Home>>இந்தியா>>சிறப்பு முகாம்களில் வாடும் ஈழ இளைஞர்களை விடுதலை செய்க!
ஐயா. பழ. நெடுமாறன்
இந்தியாஈழம்உலகம்காவல்துறைசிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

சிறப்பு முகாம்களில் வாடும் ஈழ இளைஞர்களை விடுதலை செய்க!

தமிழ்நாடு முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.


இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழர் இளைஞர்கள் பலரை விடுதலைப்புலிகள் என குற்றம் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே வைத்திருப்பதைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஒரு இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.
குற்றம் இழைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் சிறைகளில் அடைக்கப்படுவதும், தண்டனைக் காலம் முடிந்த பிறகு விடுதலை செய்யப்படுவதும் சட்ட ரீதியாக நடைபெறுவதாகும்.

ஆனால், ஈழத் தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுவதும் சிறைகளுக்குப் பதில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு ஆண்டுக் கணக்கில் வாடுவதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசால் தடைவிதிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அதற்கென அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி அந்தத் தடையை மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தடையை நீட்டிப்பதற்காக ஈழத் தமிழ் இளைஞர்களை பொய் வழக்குகளின் கீழ் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் வைப்பதும், சிறப்பு நீதிமன்றம் இதையே காரணமாகக் காட்டி தடையை நீட்டிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது..
ஒன்றிய அரசின் தூண்டுதலே இதற்குக் காரணமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்து விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்துவிட்டது.
ஐரோப்பிய நாடுகளில் இந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் மட்டுமே இந்தத் தடை இன்னமும் நீடிக்கிறது.

இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைக் காட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழ் இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ள அநீதிக்கு முற்றப்புள்ளி வைக்க முன்வருமாறும், சிறப்பு முகாம்களில் பல்லாண்டு காலமாக அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறும் தமிழ்நாடு முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.


செய்தி உதவி:
திரு. கலைச்செல்வம் சண்முகம்,
திருவாரூர்.

Leave a Reply