந்து வாங்கிப் பார்க்க, ரத்தக்கலரில் சிகப்புத்துணி. சிரித்தபடியே “கொடி தச்சது போக மீந்தத் துணி நல்லாருக்கும்” என்கிறார். எதுவாக இருந்தால் என்ன எனக்குப் புதுத்துணி. இனி எல்லாரையும் போல நானும் புதுக்கால்சட்டை அணிவேன். கிண்டல் செய்த பையன்களிடம் நாமும் கம்பீரம் காட்டலாம்.

விடிந்ததும் ஆற்றைத் தாண்டிய ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள (அந்த கோயிலின் வாசலிலுள்ள பகுதியில் தான் மேடைப்போட்ட ஒரு திடலில் பெரியார் எனக்கு கௌதமன் எனப் பெயரிட்டு இராமசாமி ஈரோட்டிலிருந்து வந்து எனாமா பேரு வப்பானா கட்சி நிதிக்கு அஞ்சு ரூவாக்குடு என வாங்கிக்கொண்டாராம்) டைலர் கடையில் அவரை இழுத்துக் கொண்டு போய் கால் சட்டைக்காக இடுப்பு அளவு கொடுக்கிறேன். அளவெடுத்ததும் ஓகளுரில் யாரையோ பார்ப்பதாக கூறி ஐயா சைக்கிளில் ஏறி புறப்பட்டு விடுகிறார்.

அடுத்த நாள், அடுத்தநாள் என ஆற்றைக் கடந்துவந்து ஊருக்கும் கடைக்குமாக அலைகிறேன். துணி வெட்டப்படாமல் கொடியிலேயே கிடக்கிறது. கெஞ்சி கேட்க, “தக்கிறதுக்கு ஒப்பன் பணம் தருவாரா? ஒண்ணுமே பேசாம போயிட்டாரு பணம் வாங்கிக்கிட்டு வந்தீன்னா உடனே வேல நடக்கும்” எனக் கூற எனக்கு கண்கள் குளமாகிறது. ஐயாவை அதன்பின் பல நாட்கள் பார்க்க முடியவில்லை. இரவில் கிடைத்தாலும் ‘பார்க்கலாம்’ என்கிற ஒற்றை வார்த்தை, விடிந்ததும் ஆள் காணாமல் போய் விடுவார். ஒரு நாள் போய் பார்க்க தைக்கப்பட்ட கால்சட்டையாக கொடியில் கிடக்க பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர்.

காசு தராமல் கால்சட்டை இல்லை என கறாராக கடைக்காரர் சொல்லிவிட்டார். ஆற்றில் உட்காந்து அழுகிறேன். பல நாள்கள் நடந்து ஒரு நாள் திகைத்த நிலையில் கடைக்காரர் முன் நின்றேன் – காதில் பென்சில், கழுத்தில் துணி அளவிடும் நாடா – கையில் கத்திரியோடு என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ கொடியில் கிடந்த கால்சட்டையினை உருவி “ஊருக்கு ஊருக்கென்று ஒப்பன் ஓடுவான் நாங்களும் அப்படிச் சாவ முடியாது…. மக்கி குப்பையா போறதுக்குள்ள நீயாவது போட்டுக்க” என எனது முகத்தில் தூக்கி எறிந்தார். ஒரு மஞ்சள் மாலையில் கோமணத்துணிபோல் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வெள்ளாற்றில் நின்று கால்சட்டை அணிந்து கோயில் கோபுரத்தைக் கம்பீரமாக பார்க்கிறேன். அப்பொழுது கூட ஐயாவின் மீது எனக்கு கோவம் வரவில்லை.

ஐந்து வயது. என் வயசு பொடியன்கள் தோளில் பை மாட்டிக் கொண்டு பள்ளிக்குப் போகிறார்கள். நன்றாக சம்மணமிட்டு உட்கார்ந்து படிப்பதையும், ஆசிரியர் பாடம் நடத்துவதையும் கதை கதையாக சொல்கிறார்கள். அம்மாவிடம் பள்ளிக்கூடம் போகும் ஆசையினை வெளிப்படுத்துகிறேன். “கூட்டிக்கிட்டுப் போயி சேர்த்துவிடச் சொல்லி ஒப்பன்கிட்ட சொல்லு” நான் அவரைப் பார்த்தாதானே சொல்வதற்கு. எப்போதாவது கிடைத்து கேட்டால் ‘பார்க்கலாம்’ என்றபடியே தோழர்களோடு சைக்கிளில் பயணம் சென்று விடுவார்.

ஒருநாள் பையன்களோடு புளியமரச்சாலையில் எடைச்செருவாய் பள்ளியை நோக்கி போகிறேன். பையன்கள் அவரவர்கள் வகுப்பிற்குள் நுழைகிறார்கள். வாசல் வரை சென்று வேடிக்கைப் பார்க்க, என்னை பார்த்து ஆசிரியர் யார் எனக் கேட்க பயந்து ஓடி வந்து விடுகிறேன். ஆசை ஆற்றாமையாக மாற தெம்பை திரட்டி பிறிதொரு நாள் பசங்களோடு வகுப்பறைக்கே சென்று முன்பு யார் எனக் கேட்ட அதே தவமணி ஆசிரியர் முன் துணிச்சலுடன் நிற்கிறேன். என்னப்பா எனக் கேட்க பள்ளிக் கொடத்துல என்னச் சேத்துக்கங்க சார் என்கிறேன்.

அவர் சிரித்த படியே உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வா என்கிறார். அவர் கம்யூனிஸ்ட் கட்சில இருக்காரு எப்ப வருவாருன்னு தெரியாது என்னைச் சேத்துக்கங்க என்கிறேன். காதை தொட சொல்ல தொடுகிறேன். இன்னும் எட்டுலியே என்றபடி பெயர் என்ன என்று கேட்டு எழுதிக் கொண்டு உட்கார் என்றவர் நாளைக்கு ஒங்கப்பாவ வந்து கையெழுத் போட்டுட்டு போவ சொல்லு எனப் பாடத்தை ஆரம்பிக்கிறார். அதன் பின்பு தோளில் சிகப்பு துண்டோடு ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு சைக்களில் ஏறி தோழர்களோடு சென்றதாக சித்திரம் நிறைகிறது.

அதன் பின்பு எத்தனையெத்தனை போராட்டங்கள். ஏதோ ஒரு மரநிழலில் யாரோ ஒருவரின் மடியில் நான் அமர்ந்திருக்க விவசாயி களுக்கான போராட்டக்களங்களில் சுட்டெரிக்கும் சாலைகளின் குறுக்கே கூட்டத்தோடு கூட்டமாக அம்மாவும், ஐயாவும் கூச்சலிட்டு கோரிக்கை வைக்கும் காட்சிகள், திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் அம்மாவும், ஐயாவும் மேடையிலிருக்க கீழே தரையினில் தோழர்களோடு அமர்ந்து மேடையில் முழங்கும் அவர்களின் பேச்சினை கேட்ட பதிவுகள், எங்களின் சொந்த ஊரான பாளையத்தில் பேருந்து கொண்டுவர, நியாய விலைக்கடை நிர்மானிக்க, நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க, எனது தொடக்கக் கல்வி காலக்கட்டங்கள் முழுக்க இருவரும் சேர்ந்து நின்று நடத்திய உக்கிரமான போராட்டங்கள் எத்தனை எத்தனையோ… ஆனால் இன்றிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அம்மா இறந்து விட்டது.

இப்பொழுது ஐயா, ஓடி ஓடி இந்த மண்ணிற்காக போராடி யவர்கள் மதிப்புமிக்க போராளிகள் நடமாடிய, தலைமறைவாக வாழ்ந்த எங்கள் வீட்டின் பின் தோட்டத்தில் இப்பொழுது மண்ணுக்கடியில் இருவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடத்திற்கே தனி ஆளாக சென்று சேர்ந்தவனுக்குத் திரைப்படம் பார்க்கும் சூழல் அவ்வளவு எளிதாக வாய்க்குமா என்ன? ஒன்பது வயது நான்காவது படித்துக்கொண்டிருக்கிறேன். அதுவரை திரை எப்படியிருக்கும் என்றே தெரியாது. மனிதர்களின் தலை யாணை தண்டி இருக்கும், கைகால்கள் மரத்தடி போன்று பெரிதாக விரியும் என படம் பார்த்த சிறுவர்கள் விடும் கதை பேராசை கொள்ள செய்கிறது. எத்தனை முறை கெஞ்சியும் வாய்க்கவில்லை. ஒருநாள் வேகமாக வந்தவர் ’சீக்கிரம் புறப்படுங்க சினிமாவுக்கு போகலாம் என்கிறார். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறேன். படத்தின் பெயர் “சிகப்பு மல்லி ” கம்யூனிஸ்ட் படம். சிவந்த கண்களோடு “எரிமலை எப்படி பொறுக்கும் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்” விஜயகாந்த் சிகப்பு கொடியோடு உறுமும் காட்சிகள், வியந்து போகிறேன். அன்று முதல் திரை எனக்குப் பெரும் ஈர்ப்பாகிறது.

