தேவர் ஒரு கருத்து முதல்வாதி. ஆன்மீகச் சிந்தனையாளர். மார்க்சியவாதிகள் தேவரை எப்படி ஏற்றுக் கொள்வது?
இது குறித்து விவாதிக்கும் முன் நம்மையே நாம் கேட்டுக் கொள்வோம். அம்பேத்கர் மட்டும் பொருள்முதல்வாதியா? அவரும் கருத்து முதல்வாதிதானே. பெளத்த சமயத்தை ஏற்றுக் கொண்ட மதவாதி தானே. அவரை எதற்காக மார்க்சியர்கள் ஏற்கிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் மார்க்சியத் தத்துவமான வரலாற்று பொருள் முதல்வாதத்தையோ, இயக்கவியல் பொருள் முதல்வாதத்தையோ ஏற்கவில்லை. மார்க்சிய அரசியல் விஞ்ஞானமான வர்க்கப் போராட்டத்தையோ, பாட்டாளி வர்க்கத் தலைமையையோ, சோசலிசப் புரட்சியையோ ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாளித்துவத்திற்கு மாற்றான சோசலிச பொருளாதாரம் குறித்த எந்த கண்ணோட்டமும் அவரிடம் இல்லை.
நடைமுறையும் இல்லை. மார்க்சியத்தை பன்றிகளின் தத்துவம் என மதிப்பீடு செய்த ஒரு முதலாளித்துவ சீர்திருத்தவாதி. அவ்வளவுதான். பின் எதற்காக மார்க்சியர்கள் அம்பேத்கரைப் போற்றுகிறார்கள்? அவர் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். சாதியத்திற்கு எதிராக போர்க் குரல் எழுப்பினார். சாதி, மதம் குறித்த விரிவான ஆய்வுகளையும், ஒரு கருத்தாக்கத்தையும் முன்வைத்தார். எனவே மார்க்சியர்கள் விமர்சனத்தோடு ஏற்கிறார்கள்.
அதே போல் தந்தைப் பெரியாரும் மார்க்சியத்தை ஏற்கவில்லை. வர்க்கப் போராட்டத்தையோ, வர்க்க அணிச்சேர்க்கையையோ ஏற்கவில்லை. முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிச பொருளாதார திட்டத்தையும் முன்வைக்கவுமில்லை. அதனடிப்படையில் இயக்கமும் கட்டவில்லை. ஆனால் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும், சாதிய, தேசிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்த ஒரு சிந்தனையாளர். சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தவர். எனவே அவரையும் விமர்சனத்தோடு மார்க்சியர்கள் ஏற்கிறார்கள்.
இந்த மரபு மார்க்சிய மூலவர்களிடமிருந்தே தொடங்குகிறது. சமூக மாற்றம் குறித்து சிந்தித்த, உழைத்த முதலாளித்துவ அறிஞர்களை மூலவர்கள் போற்றத் தவறவில்லை. லெனின் டால்ஸ்டாயை மதித்தார். பேராசான் மார்க்ஸ், ஹெகலையும், பாயர்பாக்கையும் ஏற்கிறார். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மதிப்போடு வழங்குகிறார். நினைவில் நிறுத்துங்கள். இவர்கள் யாரும் மார்க்சியர்கள் அல்லர்.
என்றாலும் இவர்கள் சமூக வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர்கள். இப்போது தேவருக்கு வருவோம்.
தேவர் ஒரு கருத்து முதல்வாதி தான். ஆன்மீகச் சிந்தனையாளர் தான். ஆனால் தேவர் இயங்கியலை ஏற்றுக் கொண்டவர். பொருள் முதல்வாதத்தை ஏற்கவில்லை.
அதே வேளை சோசலிச பொருளாதாரத்தையும், சோசலிச அரசியலையும் ஏற்றுக் கொண்டவர்.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட, லாப நோக்கங் கொண்ட, சந்தைக்கான சரக்குகளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை தேவர் ஏற்கவில்லை. இந்த உற்பத்தி முறை மக்களுக்கு சமத்துவத்தை தராது என்று நிராகரிக்கிறார். இதற்கு மாறாக சோசலிச பொருளாதார முறையை முன்வைக்கிறார். நீங்கள் 1952 பார்வர்ட் பிளாக்கின் கட்சித் திட்டத்தைப் படித்துப் பார்த்தால் இது தெளிவாகப் புரியும்.
