Home>>அரசியல்>>பல்வேறு மாநிலங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனைகள்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுமதம்

பல்வேறு மாநிலங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனைகள்.

பல்வேறு மாநிலங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி, அந்த இயக்கத்தையும், தோழமை இயக்கங்களையும் சார்ந்த பல ஆளுமைகளைக் கைது செய்து ஓர் அராஜக நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டிருக்கிறது.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களாம், ஆயுதப்பயிற்சி அளித்தார்களாம், மூளைச்சலவை செய்தார்களாம். இன்னும் என்னென்னவோ கற்பனைக் கதைகளை, குற்றச்சாட்டுக்களை ஒன்றிய அரசு எந்த நிரூபணங்களையும் வழங்காது முன்வைக்கிறது.

ஒன்றிய அரசு சொல்வது உண்மை என்றால், இந்திய மக்களிடம் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளலாமே? முறைப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாமே? பீகாரில் தொடங்கி தமிழ்நாடு வரை வெறுமனே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதேன்?

உண்மையில் இசுலாமிய இயக்கங்களை அழிப்பதற்கும், அமைதியாக அடங்கிப்போகச் செய்வதற்குமான தந்திரச் செயல்தான் இந்த நடவடிக்கை. எங்கோ நடக்கிற இழவு என்று நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால், இதே மாதிரி நடவடிக்கைகள் நாளை பிறர் மீதும் பாயும்.

என்.ஐ. ஏ. எனும் ‘சூப்பர் போலீஸ்’ மாநில காவல்துறையின் அதிகாரத்தை மீறி அராஜகம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. மாநில அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூட இனி மாநிலங்களுக்குக் கிடையாது எனும் ஆபத்தான நிலை உருவாகும்.

இசுலாமிய இயக்கங்கள், பிற சிறுபான்மை சமூகங்களின் இயக்கங்கள் என ஒவ்வொன்றாக குறிவைத்து அழிப்பது மாபெரும் ஆபத்தின் தொடக்கம். தலைகுனிந்து, முகம் கவிழ்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால், நம்மைத் தொந்திரவு செய்ய மாட்டார்கள் என்று யாராவது மனப்பால் குடித்தால், அவர்களை அவர்களின் இறைவனால்கூட காப்பாற்ற முடியாது என்பதுதான் உண்மை.

ஆக சனநாயக நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டங்களை, அழித்தொழிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது, கூடாது! PFI, CFI, SDPI தோழர்கள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. எதிர்ப்பாளர்கள் மீது அபாண்டமான பழிச்சொல், தேடுதல் வேட்டை, அச்சுறுத்தல், அடக்குமுறை, கைது, சிறை போன்ற அராஜக நடவடிக்கைகளை ஏவுவதை அனைவரும் உணர்ந்து, கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.


திரு. சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி.
செப். 24, 2022.

Leave a Reply