ஆறாவது படிக்க திட்டக்குடிக்கு வருகிறேன். விடுதியில் தங்கிப் படிக்கும் போது திரைப்படம் பார்ப்பது ஒரு முக்கிய வேலையாக மாறுகிறது. ஏழாவது படிக்கும்போது நம்முடைய இலக்குத் திரைப்படத் துறைதான் என்றும் சென்னைதான் எதிர்கால வாழ்வியல் இடம் என்றும் முடிவு செய்கிறேன்.

திட்டக்குடி விடுதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நடந்து போகும் போது வழியில் சாலையோரத்தில் சிகப்புத்துண்டு தலையில் கட்டியிருக்க ஐயா தானே குழிநோண்டி கம்யூனிஸ்ட் கம்பு நடும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். வேர்வை வழிய வழிய வேலை செய்து கொண்டிருப்பார். என்னை பார்த்ததும் ஒரு புன்னகை. மற்ற மாணவர்களின் முன்பு சற்று கூச்சமாக இருக்கும். சாலையோரத்தில் நிற்கும் அவருடைய சைக்கிள் கேரியரில் சில போஸ்டர்கள் நோட்டீஸ்கள் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓரிரு தோழர்களோடு கனகச்சிதமாக வேலை நடந்து கொண்டிருக்கும்.

விடுதியிலிருந்து விடுமுறைக்கு சென்றிருந்த ஏதோ ஒரு நாள் அச்சகம் வைப்பதற்கு பூர்வீக நிலத்தை விற்பதாக எங்கள் வீட்டு திண்ணையில் பேச்சு வார்த்தை. அம்மா சோகமாக கதவருகே. நீண்ட பேச்சு விவாதத்திற்கு பிறகு முடிவாகிறது. இருபத்தொம்பா தாயிரம் (இப்பொழுது அந்த நிலத்தின் விலை ஒன்றரை கோடி) முன்பின் தெரியாத அச்சகத் தொழிலை ஐயா தேர்ந்தெடுத்ததிற்கு முக்கிய காரணம் பின்னால் தெரிய வருகிறது.

கம்யூனிசுட் துண்டறிக்கைகளை உரிய நேரத்தில் திட்டக்குடி மீனாட்சி அச்சகத்தார் தராமல் இழுத்தடித்ததால் கோவமானவர்; நாங்களே அந்த அச்சகத்தை உருவாக்குகிறோம். எனச் சவால் விட்டுதான் நிலம் விற்கப்பட்டு என் தங்கையின் பெயரால் “கல்பனா மின் அச்சகம்” என அமைக்கப் படுகிறது. பழம்பெரும் அச்சுத் தொழிலாளி மணியன் என்பவர் எனக்கும் தொழில் கற்றுத்தர வேலை நடந்து கொண்டிருக்கிறது. புரட்சிக்கான எத்தனையோ துண்டறிக்கைகள் அச்சிடப்படுகின்றன. ஐயா அலுவலகத்தில் இல்லாமல் வழக்கமாக “ஃபுல் டைமாராக” கவனிப்பின்றி போகிறது அச்சகம். மணியனும் சொந்த ஊரான குடவாசலுக்குப் போனவர் திரும்பவில்லை. அரைகுறையாக பதிமூன்று வயதில் நான் தொடர்கிறேன்.

ஒரு நாள் கைத்தவறி கனரக இரும்பு அச்சு இயந்திரத்தில் என் வலது கை சிக்கி விரல்கள் நசிந்து உள்ளங்கை பொத்தலிட்டு ரத்தம் ஊற்றுகிறது. ஐயா பதறுகிறார். கடலூர் மருத்துவமனைக்கு ஈரத்துணி சுற்றி தூக்கிக் கொண்டு ஓடுகிறார். மருத்துவம் பார்க்கப்படுகிறது. வெள்ளத்துணி பத்துபோட்ட நிலையில் ஒருநாள் நிலவு வெளிச்சத்தில் என் கைபிடித்து பார்த்துவிட்டு கதறி அழுத ஐயா “என்னாலதானடா ஒனக்கு இந்த நிலை. என் மொத்த சொத்த வித்துனாலும் ஒன் கைய சரி பண்ணிடுவேன் கவல படாதடா கௌதமா ” எனக் கண்களில் கையினை ஒற்றிக்கொண்டார்.

என்னைக் காப்பாற்றுவேன் என்று அன்று சொன்ன ஐயாவை விபத்து ஒன்றில் சிக்கியபோது இன்று என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே.. நான் என்ன செய்யமுடியும்?

அச்சகம் பெரும் நட்டத்தில் இயங்கவே விற்பதற்கான வேலைகள் நடக்கிறது. இருபத்தொன்பதாயிரத்திற்கு வாங்கியதை பதிமூன்று ஆயிரத்திற்கு விற்கிறோம். பணத்தை வாங்கிய ஐயா என்னிடம் கொடுத்து வைக்க சொல்கிறார். இருவரும் பாளையம் பேருந்தில் ஏறுகிறோம். ஒரே இருக்கையில் இருவரும் . எங்கோ வெறித்தபடி வந்தவர் மெதுவாக என் கைபிடித்து “என்னை மன்னிச்சிட்றா ” எனக் குழந்தை பிள்ளையைப் போல் அழுகிறார். “என் தாத்தா ஒங்களுக்காக சேத்து வச்சத இப்படி அழிச்சிடடேனே”. என தேம்புகிறார். “நான் இங்கலாம் இருக்க மாட்டேண்ணா… (நான் எனது தந்தையை அண்ணா என்றே அழைப்பேன்.

என் தாய் அவரது தந்தையையும், என் தந்தை அவரது தந்தையையும் “அண்ணா” என்றே அழைப்பார்கள். கடலூர், அரியலூர் பகுதிகளில் இப்படி ஒரு பழக்கம் உண்டு) சென்னையில்தான் நா வாழப்போகிறேன்… கவலைப்படாதே எனத் தேற்றுகிறேன். நான் இதற்கும் சிறுவனாக இருந்த காலத்தில்தான் ஊர்ரையே எதிர்த்துக் கொண்டு இரண்டு மடங்கு கூட்டி விலைதர முன்வந்த நிலையிலும் கூட தனது பூர்வீக சொத்தினை பட்டியல் சமூகத்தினருக்கு வீடுகட்டிக் கொள்ள தந்ததும், நஞ்சை நிலத்தை விற்று அரசியல் பார்த்ததும் நடந்திருக்கிறது. இதன்பின்தான் அவரது வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை ஒரு நண்பனைப் போல பாவித்து என்னுடன் பகிர ஆரம்பித்தார்.

திண்ணைப்பள்ளிகூடம் படித்தவர் அதன்பின்பு தொடக்கக் கல்வி லெப்பைக்குடிக்காட்டில் படிக்கும்போதே (ஐந்தாம் வகுப்பு) புத்தகத்திற்கிடையில் கறீம் பீடி வைத்திருந்ததையும், செலவிற்கு பணம் தராத தாத்தாவினை மிரட்டுவதற்காக தனது கூறைவீட்டின் தாழ்வாரத்து சருகினை இழுத்து நுனியினை பற்றவைத்து சரசரவென பற்றி எரிந்து மேலேறிக்கொண்டிருக்கும் போது “தாத்தா விட்டா வீடு பத்திக்கும் காசு தர்றியா இல்லியா” என பயமுறுத்தி அவர் தர சம்மதித் ததும் சருகினை அணைத்து பணம் பெற்றதையும், கொல்லையில் கிடத்தப்பட்டிருக்கும் தோட்டத்தில் விளைந்த மிளகாய் மூட்டை களைப் பாதுகாக்க அதன்மேல் படுத்திருக்கும் தாத்தாவை இருட்டில் சென்று கத்தியைக் காட்டி “நெஞ்சிலே சொருகிடுவேன் பணம் குடு” எனக் கேட்க “போடா என்ன கொல்றதுக்கு ஒனக்கு எங்க தைரியம் இருக்கு இந்தா காசு” என விட்டெறிந்ததையும் கதை கதையாக கண்ணில் நீர் கோர்க்க சொல்லுவார். தாத்தாக்கு ஐயா என்றால் அவ்வளவு உயிர்.