அதே போல் அரசியல் கோட்பாடாக பாட்டாளி வர்க்கத் தலைமையையும், வர்க்க அணிச்சேர்க்கையையும் ஏற்றுக் கொள்கிறார். சோசலிசப் புரட்சிக்கான திட்டத்தை வெளியிட்டு, அதனடிப்படையில் இயக்கம் காண்கிறார்.
அவர் கட்சியின் முழுப் பெயர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் (மார்க்சிஸ்ட்) என்று எத்தனை பேருக்குத் தெரியும்?1952ல் தேவர் போட்டியிட்ட கட்சியின் பெயர் AIFB (Marxist) ஆகும். இந்திய தேர்தல் ஆணைய வெப்சைட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் தேர்தல் அறிக்கையில் தேவர் எழுதுகிறார்,” பார்வர்ட் பிளாக் கட்சிக்குப் பொதுத்தேர்தலில் அத்தனை பிரமை இல்லை. ஏனெனில் தேர்தலால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விடுவதென்பது அசாத்தியம். ஆனால், அதே சமயம் இந்தத் தேர்தலால் வயது வந்தோர் வாக்குரிமைக்கு வசதியிருப்பதால் தவறான ஆட்சியில் அவதிப்படும் மக்களுக்கு, அந்தக் கஷ்டங்களிலிருந்து விடுபட, ஒரு நெறியான நேர்மையான ஆட்சி அமைக்க, இந்தத் தேர்தல் ஒரு சரியான வசதி என்பதை பார்வர்ட் பிளாக் அசட்டை செய்து விடவில்லை. அதிக அக்கறையோடு வரவேற்கிறது”. டூமாவில் பங்கேற்பது பற்றிய லெனினின் பார்வையையும் இணைத்துப் பார்த்தால் புரியும். பூர்ஷ்வா தேர்தல் முறை, பாராளுமன்ற அரசியல் மயக்கம் தேவரிடம் இல்லை.
மேலும் எழுதுகிறார், “இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் நிர்ணயம் இந்திய மக்களையும் அவர்களது முன்னேற்ற இயக்கங்களையும் நசுக்கிப் பூர்சுவாக்களுக்கு அடிமைப்படுத்தும் சாசனமே தவிர வேறில்லை”. இதை இயற்றியது அம்பேத்கர் என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.
தேவர் எழுதுகிறார், “மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளை, மக்கள் விரும்பாத போது, அப்பிரதிநிதித்துவ உரிமைகளைப் பறித்து வெளியேற்ற மக்களுக்கு ஜனநாயக விதிப்படி உரிமை வழங்கப்படும்”. இப்படி ஒரு உறுதிமொழியை இந்த நாட்டில் எந்தக் கட்சியாவது வழங்கியதுண்டா? முதல் தேர்தலிலேயே தேவர் கொள்கை அறிக்கையிலே இதனை வெளியிடுகிறார்.
மேலும் சர்வதேச நிலைப்பாடுகளிலும் தேவரின் இடதுசாரிக் கண்ணோட்டம் தெளிவாக வெளிப்படுகிறது. தேவர் எழுதுகிறார், “நேரு சர்க்காரின் வெளிநாட்டுக் கொள்கை பலவீனமாயும், சுயமதிப்பற்றதாயும் இருக்கிறது. நடுநிலையின் பேரால் ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது அபிமானத்தோடு அவர்களின் துயரங்களைக் கலைந்து காப்பதிலேயே கவனமாயிருக்கிறது.
உலகம் இன்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டு நிற்கிறது. ஒன்று, அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு முதலிய கூட்டு வல்லரசு முகாம்.
மற்றொன்று சோவியத் ரஷ்யா. மக்களாட்சி நிலவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், புதிய சீனா, உலகின் பல பாகங்களிலுமுள்ள முன்னேற்ற இயக்கங்கள் இவைகளை கொண்ட முகாம். இந்த நிலையில் மூன்றாவது முகாமைப் பற்றி எவர் சிந்திக்கவும் பேசவும் செய்கிறார்களோ அவர்கள் உலகின் முன்னேற்ற இயக்கங்களுக்கு கேடு செய்ய கொல்லைப்புற வழியாக ஆங்கிலோ, அமெரிக்க முகாமுக்கு உதவி செய்கிறவர்கள் என்பது நிச்சயமான சங்கதி.
ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்திய முகாமுக்கு சரியான எதிர்ப்பு சக்தி நெறியும், நேர்மையும் கலந்த ஒரு உன்னதமான அமைப்பே பார்வர்ட் பிளாக்கின் திட்டம்.
இதற்கும், குறிப்பாக மனித சுதந்திரத்திற்கும் ஆங்கிலோ, அமெரிக்க சக்தி பெரிய விரோதி என்பது தீர்மானம் . எனவே நமக்கும் அவர்களுக்கும் இணைப்பு என்பது நினைக்கவொன்றாத சம்பவம். உலகின் சாமான்ய மக்களால் புகழப்படும் ரஷ்யா, புதிய சீனா முகாமின் பக்கமே நமது அனுதாபம் சார்ந்து நிற்கும் ” என்று கொள்கை அறிக்கையை வெளியிடுகிறார். இத்தனை தெளிவாக கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டதால் தான் அன்றைய இடதுசாரிகள் தேவருடனான அரசியல் செயல்பாடுகளில் இணைந்து சென்றனர்.
அதனால் தான் இன்றளவும் இடது முன்னணியில் CPM, CPI, SUCl, CPI ML(Liberation) இதனோடு AIFBம் இடது முன்னணியில் உள்ளது. இந்தத் திட்டம் ஏதோ இன்று பிஸ்வாஸ் காலத்தில் ஏற்பட்டதல்ல. தேவருடைய தலைமையில் பார்வர்ட் பிளாக் இருந்த போதே கட்சியின் திட்டமாக சோசலிசப் புரட்சியை முன்வைத்து, தெளிவான கொள்கை நிலைப்பாடுகளை கொண்டதால் தான் இன்று வரை இடது முன்னணியில் AIFB இடம்பெற்றுள்ளது.
இப்போது நாம் தொகுத்துக் கொள்வோம்.
தேவர்…
☆ சுரண்டலை, லாப வெறியை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை ஏற்கவில்லை.
☆ சோசலிசப் புரட்சியை அரசியல் திட்டமாகவும், முதலாளித்துவ சுரண்டல் முறைகளுக்கு மாற்றாக சோசலிசப் பொருளாதாரத்தையும், பாட்டாளி வர்க்க தலைமையையும் ஏற்றுக் கொண்ட ஒரு சோசலிச சிந்தனையாளர். செயற்பாட்டாளர்.
☆ பூர்ஷ்வா நாடாளுமன்ற சனநாயக நடைமுறைகளின் வரம்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்காதவர்.
☆ நடைமுறையில் இருக்கும் இந்திய அரசியலமைப்பு பூர்ஷ்வாக்களுக்கானது. இதன் மூலம் உழைக்கும் மக்கள் விடுதலை பெற முடியாது என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கிறார். சோசலிச புரட்சியின் மூலமே சமத்துவ சமூகத்தைப் படைக்க முடியும் என்று பறைசாற்றுகிறார்.
☆ சர்வதேச நிலைப்பாடுகளில் அன்றைய காலத்தைய சோசலிச முகாம்களையே ஆதரிக்கிறார்.
☆ பிரித்தானிய, அமெரிக்க ஏகாதிபத்திய அணிகளுக்கு எதிராக சோவியத் ருஷ்யா, செஞ்சீனம் மற்றும் சோசலிச நாடுகளையே ஆதரிக்கிறார்.
இந்த புரிதலின் அடிப்படையில் நாம் தேவரை மதிப்பீடு செய்ய வேண்டும். எனில் தேவரைப் பற்றிய ஒரு எதிர்மறைப் பிம்பம் எப்படி ஏற்பட்டது? யாரால் ஏற்படுத்தப்பட்டது? அதற்கான அடிப்படைகள் உள்ளனவா? என்று அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
—
திரு. மருது பாண்டியன்,
சோசலிச மையம்,
7550256060