“கால்பந்து பற்றி எதுவும் தெரியாத ஒரு பாமரனின் பார்வை”
“அர்ஜென்டினா”
இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த நாட்டின் பெயர் உலகம் முழுதும் உச்சரிக்கப்படும்.விளையாட்டின் மகிமை அதுதான்.ஒரு நாட்டின் பெருமையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் திறன் விளையாட்டிற்கு உண்டு.
எனக்கெல்லாம் ஜிம்பாப்வே என்ற ஒரு நாடு இருப்பதே கிரிக்கெட் பார்த்துதான் தெரிஞ்சுது.உலகிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு விளையாட்டு என்றால் அது கால் பந்தாகத்தான் இருக்கும். எந்த நாடு விளையாடினாலும் தங்கள் சொந்த நாடு ஆடுவதை பார்ப்பது போல வெறித்தனமாக பார்த்து ரசிப்பது கால்பந்து விளையாட்டைத்தான்.
எனவே கால்பந்து உலக கோப்பையில் வெற்றி பெறும் நாடு உலகம் முழுவதும் பிரபலமடையும் என்பதில் ஆச்சர்யம் இல்ல.
அந்த வகையில் நேற்று கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி வாகை சூடி உலகம் முழுதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
முதன்முதலாக அர்ஜென்டினா என்ற ஒரு நாடு இருப்பதே எனக்கு ஒரு கடி ஜோக் மூலம் மட்டும் தெரியும். உலகிலேயே பணக்கார நாடு எது என்று கேட்பார்கள்?? நாம அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யான்னு யோசிக்க ‘பங்களா’தேஷ் என்று நம்மை கடிப்பார்கள்.
அதேபோலத்தான் உலகிலேயே மிக அவசரமான நாடு எது என்றால்
“அர்ஜென்டினா”என்பார்கள்.இப்படித்தான் முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பது எனக்கு தெரிய வந்தது.
பின் 1986 ல் கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்ற பிறகு எனது அண்ணன்மார்கள் பலர் அதை பற்றி பேசி கேட்டிருக்கிறேன். அர்ஜென்டினா ,மாரடோனா என்ற சில வார்த்தைகள் மட்டும் காதில் விழும்.
அதன் பின் கால்பந்து விளையாட்டை பார்க்காதவர்களுக்கும் மாரடோனா பற்றியும் அர்ஜென்டினா பற்றியும் தெரிய ஆரம்பித்தது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் தெரியாதவர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் என்றால் கண்டிப்பாக தெரியும் .இவ்ளோ ஏன் கிரிக்கெட் விளையாட்டே தெரியாத அமெரிக்காவில் கூட சச்சின் டெண்டுல்கர் பெயர் தெரிய வந்தது.
மாரடோனாக்கு பிறகு அர்ஜென்டினாவை எனக்குள் நினைவுபடுத்தியது சீமான்தான் என்று சொல்லலாம்.
ஒரு காலத்தில் அவர் சேகுவேரா படம் போட்ட டி-ஷர்ட் களை அணிந்து வருவார். சேகுவேரா பற்றியும் பேசுவார். திடீரென பார்த்தால் பலரும் அதை ஒரு பேஷனாக எடுத்துக்கொண்டு சேகுவேரா படம் போட்ட பனியன்களை அணியத்தொடங்கினர்.
யார்யா அவரு ??சம்பந்தமே இல்லாம ஒருத்தர் படத்தை ஊருக்குள்ள எல்லாரும் போட்டுட்டு திரியிராய்ங்கன்னு விசாரிச்ச போது,
அவர்தான் சேகுவேரா .கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக புரட்சி செய்தவர் என்று அவர் வரலாற்றை சொன்னார்கள்.
அந்த சேகுவேராவின் தாய்நாடு அர்ஜென்டினா என்றும் தெரியவந்தது.
அர்ஜென்டினாவில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ் தான். நம் நாட்டில் ஆங்கிலம் தெரியாத ஒருவரை படிப்பறிவு இல்லாதவர்கள் போலத் தான் கருதுகிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளிலும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் உண்மை. ஒரு முறை மாரடோனா அவர்களிடம் அவருக்கு ஆங்கிலம் தெரியாதை பற்றி நக்கலாக கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மாரடோனா எனக்கு என் தாய்மொழி தெரியாமல் போனால் தான் அவமானம் மற்ற மொழிகள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொன்னார். எவ்வளவு பெரிய சாதனையாளரிடமிருந்து எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை. ஆங்கிலம் என்பது மொழிதான் அதுவே ஒருவரை சாதனையாளராக ஆக்கி விடாது என்பதற்கு மாரடோனா அவர்களே பேருதாரணம். இப்படியாக சேகுவேரா மற்றும் மாரடோனா இவர்கள் மூலம் அர்ஜென்டினா மீது என் மதிப்பு அதிகமானது.