அரியலூர் ஆர்.எஸ். மாத்தூர் அருகிலுள்ள சோழன் குடிக்காடுதான் ஐந்து தலைமுறைக்கு முன்பு ஐயாவின் பூர்வீக கிராமம். பிலிமிசை கூத்தூர் அய்யனார்தான் குலதெய்வம். சோழன்குடிக்காட்டிலிருந்து திட்டக்குடி அருகிலுள்ள குடும்பம் சிதம்பரம் என்பவரை வீட்டோடு மாப்பிள்ளையாக அழைத்துக் கொள்கிறது. சிதம்பரத்தின் மகன் அப்பாவு, அப்பாவுவின் மகன் அரியமுத்து, அரியமுத்துவின் மகன் வடமலை, வடமலை மகன் நான், எனது மகன் தமிழழகன் என நீள்கிறது எங்கள் தலைமுறை.

அப்பாவு கறிகூட உண்ணாத கௌரமிக்க ஒரு பெரும் விவசாயியாக பாளையத்தில் வாழ்ந்திருக்கிறார். அவரது மகன் அரியமுத்து அந்த அளவிற்கு சாதுரியமில்லாதவர். ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவன் வடமலையை அழைக்க வரும் அரியமுத்து “டேய் வடமலை எங்கய்யா ஒன்ன கையோட கூட்டிக்கிட்டு வர சொன்னாரு வாடா ” என்று தான் தன் மகனை அழைப்பார். வர மறுத்தால் தனது அப்பாயிடம் போய் சொல்வார். தாத்தா அப்பாவுவிடம் “வடமலை பட்டினி கெடந்துற போறான் போயி சாப்பிட குடுத்துட்டு வா” என்றதும் இவர் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு சோற்றினை தூக்கிக் கொண்டு ஓடுவாராம்.

இந்தக் காலகட்டத்தில்தான் ஆக்கனூரில் “சேர்வையார்” என்பவர் இளைஞன் வடமலையை அழைத்து (எட்டாம் வகுப்பு தோல்வி) திருக்குறள் பயிற்றுவிக்கிறார். ஆயிரத்து முந்நூறு குறளையும் மனப்பாடம் செய்யவைத்து பொருள் விளங்கிக் கொண்டதும் ஓரளவு பொறுப்பான பிள்ளையாக மாறுகிறார்.

முதலில் பேரறிஞர் அண்ணா – அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகிறார். அடுத்து பெரியாரின் தொண்டராக மாறுகிறார். இதற்குள் திட்டக்குடி அருகிலுள்ள கோழியூரை பூர்விகமாக கொண்டு மும்பையில் பிறந்து வளர்ந்த தனது உறவுக்கார பெண்ணான குண்டலம் என்பவரை மணந்து அதில் பிறந்த பெண்ணிற்கு தமிழரசி என பெயர் சூட்டுகிறார். ஆறுமாத கைக் குழந்தையாக இருக்கம்போதே வலிப்பு நோய் எப்பொழுதாவது வரும் குண்டலம் அம்மாள் எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் கிணற்றில் குளிக்க இறங்கிய போது நோய் தாக்கி இறந்ததாகவும், ஏதோ ஒரு கோபத்தில் ஐயா அடித்துவிட அவர் இல்லாத நேரத்தில் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகவும் பலவாறு செய்தி சொல்லப்படுகிறது.

ஒரு வயதான எனது மூத்த அக்கா தமிழரசியை வளர்க்கப் படாத பாடுபடுகிறார் ஐயா… கட்சி வேலைகள் இதனால் தடைபடுகிறது. வீட்டில் படுக்க வைத்து யாரையாவது பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு கட்சிப் பணிக்காக எங்காவது சென்றுவிடுவாராம்.

சில நேரங்களில் அக்கா, வீட்டு தோட்டத்தில் பயிர்களுக்கு இடையே சென்று படுத்து தூங்கி விடுவதும் இல்லையேல் காட்டில் தொலைந்து வீடு வந்து சேரத் தெரியாமல் சுற்றி அலைந்து கொண்டிருந்ததாகவும், டார்ச் அடிச்சும் கும்பல் கும்பலாக தேடி இரவில் கண்டு பிடித்த நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்திருக்கிறது.
தாத்தா உட்பட பலர் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் குழந்தை, அரசியல் இரண்டிற்காகவும் காரணம் கூறி மறுத்திருக்கிறார். இதற்கிடையில் இவருக்கும் சேர்த்து உழைத்த தாத்தா கடுமையான வயிற்று வலி, மூப்பின் துயரத்தில் சிக்கித் தவிக்க அவரைத் தூக்கிக் கொண்டு திருச்சி, கடலூர், சென்னை என அலைந்து எங்கேயும் குணப்படுத்த முடியாத நிலையில் “வடமலை என்னை வீட்டுத் திண்ணையில் கொண்டு போயி போட்டுர்ரா” எனக் கெஞ்சியிருக் கிறார்.

தான் ரத்தம் கொடுத்தும், எல்லாவித மருத்துவம் பார்த்தும் காப்பாற்ற முடியவில்லையே எனத் தவித்தவர் முடிவில் வீட்டில் கொண்டு வந்து அப்பாவு தாத்தாவை கிடத்தியிருக்கிறார்.

“தொப்புளை” சுத்தம் செய்ய செய்ய புழுக்கள் பூக்கும் ஒருவித வியாதி. தாங்க முடியாத வயிற்றுவலி. பார்க்க பொறுக்க முடியாத வடமலையிடம் கும்பிட்டு தாத்தா கெஞ்சுவாராம். “வலி தாங்க முடியலடா கொஞ்சூண்டு வெசம் ஒங்கையால குட்றா ” அழுதபடியே ஐயா வெளியேற – நாட்கள் கடந்த நிலையில் தாத்தா தானே நகர்ந்தபடி சென்று வீட்டினருகில் உள்ள கள்ளிச்செடியில் கொட்டாச்சியில் கள்ளிப்பால்’ கறந்து முடிந்தவரை குடித்துவிட்டு வந்து படுத்துக் கொள்ள அப்போதும் உயிர் போக வில்லை. நடு இரவில் வீட்டிற்கு வந்த வடமலையிடம் தாத்தா நடந்ததை சொல்ல கதறியிருக்கிறார்.

வடமலையின் கைப்பிடித்து கெஞ்சியவர் “இனிமேல் என்னால வலி தாங்க முடியாது. ஓங்கையால வெஷம் குடு’ என கண்ணீர் விட மனதை இரும்பாக்கிக் கொண்டு தான் உயிராக நேசித்த தனது தாத்தாவிற்கு கட்டை சுவரின் மேல் நெல்லுக்கு அடிப்பதற்காக கிடந்த ‘பால்டாயில் ’ மருந்தினை டப்பாவில் தண்ணீர் விட்டு கலந்து தாத்தாவிடம் நீட்டிவிட்டு வெளியே சென்று விட்டாராம். போகும் தனது ஆசைப்பேரனை ஒருமுறை பார்த்துவிட்டு மடக்கென்று குடித்திருக்கிறார் அப்பாவு.

விடிந்து நெடுநேரமாகி உயிர் பிரிந்திருக்கும் தாத்தாவிற்கு என வீட்டிற்கு வந்து பார்க்க – இழுத்துக்கொண்டு வாசலையே பார்த்தபடி கிடந்த தாத்தா, அருகில் வர – அவரின் கையினை பிடித்து “பத்ரமா பொழைச்சுக்கடா வடமலை ” எனக் கூறிக்கொண்டே உயிரை விட்டிருக்கிறார் அப்பாவு என்கிற பெருவிவசாயி.. இப்போது தாத்தாவும் இல்லை ஐயாவும் இல்லை… நான் என்ன செய்வேன்?

குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டுமென்று ஊரிலுள்ள அங்காளிகளும், பங்காளிகளும் நெறுக்குகிறார்கள். திருமணத்திற்கு ஐயா சம்மதிக்கிறார். ஐயா குடும்பத்திற்கும் அம்மாவின் (பரஞ்சோதி) குடும்பத்திற்கும் தெரிந்த உறவுக்காரர் பெண்ணாடம் அருகிலிருக்கும் பூவணூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் ஒரு பெண் இருக்கிறது என அழைத்து போக அப்பொழுது வீட்டில் அம்மா இல்லை. வயது வந்த கொஞ்ச நாளில் அதற்கு முன்பு ஆடுமேய்த்த அதே வேலையை அதன்பின்பும் தொடந்த நிலையில் வயற்காட்டு பகுதிகளிலுள்ள மரங்களில் ஆடுகளுக்கு ‘குழை’ உடைத்து போட்டுக் கொண்டிருக்கிறார் ’தொரட்டி! வைத்து. ‘மடியில்’ பொறித்து கட்டிய அரிசி. வாயில் மென்றபடி ஆடுகளோடு நின்று கொண்டிருந்த பரஞ்சோதியிடம் ஐயாவும் உடன் வந்தவரும் இருக்குமிடம் அறிந்து வருகிறார்கள். உறவினர் தெரிந்தவர் என்பதால் பேச்சுக் கொடுக்கிறார். கேள்வி கேட்க எடக்கு மடக்காக அம்மா பதில் சொல்ல ஐயாவிற்கு அம்மாவை பிடித்து விடுகிறது. “கூட யாரு அவுரு தலையில முடியில்லாத வயசான ஆளு” என்று அம்மாவால் கேட்கப்பட்டவர்தான் எதிர்காலத்தில் தனது கணவராக போகிறவர் என்பது அம்மாவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அய்யாவின் குடும்பநிலையைச் சொல்லி அம்மாவை சம்மதிக்க வைத்து பெண்ணாடம் விநாயகர், முருகன் கோவிலில் திருமணம் முடித்து எனது சிறிய அத்தை அஞ்சலம் அவர்களோடு பாளையம் கிராமத்திலிருக்கும் ஆள் அரவமற்ற எங்கள் வீட்டில் மாலை மங்கிய நேரத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு “ஊட்ல ரெண்டு வள்ள அரிசி கொஞ்சம் கொழம்பு சாமானுவ இருக்குது வேற எதுவும் இல்லை, நெகத்துல மண்ணுபடாம எங்கப்பணும் என் தாத்தணும் எங்கண் ணாச்சிய வளத்துட்டாங்க பார்த்து சூதானமா வாழ்க்கைய நடத்து கூப்பிட்ட குரலுக்கு முடிஞ்சாதான் நா ஓடிவருவேன்” என இருட்டி லிருக்கம் சிமிளியை கொளுத்தி வைத்துவிட்டு புறப்பட்டு விட்டார்.
அதன் பின்பு மூத்த அக்கா தமிழரசியோடு தமிழ்மணி பிறக்க, அதன்பின்பு நான், கல்பனா, லெனின் என வரிசையாக தமிழரசியோடு சேர்ந்து ஐந்து பிள்ளைகள்.

எது நடந்தாலும், உலகமே இடிந்து விழுந்தாலும் ஐயா கட்சிப் பணியை ஒருநாளும் விட்டதில்லை. தோழர்கள் வந்தால் சிகப்புத் துண்டு தோளிலேறும். வீட்டுக்குத் திரும்பிவரும் சேதியோ தேதியோ அவருக்கே தெரியாது.
கூட்டத்திற்கு எங்கும் நிதி தேரவில்லையென்றால் வீட்டை முற்றுகையிடுவார். பழைய குரூரம் தலைதூக்கும். சட்டிப் பானைகளைச் சோதனையிடுவார். சிலநேரங்களில் உடைந்து சுக்குநூறாகும். அதிலும் கிடைக்கவில்லையென்றால் களைக்கட்டினை எடுத்துவந்து வீட்டினுள் உள்ள மண்தரையினை கொத்தி கொத்தி பெயர்த்து தேடுவார் அம்மா பணத்தை புதைத்து வைத்திருக்கிறா ரென்று.

பலர் அம்மாவிடம் கேட்டதுண்டு. “ஏம்மா இவர கட்டிகிட்டயா இல்ல சேத்துக்கிட்டயா ” என்று. காரணம் அம்மாவின் கழுத்தில் தாலி இருக்காது. காதிலும் மூக்கிலும் பல நேரங்களில் துளை தூர்ந்து போகாமல் இருக்க தென்னை ஈறுகள் துண்டுகளாக சொருகபட்டி ருக்கும். அம்மா கூசாமல் ஐயா இருக்கும் போதே “என்னை இந்தாளு சேத்துக்கிட்டாரு நா மொறையா வாழ வந்தவ இல்லைன்னு”சொல்லி சிரிப்பாங்க. நடந்தது என்னான்னா கூட்டம் நடத்த பணம் இல்லை. அம்மாவிடம் கல்யாணம் ஆன புதிதில் அடகு வைப்பதற்காக தாலியினை கேட்டிருக்கிறார். தர மறுத்திருக்கிறார் அம்மா. இரவில் அம்மா நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தாலியை அறுத்து எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் ஐயா. விடிந்து பார்த்ததும் புரிந்துவிட்டது அம்மாவுக்கு. அன்றிலிருந்து “ஒன் மானம் சந்தி சிரிக்கட்டும்” என்று சொல்லி விட்டு புதிதாக வழிப் போக்கர்கள் யார் வந்தாலும் சிரித்தபடியே இந்த கதையினை சொல்லும் பழக்கம் அம்மாவிடம் இருந்தது.

கம்யூனிஸ்டாக இருந்த ஐயா தீவிர கம்யூனிஸ்டாக மாறு வதற்கான நிகழ்வு ஒன்று நடந்தது. எனது பத்தாவது வயதில் எங்கள் நிலத்தில் செழித்து வளர்ந்த தக்காளியும், வெண்டையும், கத்திரியும். அந்த ஆண்டு அருமையான விளைச்சல். ஆசையாசையாக ஆட்களை வைத்து பறித்து இரண்டு மாட்டு வண்டிகளில் ஏற்றி முதல் வண்டியின் மூட் டைகளின் மேல் வெயிலுக்கு முக்காடிட்டு அம்மா உட் காந்திருக்க இரண்டு வண்டி களும் திட்டக்குடி நோக்கி புறப்படுகிறது.

அய்யா குளித்துவிட்டு சற்று நேரத்தில் புறப்பட்டு வந்த திருவேங்கடம் பேருந்தினில் அவரும் நானும் ஏறுகிறோம். எடைசெருவாய் மஞ்சமுத்தூர் கோயிலருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது இரண்டு மாட்டு வண்டிகளும் நிற்க கூட்டம் கூடி நின்று யாரோ ஒருவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கி றார்கள். ஐயாவுக்கு சட்டென புரிந்துவிட பேருந்தினை நிறுத்தச் சொல்லி அவரின் கையினைப் பிடித்தபடி பத்து வயது சிறுவனான நானும் இறங்குகிறேன்.

அய்யா பயந்தபடியே ஐயா மயக்கமடைந்து கிடக்க ஊராரின் முதலுதவி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக அம்மா விழித்து வண்டி மாட்டோடு திட்டக் குடி வந்து “செவிடர் ”, காய்கறி கடையில் போட விலை கட்டுபடியாகவில்லை, கிலோ 30 காசுக்கு கேட்கிறார். 50 காசுக்கு போட்டால்தான் கூலிக்காவது கட்டு படியாகும். அப்பா கெஞ்சுகிறார். காலங்காலமாக காய்கறி போட்டு ஒனக்கு எவ்வளவு சம்பாரிச்சு குடுத் திருப்பேன். மயக்கம் போட்டு விழுந்துட்டா. ஞாயமா குடுங்க என்கிறார். அதற்கு செவிடர் 35 காசு கிலோவுக்கு தர்றேன் அதுவும் வித்துதான் தர முடியும் எனக் கூற கோவம் வந்தவர் மாட்டின் தும்பினை அவிழ்த்துவிட்டு தக்காளி உள்ளிட்ட காய்களை நடு ரோட்டில் குடைசாய்த்து விட்டவர் “என் மயிரு விவசாயம்… இனிமே சாவரத தவிர வெவசாயிக்கு வேற வழி இல்லடா … பணக்காரன்லாம் அவனவன் பொருளுக்கு அவனே வெலை வைப்பான் ஏழை வெவசாயி பொருளுக்கு மட்டும் மத்தவன் வெலை வப்பானா? இனிமே வெவசாயம் பன்றதுல்ல என் வேலை. வெவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்ப உருவாக்குறதுதான் எங்க வேலை” என்றவர் அழுதபடியே நின்ற அம்மாவையும், என்னையும் கூட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பின்புதான் புலவர் கலியபெருமாள் அவர்களின் தொடர்பும், தோழர் தமிழரசன் அவர்களுடனான உறவும் ஏற்படுகிறது. அதன்பிறகு நடந்த போராட்டங்களும் – எங்கள் குடும்பம் பட்ட துயரங்களும் அளவிட முடியாதது. சிறை, கைதுகள், ஐயாவின் தலைமறைவு வாழ்க்கை…

வவ்வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் தலைகீழாக தொங்கித்தானே ஆக வேண்டும். அம்மாவிற்கு ஐயாவின் பிரிவு பழக்கப்பட்டு போய் விட்டது. அவர் விவசாயத்தையும் விட்டு விட்டார். ஆளும் இருப்பதில்லை, பசிக்கும் பிள்ளைகளுக்கு அம்மாதானே பதில் சொல்லியாக வேண்டும். நீர் இறைத்து முடிந்தவரை காய்கறி பயிர் நடுவார். அதனை பறித்து தானே கூடையில் வைத்து சுமந்து ஊர் ஊராக விற்பார்.

