Home>>செய்திகள்>>மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி மறியல் போராட்டம்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி மறியல் போராட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு மையங்களில் மறியல் போராட்டம் நடத்த ஏற்ப்பாடுகள் தீவிரம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் தலைமையில் இன்று (20.11.21) காலை வடமதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு..

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி மறியல் போராட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை தெலுங்கானா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப்போல குறைந்தபட்சம் 3000ஆகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என TARATDAC சங்கத்தின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னாள் ஆட்சிக்கு வந்த தி.மு.க. தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என கூறியிருந்தார்கள்.

ஆனால், தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் இன்றுவரை உதவித்தொகையை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் விஷம்போல் ஏறுகின்ற விலைவாசியை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே, தமிழக அரசு டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டாவது உடனடியாக உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30.11.21 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு மையங்களில் 3000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தியும் இம்மறியல் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மறியல் போராட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் தலைமை வகிப்பவர்கள் பட்டியல்…

ஆத்தூர் தாலுகா அலுவலகம் – செல்வநாயகம் மாவட்ட தலைவர்
வடமதுரை பேருந்து நிலையம் – பகத்சிங் மாவட்ட செயலாளர்
ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் – காளீஸ்வரி – மாவட்ட பொருளாளர்
பழனி சார் ஆட்சியர் அலுவலகம் – M.வெங்கடேஷ்
ரெட்டியார்சத்திரம் பேருந்து நிலையம் – கந்தசாமி ஒன்றிய செயலாளர்
திண்டுக்கல் சார் ஆட்சியர் அலுவலகம் – ஸ்டாலின் திண்டுக்கல் நகர செயலாளர்
சாணார்பட்டி பேருந்து நிலையம் – சின்ராஜ் ஒன்றிய செயலாளர்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் – சசிகுமார் ஒன்றிய செயலாளர்
P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253


செய்தி உதவி:
மாற்றுத்திறனாளிகளின் சங்கமம்

Leave a Reply