தமுஎகச தலைவர்களில் ஒருவரும்
சிறந்த திரைக்கலைஞருமான
தோழர் வ. இராமு அவர்களின் மறைவிற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட நடிகருமான தோழர் வ. இராமு அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் வ. இராமு சென்னையில் பள்ளியில் படிக்கும் போதே இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பல போராட்டங்களை நடத்தி பொது வாழ்க்கையைத் தொடங்கியவர். தன் பெற்றோரின் ஒப்புதலுடன் சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் பண்பாட்டு ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு அதன் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். சென்னை கலைக்குழுவில் இணைந்து தன் துடிப்பான நடிப்பின் மூலம் வீதி நாடகக்கலைஞராக இடதுசாரி அரசியல் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றவர். சைதாப்பேட்டை ‘கலை இரவு’ நிகழ்வின் அமைப்பாளர்களில் முக்கியமானவர். அதன் வீச்சு தமிழ்நாடெங்கும் கலை இரவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுப்புற கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு காரணமாக இருந்ததோடு நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை சங்கமத்தை முன் நின்று நடத்தியவர்.
இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி ‘பூ ராமு’வாகியவர் பரியேறும் பெருமாள், கர்ணன், நெடுநல்வாடை உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் கற்றுக் கொண்ட எளிய மக்கள் மீதான நேசத்தையும் சமூக கொடுமைகளுக்கு எதிரான போர்க்குணத்தையும் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தன் தனித்துவமிக்க குணாதிசயங்களால் அருகிலிருப்பவர்களை காந்தம் போல இழுத்து வைத்துக் கொள்பவர். அவரது மறைவு தமுஎகசவிற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது செவ்வஞ்சலியை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தமுஎகச தோழர்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.