Home>>செய்திகள்>>தமிழர் திருநாள் : சமூகநீதி நிலைக்கட்டும்!
செய்திகள்தமிழ்நாடு

தமிழர் திருநாள் : சமூகநீதி நிலைக்கட்டும்!

தமிழ்நாட்டிலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும், தமிழர் திருநாளான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை – அறத்தை – முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர் திருநாள் என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே.

1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள். யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆராய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள்.

இந்தத் திருவள்ளளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை 1970-களில், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.

அதே போன்று, 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாகக் கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.

அதன்படி, சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மகிழ்வோடு இன்று கொண்டாடி வருகின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அமைந்துள்ளது.

முக்கியமாக, தமிழர்களின் உணர்வுகளையும், ஜனநாயக கோரிக்கைகளையும் புரிந்து, அதனை நிறைவேற்றுவதோடு, சமூகநீதியை நிலைநாட்டும் நல்லரசு தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

திமுக தலைமையிலான அரசில் பங்கு வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, பல்வேறு சிறப்பு திட்டங்களை பெற வலியுறுத்தவதோடு, விவசாயிகளுக்கு அரணாக நிற்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply