Home>>தமிழ்நாடு>>பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு
தமிழ்நாடுவரலாறு

பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு

பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டு வருவதை தொல்காப்பியம் பரிபாடல் முதல் பல சங்க இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

இறைவன் ஒளி வடிவினன் என்பதை உணர்ந்த நம் முன்னோர் முருகனின் அடையாளமான கார்த்திகை விண்மீன் கூட்டம் (ஆஅல்) முழுமதியோடு ஒளிரும் கார்த்திகைத் திருநாளை அங்கி அளக்கர அளகு அறுவாய் ஆரல் எரிநாள் என்றெல்லாம் பெயர்சூட்டிக் கொண்டாடி வந்துள்ளனர்.

குளிர்காலம் தொடங்கும் வேளையில் பரவும் நோய்க்காரணிகளை விளக்கேற்றியும் சொக்கப்பனை எரித்தும் அழிப்பதும் அச்சாம்பலை வயல்வெளியில் தூவி உரமாக்குவதும் வாழ்வியல் காரணம்.

வெளியூர் சென்ற தலைவன் பழவிறல் மூதூர் (திருவண்ணாமலை) மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு பெருவிழாவின்போது வந்துவிடுவான் என தலைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுகிறாள்.

உழவுத் தொழில் முடிய மழைபொழிந்து ஓய்ந்த வெளி கருமேகம் சூழாத தெளிவான நிலையில் ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் முழு மதியானது இருளை நீக்கி வானில் ஒளிர்கிறது.

இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் தோரணங்களாக பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.

பா


மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்
மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர வருகதில் அம்ம

அகநானூறு


உச்சியில் ஏற்றப்படும் ஒளியை உள்ளுக்குள் காண வேண்டும் என்பதன் குறியீடே இவ்விழா. தமிழர் தொன்மையின் தொடர்ச்சியான இவ்விழவை அனைவரும் எவ்வேறுபாடுமன்றி விளக்கேற்றி கொண்டாட வேண்டும்.

அனைவருக்கும் தொல்குடி விழாவான விளக்கீடு நல்வாழ்த்து.


எழுத்து:
அருள் ராஜா பிள்ளை
(Arul Raja Pillai)


தகவல் சேகரிப்பு:
மருத்துவர் திரு. பாரதிசெல்வன்,
மன்னார்குடி.


பட உதவி: இணையம்

Leave a Reply