Home>>இந்தியா>>3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
திரு. தி.வேல்முருகன்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடிய விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் வளங்களை கார்ப்பரேட் நிறுனங்கள் கொள்ளையடிக்கவே, வேளாண் சட்டங்கள் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டன. விவசாயிகளிடம் எந்த கருத்துகளும் கேட்காமல் தான் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.

கார்ப்பரேட் விவசாயத்திற்கு வசதி செய்து தருவதற்காகவும், நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்திடவும் இந்தச் சட்டம் வழி வகுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு, பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேச மாநில உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் ஒன்று திரண்டனர்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, சாதி, மதத்தால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டது. அத்திட்டம் பலனளிக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஒன்றிய அரசு, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை, தீவிரவாதிகள் என்றும் வெளிநாட்டு கைக்கூலிகள் என்றும் கொச்சைப்படுத்தியது.

இன்னொரு படி மேலே சென்று, டெல்லியில் அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை ஏவி வன்முறையை அரங்கேற்றியது மோடி அரசு. இந்த வன்முறையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமான விவசாயிகள் ஊனமடைந்தனர்.

பின்னர், 3 வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி வந்த மோடி அரசுக்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. மக்கள் கொடுத்த பதிலடியால் மோடி அரசு அதிர்ச்சியடைந்தது.

இச்சூழலில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

அதே நேரத்தில், நாட்டு மக்கள் நலன் கருதியோ, விவசாயிகளின் போராட்டத்தின் எழுச்சி கருதியோ, ஒன்றிய அரசு இத்தகைய முடிவுக்கு வரவில்லை.

மாறாக, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்களை வைத்து தான், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அதே வேளையில், மோடி அரசின் நரி தந்திரத்தையும் நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வருகின்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால், வேளாண் சட்டங்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான அபாயம் உள்ளது.

எனவே, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவை, அம்மாநில மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான ஒருமித்த கருத்துடைய மாநிலங்களை ஒன்று திரட்டி மாபெரும் பிரச்சாரத்தை, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் 400க்கும் மேற்பட்டோர், தங்கள் உயிரை பணயம் வைத்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டும் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply