19ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலத்தில் ஆங்கில மொழி மோகமும், தெலுங்கு இசை ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில் நாடகக் கலை மூலம் தமிழ் மொழியை மீட்டுருவாக்கப் பாடுபட்டவர் தவத்திரு.சங்கர தாஸ் சுவாமிகள் ஆவார்.
இவர் உருவாக்கிய நாடகங்கள் அனைத்தும் அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரவியது. அவற்றுள் சத்தியவான் சாவித்திரி பவளக்கொடி சரித்திரம், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம், இராம ராவண யுத்தம், மதுரை வீரன், சித்திராங்கி விலாசம் , நளதமயந்தி ஆகிய நாடகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாடகங்களாகும்.
இவர் நாடகக் கலையில் புகழ் பெற்று விளங்கியதால் நாடகக் கலையின் தந்தை என்றும், நாடகத் தலைமையாசிரியர் என்றும் அழைக்கப்பட்டார்.
1918-ஆம் ஆண்டு மதுரையில் சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் ஆசிரியரானார். இந்தக் குழுவில்தான் தமிழ்த் திரையுலகில் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஒளவை சண்முகம், பகவதி ஆகியோர் மதுரைக்கு வந்து நாடகப் பயிற்சி பெற்றனர்.
ஒளவை சண்முகம் முயற்சியால் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா 1967இல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
மதுரையில் நாடகக் குழுவை தோற்றுவித்த சங்கரதாஸ் சுவாமிகளை நினைவு கூறும் வகையில் ஒளவை சண்முகம் அவர்கள் தமது சொந்த செலவில் 1968ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் திடலின் நுழைவாயிலில் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலையை நிறுவினார்.
மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்கும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டது. அது மட்டுமல்ல: மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் தான் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை தமுக்கம் கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் நவீன முறையில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.
கட்டிட நுழைவு வாயிலிலோ அல்லது கட்டிட அரங்கத்திற்குள்ளோ சங்கரதாஸ் சுவாமிகளின் உருவப் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்த போது அங்கு எதுவுமே இல்லை.
எந்த ஒரு பழைய கட்டிடமும் இடிக்கப் பட்டு புதிதாக கட்டிடம் நிறுவப்படும் போது முன்பு என்ன பெயர் இருந்ததோ அதை வைப்பதுதான் மரபு. ஆனால் மாறாக மாநாட்டு மையம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. அண்மையில் தமுக்கம் கலையரங்கத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தமிழ் எழுத்தாளர் என்று அறியப்படும் பல ஆளுமைகள் கலந்து கொண்டும் கூட சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் இல்லையே என்று ஒருவர் கூட அரங்க மேடையில் பேசவில்லை.
தமிழர் வரலாற்றை தமிழர் அறியாமல் இருப்பது தான் இதற்கெல்லாம் அடிப்படை காரணம். ஆனால், எங்கிருந்தோ வந்து தமிழ்நாட்டை ஆண்ட இராணிகளை தமிழர் அல்லாதோர் அறிந்து வைத்துள்ளனர். தமுக்கம் கலை அரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டப்பட்டிருப்பது தெரிந்தும் எங்கள் இராணியின் பெயரான மங்கம்மாள் பெயரை சூட்ட வேண்டுமென்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மதுரை தொடர் வண்டி நிலையம் அருகில் இராணி மங்கம்மாள் பெயரில் ஏற்கனவே ஒரு சத்திரம் உள்ளது. இது போதாது என்று தமுக்கம் கலையரங்கத்திற்கும், காந்தி அருங்காட்சியகத்திற்கும் இராணி மங்கம்மாள் பெயரை வைக்கக் கோருவது அடாவடித்தனமாகும்.
அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்த சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடம் பாதுகாக்கப்பட்டு ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப் பட்டு வருகிறது. அவர் இரண்டாண்டுகள் தங்கிய வீட்டின் தெருவிற்கு “சங்கரதாஸ் சுவாமி வீதி” என்று அழைக்கப்படுகிறது.
பாண்டிச்சேரி பல்கலை நாடகத்துறைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக பயிலரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் திரைப்பட விருது வழங்கப்படுகிறது. அண்டை மாநிலத்தில் கொண்டாடப்படும் அளவிற்கு சங்கரதாஸ் சுவாமிகளை தமிழகம் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சங்கரதாஸ் சுவாமிகளை கொண்டாட விட்டாலும் பரவாயில்லை. ஒளவை சண்முகம் அவர்கள் முயற்சியால் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு சிலை வைத்தும், அவர் பெயர் சூட்டியும் மதுரைக்கு பெருமை சேர்த்த வரலாற்றை இருட்டடிப்பு செய்ய வேண்டாம்.
தமிழக அரசு மீண்டும் சங்கர தாஸ் சுவாமிகள் பெயரை மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு சூட்டுவது ஒன்றே பெருமை தரக்கூடிய செயலாகும்.
—
திரு. கதிர் நிலவன்.