காவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சாலை வசதி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உடனடியாக ஒன்றிய அரசு விடுவித்திட வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினர் திரு. செல்வராஜ் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
மக்களவையில் சுழியம் நேரத்தில் (Zero Hours) நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கனமழையாகப் பொழிந்ததால் எனது தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மட்டுமல்லாமல் மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரிப்படுகை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதோடு குடியிருப்பு வீடுகள், சாலைகளும் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், குடியிருப்பு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கிடவும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கும் தமிழக அரசு கோரியுள்ள நிதியினை தேசிய பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உடனடியாக விடுவித்திட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.