06.12.2021 அன்று மக்களவையில், கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
“பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை இந்த அவையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
சென்னையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில், கடந்த நவம்பர் 28-ம் தேதி நடைபெற்ற நடைபெற்ற 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறவில்லை. இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பாடாமல் தவிர்க்கப்பட்டது வருத்தமளிக்கக்கூடிய, கண்டனத்திற்குரிய விஷயமாகும்.
தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்த் தாய் வாழ்த்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் நிகழ்வின் துவக்கப் பாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. கூடவே, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளிலும் மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆக்கப்பட்டது.
ஆனால் ஐஐடி நிறுவனத்தில் கடந்த நவம்பர் 28-ம் தேதியன்று நடைபெற்ற 58-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் இந்த விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. அதேசமயம் சமசுகிருதப் பாடல் பாடப்பட்டது.
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. அனைத்து மொழிகளையும் விரும்புகிறோம். ஆனால், தாய்த் தமிழைத் தொழுகின்றோம். இங்கே நான் வலியுறுத்துவது என்னவென்றால், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதுதான். எனவே, சென்னை ஐஐடி நிறுவனத்தில் இனி நடைபெறும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியம் இடம்பெற ஆவன செய்யவேண்டும். அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும்.
நன்றி.”
—
தமிழச்சி தங்கபாண்டியன்,
மக்களவை உறுப்பினர்.