அதிலும் குறிப்பாக அக்னி வெயில் சுடுமணலில் ஒரு கிலோமீட்டர் குறுக் களவு கொண்ட வெள்ளாற்றினை தாண்ட வேண்டும். காலில் செருப்பிருக்காது. மாறாப்பு முந்தானையை பிரிமனை போல் சும்மாடிட்டு தலைக்கு வைத்து தீ மிதிப்பது போல் கூடையுடன் ஓடி ஓரிடத்தில் நின்று அவசர அவசரமாக கூடையினை இறக்கி மாறாப்பு சும்மாட்டினை கடும் மணிலின் காலுக்கடியில் போட்டு ஏறி நின்று மூச்சு வாங்கியபின் இப்படி மீண்டும் மீண்டும் சுருட்டி தலைக்கு வைத்து கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் ஆடுதுறை ஓகளுரில் விற்று ஏதாவது அரிசி பருப்பு குழம்பு சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து மதியத்திற்கும் காலை சாப்பாட்டிற்கும் சேர்த்து ஏதாவது செய்து மயங்கி கிடக்கும் எங்களை எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு அது சாப்பிடாமல் மயக்க நிலையில் சரிந்து திண்ணையில் படுத்துவிடும். இப்படித்தான் அப்பா கைதான நிலையிலோ, தலைமறைவான காலகட்டத்திலோ அம்மா எங்களைப் பாது காத்ததும் படிக்க வைத்ததும். அப்படிப் பட்ட அம்மாவும் ஐயாவும் இன்று என் கண்ணுக்கெதிரே இல்லை எங்கள் மண்ணுக்கடியில்… நான் என்ன செய்வது?

அச்சகத்தை ஈனவிலைக்கு விற்றுவிட்டு வந்த நிலை. நான் விடுதியில் தங்கிப் படிக்கிறேன். எட்டாவது இறுதி பகுதி. சனி, ஞாயிறுக்காக வீட்டிற்கு வந்திருக் கிறேன். நிலம் பறிபோன நிலையில் துவண்டு கிடந்த ஐயாவை எங்கள் அம்மா “நிலந்தானே போச்சு விடுயா உயிர்தான் போகக்கூடாது” என தேற்றி விட மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தகாலம். அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கூறைவீட்டின் சிமிளி விளக்கை அணைத்த பின்பும் ஐயா நெடுநேரம் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். “ம்”.. கேட்டபடியே நான் தூங்கி விடுகிறேன். நடு இரவு கனவா நனவா என்று தெரியவில்லை. வீட்டின் கதவை உடைக்கும் சத்தம். பலவிதமான கொடூரமான காட்டுக்கத்தல்கள். சட்டென்று முழிக்கிறேன். கனவல்ல அது உண்மை!

எனக்கு முன்பே அக்காள்களும், அம்மாவும் ஐயாவும் எழுந் திருந்திருக்கிறார்கள். அப்பா காற்று கலந்த சன்னமான குரலில் ‘போலீசு’ என்கிறார். அம்மா சிமிளி வெளிச்சத்தில் வேர்த்தபடி உட்காந்திருக்கிறார். பின் கட்டு கதவையும் அடித்து உடைக்கிறார்கள். ஐயா வேட்டியை இறுக முடிந்தபடி கதவைத் திறக்க – திமுதிமு என டார்ச் வெளிச்சத்தோடும் கையில் துப்பாக்கிகளோடும் பதினைந்து இருபது காவலர்கள் உள்ளே நுழைகிறார்கள். மேலே பரண், கீழிருக்கும் சட்டிபானைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்குள் ஒரு குழு தோட்டத்தின் பின் பக்கம் கத்தியபடி ஓடுகிறது. பானைகளை உடைக்கிறார்கள்.

ஐயாவை நெட்டித்தள்ளுகிறார்கள். அம்மாவும் நாங்களும் குலை நடுங்க நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் திரும்ப திரும்ப கேட்ட கேள்வி “எங்கடா தமிழரசன்” ஐயா மறுக்க மாறிமாறி அறை விழுகிறது. ஒரு அதிகாரி எங்கம்மா பக்கம் திரும்பி “ஒனக்கு தெரியும்ல நீதானே சோறு போட்ருப்ப… எங்கடி தமிழரசன்? எனக்கு தலை சுற்றுகிறது. இயலாமையும் கோபமும் நிலைகுலைய செய்கிறது. மாறி மாறி கத்துகிறார்கள். “இன்னைக்கு இங்கதான் இருக்கிறதா? எங்களுக்கு நம்பகமான செய்தி வந்துருக்கு மறைச்சே அடிச்சே கொன்னுடுவேன்” என்றபடி ஒரு அதிகாரி எங்கம்மாவை கை ஓங்குகிறார். இதற்குமேல் என்னால் கோவத்தை அடக்க முடியவில்லை.

நடு இரவில் அதுவும் எங்கள் வீட்டிற்குள் புகுந்து என்னோட அப்பா, அம்மாவை மிரட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் “மரியாதையா பேசுங்க – இப்படி ஒங்க வீட்ல புகுந்து ஒங்க அக்கா, அம்மாவ மரியாதையில்லாம பேசுனா ஒங்களால பார்த்துக்கிட்ருக்க முடியுமா?” என கத்திவிடுகிறேன். பேரமைதி, என்னை ஒரு மாதிரியாக பார்த்த அந்த அதிகாரி சடாரென்று காதோடு சேர்த்து பலம்கொண்ட மட்டும் என் கன்னத்தில் அறைகிறார். சில நொடிகள் உலகம் இருண்டு நான் மீண்டேன். தோட்டத்தில் தேடிய குழு “அங்க யாரும் இல்ல சார்” என்க, என்னையும், ஐயாவையும் வாரி சுருட்டி வேனுக்குள் எறிந்து திட்டக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஐயாவை ஒரு அறையிலும் என்னை ஒரு அறையிலும் அடைத்து வைத்து சித்தரவதை தொடர்கிறது. உயர்ந்த எலும்பான அவரின் கைகளிலும், கால்களிலும் தடித்த மரத்தடிகளை கொண்டு அடிக்கும் ஒரு விதமான கொடூர சத்தமும், ஐயாவின் அலறலும் எனக்கு கேட்டுக் கொண்டேயிருந்தது. அன்று கேட்ட அந்த பெருவலியின் சத்தங்களே ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட என் தமிழினம் இன்றும் வாங்கிக் கொண்டிருக்கும், நொறுங்கிக் கொண்டிருக்கும், சிதைந்து கொண்டிருக்கும், எம்மினத்தின் மீட்சிக்காக தலை நிமிர்வுக்காக என்னை போராட தூண்டுகிறது. ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரத்தில் ரத்தம் சிந்திய நிலையில் நெஞ்சினை நிமிர்த்தி நின்றதும், எம் ஈழ இனத்தின் விடுதலைக்காக ஐநா அரங்கில் உரிமை கேட்டு குரலெலுப்பி போராடியதும் அன்று என் காதில் ஒலிக்க, வலித்த அந்த அடிகள்தான்.

2014 தமிழகத்திலும், தமிழீழத்திலும் நடந்த நடந்துக் கொண்டிருந்த இன உரிமை அழிப்புக்கு எதிராக தமிழக கல்லூரி மாணவர்களோடு நான் இணைந்து நடத்திக்கொண்டிருந்த உக்கிரமான அறவழிப் போராட்டங்கள். அரசும் காவல் துறையும் எங்கள் மீது கண் வைத்து பின் தொடர்ந்து கொண்டிருந்த காலம்.

அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி லயோலா கல்லூரியில் பொருளாதார கட்டிடம் திறக்க வருகிறார். லயோலா கல்லூரி மாணவர்களோடு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்து அறிவிக்கி றோம். நீங்கள் இன்றைய ஜனாதிபதியாக இருக்கலாம் முன்னால் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபொழுது எங்கள் ஈழ மக்களை அழிக்கும் பணியினைச் செய்தீர்கள். அதனால் ரத்தக்கறை படிந்த கைகளோடு நீங்கள் எங்களின் லயோலா கல்லூரி கட்டிடத்தைத் திறக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை பிரகடனம்.

பிரணாப் முகர்ஜி அவர்கள் அடுத்த நாள் காலை சென்னை வருவதாக இருக்கிறார்.

நான் சில மாணவர்களை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு இரவு பனிரெண்டு மணி வாக்கில் வீட்டிற்கு வந்து படுக்கிறேன். இரவோடு இரவாக மாணவர்களைக் கைது செய்கிறது காவல்துறை, ஒன்றரை மணி இருக்கும் ஐயா வீட்டிலிருக்கும் எனது அறையை தட்டுகிறார்.

கண் விழித்து எழுந்து வர காவல் துறை வந்திருக்கும் விடயத்தை சொல்கிறார். (இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக ஐயா என்னுடன்தான் தங்கியிருக்கிறார்) எதற்கு? என்கிறேன். கைது செய்ய வந்திருப்பதாக சொல்கிறார்கள் எனப் பதட்ட மில்லாமல் சொல்கிறார். கதவை தொறக்கட்டுமா என்கிறார். அதுவரை ஐயா கதவினை திறக்காமல் வெளியில் வைத்தே பேசியிருக்கிறார் என்பது தெரிந்ததும் சட்டையினை போட்டுக் கொண்டு வந்து “கதவைத் திறங்க” என்கிறேன். இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் அவர்கள் உள்ளிட்ட ஒரு பெரும் படை வீட்டினுள்ளே நுழைகிறது.

எதற்காக கைது என்கிறேன். டெல்லி டிபென்ஸ்ல நெருக்கிறாங்க முப்படை தளபதி ஜனாதிபதி, அவுரு வந்து போற வரைக்கும் நாங்க ரிமாண்ட் பண்றோம்” என்கிறார். ஐயா சற்று கோபத்தோடு “ஏன்யா திருடனுக்கும் கொலைக்காரனுக்கும் பாதுகாப்பு தருவீங்க மக்களுக்காக போராட்றவங்கள சிறை வைப்பீங்களா?” என்கிறார்.
நான் ஐயாவை சமாதானப்படுத்தி விட்டு அவர்களோடு புறப்படு கிறேன். ஐயா வாசல் வரை வந்து “வீரனுக்கு சாவில்லை மக்களுக்காக போரடுறத பெருமையா நெனச்சிக்க” என கூறி வழி அனுப்பி வைத்தார். அவரைப் பார்க்க… அதிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து என்னையும், அவரையும் காவல்துறை இழுத்துப்போன சம்பவம் நினைவுக்கு வந்தது… என்ன? சற்றுத் தள்ளி எனது மனைவி மல்லிகா மட்டும் எனது அம்மா பரஞ்சோதி போலவே அழுது கொண்டிருந்தாள்.

அதன்பின் போராடும் களத்தில் ஐயா பார்க்கவே எத்தனை கைதுகள், எத்தனை தள்ளுமுள்ளுகள், சில நேரங்களில் ரத்த சிதறல்கள். எதற்கும் அவர் கவலைப்பட்டதாகவோ, கண்ணீர் விட்டதாகவோ எவரும் என்னிடம் சொன்னதில்லை, மாறாக முன்பெல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தால் “கௌதமன் என்ன படம் பண்றான் -எப்ப சூட்டிங் ஆரம்பிக்கிறான்” என்று கேட்டு நச்சரிருப்பவர் அவரின் கடைசி காலங்களில் அதுவும் ‘கத்திப்பாரா’ போராட்டத்திற்குப் பிறகு “படைப்புகள் செஞ்சது போதும் இனிமே அவன மக்களுக்காக போராட சொல்லுங்க அவன் கலைஞனாக இருப்பதைவிட போராளியாக இருப்பதே எனது விருப்பம்” என்பாராம்.

முதன் முதலாக 1989 ஏப்ரல் 20 தேதி சென்னை வந்தேன் . கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் என்னோடு ஐயா இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கிறார். பல போராட்டங்களில் பார்வையாளராகவோ, பங்குதாரராகவோ கலந்திருக்கிறார். எந்த இடத்திற்கு சென்றாலும் இவர் என் தந்தை என்று நான் அறிமுகப் படுத்தியதில்லை. எத்தனையோ பட நிகழ்வுகள், ஆவணப்பட வெளியீடுகள், எனக்கான பாராட்டு விழாக்கள் ஒரு இடத்திலும் நான் மேடை ஏற்றவுமில்லை. என்னை ஏன் மேடை ஏற்றி சிறப்பிக்கவில்லை என்று அவரும் கேட்டதில்லை.

தமிழ்த் தேசிய நிகழ்வுகள், எவர் நடத்தினாலும் மனிதம் சார்ந்த உரிமை மீட்பு போராட்டங்கள் அனைத்திலும் பங்கெடுப்பார். இதில் பெரும்பான்மை பயணம் மிதிவண்டி பயணம். நான் மகிழுந்தில் போகும்போது வழியில் மிதிவண்டியில் கடந்து கொண்டிருப்பார். எனக்கு படபடவென்று வரும்.. வயது 84 இவர் சரியாக போனாலும் திமிராக எதிரே ஓட்டிக் கொண்டு வருபவர்களும், குடித்து விட்டு வருபவர்களும் ஒழுங்காக வரவேண்டுமே!
ஒருநாள் இனி சைக்கிள் ஓட்ட வேண்டாமென்று மிகப்பெரிய தகராறு. சில நாட்கள் எடுக்கவில்லை. பிறகு மீண்டும் மிதிவண்டி பயணம். கோபத்தோடு நான் கடிந்து கொள்ள அமைதியாக நின்று கொண்டிருந்தார். எனக்கு ஒரு மாதிரியாக அவ்விடத்தை விட்டு நகரும் போது “மிதிவண்டி ஒட்றத நிறுத்துனன்னா நிரந்தரமா படுத்துக்குவேன்… அதுதான் எனக்கு உடற்பயிற்சி” என்றார். நான் எதுவும் பேசவில்லை. என் முகபாவனை அவருக்கு சம்மதம் கொடுத்திருக்கும் என்பதை உறுதியாக எடுத்துக் கொண்டு பயணத் தைத் தொடர்ந்தார்.

எனது மனைவி மல்லிகா ஐயாவை அன்போடும் பத்திரமாகவும் பார்த்துக் கொண்டதை என்னால மறக்கவே முடி யாது. அளவு கடந்த நெகிழ் வோடு அவளுக்கு நன்றி கூறு கிறேன். சமைத்து வைத்து “தாத்தா எவ்வளவு வேனா லும் சாப்பிடுங்க” என்பாள். நாங்கள் இருவரும் ஒரு வரை ஒருவர் விரும்புகிற காலத்திலேயே அவரை தாத்தா என்றுதான் அழைப்பாள். எங்கள் திருமணம் நடந்த தும் ”மாமனார்” என்கிற அடிப்படையில் “மாமா” என்றழைக்க சிரித்தபடியே “நீ தாத்தான்னே கூப்பிடு.. அதான் எனக்குப் பிடிக்கும் என்றதினால் அப்படியே அழைக்கலானாள், அவருக்கு பல் இல்லாத தினாலும் ’இட்லி’ மிகவும் பிடித்ததினாலும் ஃபிரிட்ஜ் முழுக்க இட்லி மாவு அரைத்து வைத்துவிடுவாள். சில நேரங்களில் நான்கைந்து முறைகூட அவரே இட்லி சுட்டுச் சாப்பிடுவார்.
பூங்காவுக்கு பார்சல் கட்டிச் செல்வார். கேட் டால் ”பெறாக்கு பாத்துக் கிட்டே மாலையில சாப் பிடுவேன்” என்பார். ஆனால் காரணம் அதுவல்ல என்பது எங்கள் எல்லோ ருக்கும் தெரியும். தியாகு ஐயா அலுவலகம் எங்கள் தெருவிற்கு பக்கத்து தெரு வில் இருந்தது.

ஒரு நாள் இரு கால் களையும் இழந்த ஈழத்து போராளி சகோதரர் நாங் கள் தங்கியிருந்த முதல் மாடிக்கு தவழ்ந்தபடி மேலேறி வந்து தான் ஈழத்திற்கு செல்வதாகவும் அதற்கு முன்பு ஐயாவையும் மல்லியையும் பார்த்து நன்றி சொல்ல வேண்டு மென்றும் கூறினார். ஐயாவையும் என்னையும் பார்ப்பது சரி மல்லிக்கு எதற்கு நன்றி என்பது புரியவில்லை.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தியாகு ஐயா அலுவலகத்தில் தங்கியிருந்தேன். இத்தனை ஆண்டுகளில் நான் பல்விலக்கி தயாராக இருப்பேன். மிகச்சரியாக எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் வடமலை ஐயா காலை சிற்றுண்டி எடுத்து வந்து தந்துருவார். ஈழத்திற்கு போகும் நான் திரும்பி வருவேனா மாட்டேனா என்று தெரியாது. அதற்கு முன் உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்ல வந்தேன் என்றார். உண்மையில் அது பெரு நெகிழ்வாக இருந்தது!

ஐயா இருந்தவரை இட்லி மாவு குறைவதும் இட்லிகள் வெளியேறுவதுமாக இருந்தது நடப்பதனைத்தையும் மல்லி புன்னகையோடு பார்த்து கொண்டேயிருந்தாள். வீட்டில் தண்ணீரை திறந்துவிட்டு கீழ் வீட்டிற்கு தண்ணீர் இல்லாமல் செய்துவிடுவார். மின் விசிறி, விளக்குகளை போட்டுவிட்டு போய்விடுவார். எனக்கு கோவம் வரும். அவள் பாய்ந்து வந்து தடுப்பாள். நான் பார்த்து கொள்கிறேன் என சமாதானப் படுத்துவாள். அவரு சந்தோஷமா நோய் நொடியில்லாம இருந்தா அதுவே போதும் மாமா என்பாள். இன்றும் அவரின் அறையை கடந்து சமையலறைக்கு போகும் போதெல்லாம் அவளது கண்கள் கசிந்தபடியே இருக்கிறது.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இனம் காக்கும் அரணாக, ஒரு அரசியல் அமைப்பாக நாங்கள் மாறும் செய்தி அவருக்கு தெரிந்திருந்தது. ஆரம்பிக்கும் தேதியினை என்னைத்தவிர தம்பிகளிடம் அவர் கேட்டுக்கொண்டேயிருந்தார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அவர் என்னுடைய பேட்டிகள், போராட்டச் செய்திகள், ஐநாவில் பேசியவைகள் என அனைத்தையும் நூற்றுக் கணக் கான நகல்கள் எடுத்து பார்க்குமிடமெல்லாம் தெரிந்தவர், தெரியாதவர், இயக்கத் தோழர்கள் என கொடுப்பதிலும் அதனை அவர்கள் படித்து விட்டு பாராட்டுவதை உள்வாங்குவதில் பெருமிதம் அடைவதுமாக நாட்களைக் கடந்து கொண்டிருந்தார்.
நாள் கிழமைகளில் ஊருக்கு சென்றாலும் பைகள் நிறைய கட்டுக்கட்டாக என்னைப் பற்றிய தாள்கள்.

ஊருலிருந்து அலைபேசி அழைப்புகள் வந்தாலே தெரிந்துவிடும், இவர் என்னென்ன ஊர்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று. வீட்டில் இருக்கும்போது பல நாட்கள் பேசிக் கொள்வதில்லை. நடு கூடத்தில் நான் உட்காந்திருக்கும் போது அவரின் அறையிலிருந்து வெளி கிளம்புவார் அப்போது கனிவான ஒரு பார்வை அவ்வளவுதான்!

எனக்கு வரும் கடிதங்களையும், இதழ்களையும் முதலில் பார்த்து விடுவார். சிலது தாமதமாகத்தான் என் கைக்கு வரும். நான் ஊருக்குச் சென்று விட்டாலோ, வெளிநாடு போய் விட்டாலோ எனது மகளிடமோ, மகனிடமோ மறுநாளே கேட்பாராம். “கௌதமன் வெளிநாடு போயிட்டானா? எப்ப வருவான்” என்று. இப்பொழு தெல்லாம் கனவாகி அவரின் அறையிலிருந்து கடந்து போகும் போது ஒரு நொடியில் பார்ப்பாரே அந்த நேசப்பார்வை.. அது ஒரே ஒரு முறை ஒரு தரிசனத்தைப்போல மீண்டும் கிடைக்காதா? என்று மனம் கலங்கி ஏங்குகிறது. என்ன செய்வது காலம் என்னோடு இருக்க குடுத்து வைத்தது அவ்வளவுதான்.

எப்பொழுதும் ஊருக்கு போகும் முன் தனது சைக்கிளை பத்திரமாக பூட்டி சாவியைத் தன்னிடம் வைத்துக்கொள்ளவார். அதே போன்று அவருக்கு தந்த வீட்டு சாவியையும் அவரிடமே வைத்துக்கொள்வார். ஆனால் நாங்கள் இல்லாத போது இந்த முறை ஊருக்குப் புறப்பட்டவர் வீட்டுச்சாவியினைக் கீழ்வீட்டுக்காரர்களிடம் தந்து விட்டு சென்றது ஏன் என்று தெரியவில்லை? மல்லி சொன்னபோதே எனக்குக் காரணமில்லாமல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதே போன்று பயந்தபடியே சூழலியல் செயல் பாட்டாளர் ரமேஷ் கருப்பையா எனக்கு அலைபேசியில் வந்து ஐயாவுக்கு ஊரில் விபத்து ஏற்பட்டுவிட்டது என்றதும் உலகமே ஒருமுறை இருண்டு மீண்டது.

திருச்சியில் பார்த்து, பின்பு பாண்டி ஜிப்மரில் சேர்த்தோம். உடனே அறுவை சிகிச்சை செய்தால் எழுபத்தைந்து சதவிகிதம் ஆபத்து உண்டு. இப்படியே இருந்தால் சில நாட்கள் உயிர் வாழலாம். ஆபத்து உறுதி. இனி பேசவும், நினைவு திரும்பவும் வாய்ப்பில்லை என்றார்கள். சில நாட்களாவது அருகிலிருந்து பார்க்கிறோம். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று உறுதியான முடிவினை எடுத்தோம்.

சுய நினைவில்லாத போதும் கால்மேல் கால் போட்டுத் தூங்கும் அவனின் நிலை சில நம்பிக்கைகளை வரவழைத்தது. வாய் திறந்து அவர் ஏதோ பேசுகிறார் என லெனினும் அவரின் நண்பன் குமாரும் சொல்ல வறண்ட பாலை வனத்தில் கருகும் நிலையிலிருந்த செடி உயிர் பெறுவதைப்போல ஒரு சிலிர்ப்பு!
கஜா புயல் கோரத்தாண்டவம். வேதாரண்யம், அதிராம்பட்டினம், நெடுவாசல் உள்ளிட்ட பணிரெண்டு மாவட்டங்கள் சிதைந்த செய்தி நெஞ்சினை அறுக்க திருவாரூர் நோக்கிய பயணம். பாண்டிக்கு சென்று ஐயாவை பார்த்துவிட்டு போவது எனத் திட்டம். கட்சி தொடங்குவதாக நான் கொடுத்த பேட்டி எனது வண்ணப் படங்களோடு தமிழ் இந்துவின் “காமதேனு” இதழில் வந்திருக்க அதனை அவரிடம் காட்ட வாங்கிப் பார்த்தவர் புன்னகையோடு நெஞ்சில் அணைத்துக் கொண்டாராம். விரைந்து சென்று அவரை பார்க்கிறேன்.

என்னைக் கண்டதும் முகம் மலர்கிறது. சுகுமார் குனிந்து கேட்கிறான் “யார்னு சொல்லுங்க” அவரின் உதடு மெதுவாக புரிந்து ” கௌதமன்” என்கிறார். அவன் கேட்க கேட்க மூன்று முறை எனது பெயரை சொல்கிறார்.
நெஞ்சில் என்னவோ ஒரு இனம் புரியாத நெகிழ்வு. இன்னொரு பக்கம் பெரும் துயர், கஜா புயல் பாதிப்பு, நான்கு மாவட்டங்களை இரண்டு நாட்கள் சுற்றுகிறோம். முதன் முதலில் வெளியார்கள் நாங்கள்தான் உள்நுழைகிறோம். வீடில்லாமல், சோறில்லாமல், உடையில்லாமல் அகதிகளைப் போல கிடக்கும் நம் மக்களின் துயரம் மேலும் ரணமாக்குகிறது. உடனே இதனை உலகுக்கும் ஊடகத்திற்கும் சொல்வதற்கு 20.11.2018 அன்று மீண்டும் தலைநகரத்தை நோக்கியப் பயணம். வரும் வழியில் அதிகாலை 3 மணிக்கு ஜிப்மரில் ஐயாவைச் சந்திக்க போகிறோம்.

