பொது சுகாதாரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் ஜப்பானியர்கள், உலகக் கோப்பை கால்பந்து மைதானத்திலும் அதை கடைபிடித்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், ஜப்பான் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலக சாம்பியனான ஜெர்மெனியை ஜப்பான் அணி வீழ்த்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மிக பிரமாண்டமான இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ஜப்பான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஜப்பானில் போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களும் கொண்டாடி தீர்த்தனர்.
போட்டிக்கு பிறகு , ஜப்பானிய வெற்றியை கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்து கொண்டாடினர் ஜப்பான் ரசிகர்கள். இந்த சுய கட்டுப்பாடும், பொது ஒழுக்கமும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
அவர்கள் விளையாடாத போட்டியாக இருந்தாலும் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் ஜப்பான் நாட்டவர் அரங்கை முழுக்க சுத்தம் செய்த பிறகே வெளியே செல்கிறார்கள். ஒரு கத்தார் நாட்டவர் நீங்கள் இதை கேமராவிற்காக செய்கிறீர்களா என்று கேட்டதற்கு. “இல்லை ஜப்பானியர்கள் யாரும் தங்களுக்கு பின்னே குப்பையை விட்டு செல்ல மாட்டார்கள், எந்த இடமாகினும் அதை நாங்கள் மதிப்போம்” என்று ஒரு ஜப்பானியர் குப்பையை எடுத்துக் கொண்டே கூறினார்.
முன்பொரு முறை தசாவதாரம் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக ஜாக்கிசான் அழைக்கப்பட்டு இருந்தார். ஆடியோ வெளியீட்டுக்கு பின் அங்கிருந்த குப்பைகளை அவரே அகற்றினார். இங்குள்ள நம்மவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்து விட்டு சென்றார்.
இதேபோல ஐ திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அவர்கள் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே இருந்தார், விழாவை நடத்துபவர்கள் அளவுக்கு மீறி தாமதப்படுத்தியதால் அங்கிருந்து வெளியேறி விட்டார். நேரம் தவறாமை தம்மிடத்தை தூய்மையாக வைத்திருத்தல் என்பன போன்ற பொது ஒழுக்கங்களை நாம் அனைவர் மனதிலும் ஆரம்பத்தில் இருந்தே நுழைக்க வேண்டும்.
சீனா ,சிங்கப்பூர், ஜப்பான்,கொரியா உள்ளிட்ட நாடுகளில் கல்வித்திட்டமே அவ்வாறு தான் உள்ளது. சுயக்கட்டுப்பாடையும், பொது ஒழுக்கத்தையும் அவர்கள் பாடமாகவே சிறுவயது முதலே கற்றுக் கொடுக்கிறார்கள்.
நிச்சயம் நம் கல்வி முறை மாற வேண்டும். நிர்வாக முறையும் மாற வேண்டும். அப்போதுதான் நாகரிகமான மனிதர்களை உருவாக்க முடியும்.
கல்வி என்பது வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து அதை விடைத்தாளில் எழுதி மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. ஒரு மனிதன் சமூகத்தில் ஒரு நல்ல கட்டுப்பாடு உள்ள சுய ஒழுக்கமுள்ள நல்ல மனிதனாக வாழ்வதற்கே கல்வி அவசியம். அப்படிப்பட்ட ஒரு கல்வி முறை வந்தால் எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்க முடியும் என்பதை ஜப்பான் நிரூபித்துள்ளது.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.