இலவசங்கள் பற்றிய விவாதங்கள் உச்சநீதிமன்றம், பிரதம மந்திரி, பிடிஆரின் எதிர்வினை என்கிற முக்கோணத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதில் பிடிஆர் தனது கொள்கையாக எதை முன்வைத்தார்? எல்லோருக்கும் எல்லாமும் பெற என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல என்று நிதி மந்திரியாக பதவி ஏற்றவுடன் சொன்னார். தனக்கு தரவுகள் தேவைப்படுகிறது. அதற்கு கால அவகாசம் தேவை என்று கூறினார். அதற்கு முன்னரே ஒரு ஓட்டை வெள்ளை அறிக்கை வெளியிட்டது. தமிழகம் கடனில் தத்தளிக்கிறது அதற்கு மோசமான அதிமுக நிர்வாக முறைகேடு மற்றும் ஊழல் என்றார்கள்.
மகளிருக்கான உரிமைத் தொகை அதுவும் கொரோனா பாதிப்பு காரணமாக என்று அறிவித்துவிட்டு பின் வாங்கினர். இதில் இப்போது விசேசம் என்னவென்றால் மேலும் 90,000 கோடி நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு பெறுகிறது. அதனடிப்படையில் திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
இலவசங்களை திமுக ஆதரிப்பது போல் நடிக்கிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டி தவிர்த்த இலவசங்கள் திமுக திட்டங்கள் அல்ல. ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி இலவச தொலைக்காட்சி மட்டும் தரப்பட்டுள்ளது. அதற்கு ஒரு விளக்கம் தந்தார்கள். பெண் விடுதலை என்கிற தொலைநோக்கில் தொலைக்காட்சிப் பெட்டிகள் தரப்பட்டுள்ளது என்றார்கள்.
உண்மையில் அதிமுக ஊதாரித்தனமாக செலவு செய்ததாக பிரச்சாரம் செய்ய இலவசங்கள் தான் காரணம் என்று பலர் பேசினர். உரிமைத் தொகை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது தவிர நடைமுறையில் வரவில்லை.
மாநிலங்களின் அதிகாரம் அல்லது கொள்கை முடிவுகள் பற்றிய கேள்வியாக இதை பிடிஆர் திசை திருப்பும் வேலையைச் செய்தார். அப்படி மாநில தன்னாட்சி என்றால் உள்ளாட்சி களின் தன்னாட்சி குறித்து இதுவரை மாநிலம் ஒரு ஆணியும் பிடுங்கவில்லை. அதிகாரப் பரவலை தடுப்பது சென்னையில் அதிகாரத்தைக் குவிப்பது என்று தான் இதுவரை செயல்பாடுகள் உள்ளது.
ஆடுமாடு இலவசம், மடிக்கணினி, தாய் சேய் பெட்டகம், தாலிக்குத் தங்கம் சைக்கிள் போன்றவை நடைமுறையில் நிறுத்தப்பட்டுவிட்டன. மகளிர் பேருந்து இலவசம் மட்டுமே இப்போது உள்ளது. சில வழித் தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது.
ரூபாய்க்கு மூன்று படி அரிசி வரவில்லை என்பதால் யாரும் திமுகவை கைவிடவில்லை. ஆனால் இப்போது வாங்கும் சக்தி இழந்த மக்கள் பற்றிய விவாதமாக இது இருக்க வேண்டும். பாஜகவை கொஞ்சி விளையாடும் இந்த விளையாட்டு நீண்ட காலப் பயன் அளிக்காது.
—
திரு. இளங்கோ கல்லாணை.