இந்த முறை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். சுகுமார் தட்டி எழுப்ப கண் விழிக்கிறார். நான் “அண்ணா… அண்ணா…” என்கிறேன். “யார் வந்திருக்கா” என்கிறான். சோர்வோடு கண் விழித்து ”கௌதமன்..கௌதமன்…” என மூன்று முறை சொல்கிறார். ஏனோ எனக்கு பயம் தட்டுகிறது. பெரும் சோர்வு. தூக்க கலக்கம் அப்படித்தான் இருக்கும் என்று லெனின் சொல்கிறான்.

சென்னை வந்து சன் தொலைக்காட்சியில் கஜா புயல் கோரத்தாண்டவத்தைப் பற்றி நேரலையில் இரவு 8 மணிக்கு பேசிக்கொண்டிருக்கிறேன். பேசுவதற்கு இடையூறாக இருக்குமென்று இரண்டு அலைபேசிகளையும் அணைத்து திருப்பியிருந்ததால் எதுவுமே தெரியவில்லை. ஒன்பது மணிக்கு நிகழ்வு முடிந்ததும் எனது மகள் பரஞ்சோதி அழுதபடியே “தாத்தா செத்துட்டாருப்பா ஒடனே வாங்கப்பா” எனக் கதறவே உடைந்து சுக்குநூறானேன். என்ன செய்வது இருந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகளை கடக்கும் திறன் அவரிடமிருந்தது பொறுக்க முடியாமல் காலம் இயற்கையோடு அழைத்துக்கொண்டது.

அவர் வாழ்ந்த வாழ்க்கையினை நினைத்துப்பார்க்கிறேன். அசாத் தியமான வாழ்க்கை! எந்த ஒரு இடத்திலும் சமரசமில்லாத தலைவணங்காத தமிழ்த் தேசிய போராட்டம். ஒரு நொடியேனும் வீட்டைப் பற்றி கவலைப் படாமல் தான் வாழ்ந்த காலம் முழுக்க தமிழினம், தமிழ்மொழி, தமிழர் வளம், தமிழ்நாடு என்பதை பற்றி சிந்தித்திருக்கிறார். போராடி யிருக்கிறார் வாழ்ந்திருக்கிறார். மறைந்துவிட்டார்..!

1980 என நினைக்கிறேன் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகாலம் மழை இல்லை. பெரும் பஞ்சம். எங்கள் பகுதியில் தலைவிரி கோலத்தில் மக்கள் சோற்றுக்கு ஆளாய் பறக்கிறார்கள். எங்களின் மானாவாரி நிலத்தில் ஏதோ ஒரு புதிய வகை சோளம் போட்டு அதனைச் சாப்பிட்டு குடும்பம் முழுக்க விஷக்காய்ச்சல். அதிலிருந்து மீளவே பெரும்பாடாக ஆகிவிட்டது. முடிந்தவரை கடன் வாங்கியாகி விட்டது. யாரும் யாரிடமும் கடனும் கொடுக்கவோ வாங்கவோ இயலாத நிலை.

கிணறு வற்றிவிட்டது. மண்தரை முறுக்குபோல் காய்ந்து கிடக்கிறது. “பல்ல கெஞ்சி” யாரிடமாவது கொஞ்சம் கம்பு அல்லது சோளம் வாங்கி வந்தால் உண்டு. அதுவும் கிடைக்காத ஒரு நாள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்காந்திருக்கிறோம். ஏதோ தற்செயலாக எழுந்து நான் கிணற்றடிக்கு போகிறேன்.
வயிறு ஒட்டிய எங்களின் உடலைப் போல அந்த பாறை கிணறும் வற்றி நீரில்லாமல் ஈரமில்லாத அடிப்பகுதியில் ஒரு வெள்ளரிச் செடி ஒடிக்கிடப்பது தெரிந்தது. இன்னும் எட்டிப்பார்க்கிறேன் கொடிகள் கிணற்றோரத்தில் படர்ந்தும் கிடக்கிறது. உயிரைத் திரட்டி கண்களைக் கூர்மையாக்கி பார்க்க நாலைந்து வெள்ளரி பிஞ்சுகள் பசுமைதட்டி கிடப்பது தெரிகிறது. “அண்ணா” என கத்துகிறேன். அவர் எழுந்துவர கைகாட்டுகிறேன். இருவரும் படிகள் இருக்கும் வரை இறங்கி விடுகிறோம். அதன்பின்பு ஐயா மட்டும் இறங்கி பிஞ்சுகளை பறிக்கிறார். குடும்பத்திலுள்ள அத்தனைபேரும் ஆளுக்கொன்றாக பிரித்து கடித்துப் பசியாற்றுகிறோம்.

பிஞ்சுதானே எவ்வளவு நேரம் பசி தாங்கும். சிலமணி நேரங்களுக்கு பிறகு அம்மாவை நச்சரித்து பசியின் வலியால் கண் கலங்குகிறேன். அம்மா தள்ளிவிட்டு “ஒப்பனைபோயி சோறு கேளு” என்கிறார். ஐயா சுட்டெரித்துக் கொண்டிருக்கும் கொல்லையில் இலையுதிர்ந்த ஒரு மரநிழலில் உட்கார்திருக்கிறார்.

நான் அருகில் செல்ல செல்ல சிறிய மண் கட்டிகளை எடுத்து அவரருகில் கிடக்கும் மண் முட்டுகளில் அடித்து அடித்து உடைத்துக் கொண்டிருக்கிறார். அருகில் சென்று வயிற்றை பிடித்துக் கொண்டு கண்ணீருடன் உட்காருகிறேன். “பசிக்குதுண்ணா” என குமுறுகிறேன்.

இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர் தான் மடியில் கட்டியிருந்த அவருக்கான வெள்ளரிப் பிஞ்சினை எடுத்து நீட்டுகிறார். எனக்கு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வாங்கி அவசர அவசரமாக கடித்து விழுங்குகிறேன். புன்முறுவலோடு என்னைப் பார்த்தவர் மீண்டும் மண்கட்டிகளை எடுத்து மண் முட்டுகளை நோக்கி அடித்துக் கொண்டிருந்தார். இது நடந்து முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது.

மண்கட்டிகளால் மண்மூட்டினை அடித்துக் கொண்டிருக்கும் போது என்ன நினைத்திருப்பார். இந்த மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறதே. நம்மால் இவர்களின் தலை நிமிர என்ன செய்ய முடியும்? இந்த மக்கள் எப்பொழுது நிம்மதியாக வாழ்வார்கள்? என்றைக்கு விடியல் பிறக்கும். விவசாயிகள் என்றாவது ஒருநாள் நிம்மதியாக வாழ்வார்களா?

மண்ணோடு சண்டையிட்டார். தன் காலம் முழுக்க தாய் மண்ணுக்காக சண்டையிட்டார். இன்று அதே மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு எளிய போராளிகள் இறுதிவரை உறுதி யோடு போராடி தாம் கண்ட கனவு நிறைவேறாமல் அந்த மண்ணில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓர்மையுடன் உறுதியெடுக்கிறேன்.

தமிழ் மண்ணின் உரிமைக்காக, தமிழினத்தின் விடியலுக்காக உலகம் முழுக்க ஒடினாலும் உங்களுக்குப் பிறந்த பிள்ளையாக இந்த தொன்ம இனத்தின் விடியலை பார்க்காமல் ஓயமாட்டேன். அறமிக்க இளைய தலைமுறையினரோடு இணைந்து நின்று சனநாயக புரட்சியோடு, எம் தமிழினத்தை தலைநிமிர செய்யாமல் விடமாட்டேன்.

தாயே! தந்தையே!
எல்லாம் முடிந்து எல்லாம் நிறைந்து
உங்களின் பக்கத்தில்தான் உறங்க வருவேன். அதுவரை விழித்திருப்பேன்.
எதிர்க்கத் துணிந்தால் தமிழ்மீளும்!
எதற்கும் துணிந்தால் தமிழ்ஆளும்!


பேரன்போடும் பெரும் நம்பிக்கையோடும்,
வ.கௌதமன்.


கட்டுரை சேகரிப்பு:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.


பட உதவி:
இணையம்

Leave a Reply