அதன் பின்னர் அர்ஜென்டினாவின் பெயரை மீண்டும் எனக்குள் நினைவுபடுத்தியது “லயோனல் மெஸ்ஸி”.
இவர் யார் இவர் எப்படி ஆடுவார் என்ன மாதிரி ஆட்டக்காரர் என்பது எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து இவர் பெயரை பலர் உச்சரித்துக்கேட்டு இருக்கிறேன். கால்பந்து விளையாட்டே சுத்தமாக தெரியாதவர்களுக்கு கூட பீலே,மாரடோனா, ரொனால்டோ,மெஸ்ஸி போன்றோர் பெயர்கள் தெரியும்.அவர்களது புகழ் வீச்சு அப்படி.
குறிப்பாக விஜய் நடித்த பிகில் படம் வந்த பொழுது மெஸ்ஸியின் பெயர் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. அவரை வைத்து பிகில் படத்தை வெகுவாக கலாய்த்து கொண்டிருந்தார்கள். மெஸ்ஸியால் முடியாததை கூட விஜய் செய்கிறார் என்பது போல trolls அப்போது போய்க்கொண்டு இருந்தது.
அதன் பின் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அவர்களின் மகன் இன்ப நிதி கால்பந்து விளையாடுவதற்காக வெளிநாடு சென்ற போது, மீண்டும் மெஸ்ஸியின் பெயர் பரவலாக பேசப்பட்டது.
நல்லா பேர் வச்சாங்க அவருக்கு மெஸ்ஸி ன்னு ,அவரை வச்சு எல்லா இடத்திலும் ஒரே messy தான் 😝.
கால்பந்து விளையாட்டு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் பார்ப்பதே இல்லை. கிரிக்கெட்டைப் போலவே ஒரு அணியில் 11 பேர் ஆடுவார்கள், 90 நிமிட ஆட்டம்.முடிவு கிடைக்கவில்லை என்றால் கூடுதலாக 30 நிமிடம்.
அப்படியும் கிடைக்கவில்லை என்றால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும். இதுதான் எனக்கு கால்பந்து பற்றி தெரிந்தது.
நேற்றைய ஆட்டம் கூட பெனால்டி ஷுட் அவுட் முறையில் தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் உள்ள அதே பெனால்டி ஷூட் அவுட் முறையைத்தான் வெற்றியை தீர்மானிக்க கிரிக்கெட்டிலும் ஒரு காலத்தில் பின்பற்றினார்கள். 2007 டி20 உலக கோப்பையில் இந்த முறை பின்பற்றப்பட்டது. Stumpகளை குறி பார்த்து நேராக பந்தால் அடிப்பது. இந்த முறை கால்பந்து விளையாட்டிற்கு பொருந்தும். ஆனால் கிரிக்கெட்டிற்கு?? இது அப்பவே என் மனதுக்கு ரொம்ப நெருடலாக அமைந்தது. வெற்றி பெற்ற திருப்தியே இருக்காது. அதற்கு பேசாம கால்பந்து விளையாட்டில் கூடுதல் நேரம் போல ஆளுக்கு ஒரு ஓவர் கொடுத்து யாரு அதிகமா அடிக்கிறாங்களோ அவங்களே வெற்றியாளர்ன்னு தீர்மானிக்கலாம் என்று எண்ணினேன். பிற்பாடு அதுவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
எனக்கு தனிப்பட்ட முறையில்
இந்த பெனால்டி சூட் அவுட் முறையின் மீது சுத்தமாக உடன்பாடு கிடையாது.
இருவரும் சம அளவில் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளனர் என்னும் போது இருவருமே வெற்றிக்கான தகுதியாளர்கள் என்று தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர இது போன்ற முறைகளில் தீர்மானிக்கப்படக்கூடாது என்பதுதான் என் எண்ணம்.
அப்படி ஒருவேளை வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் இருவரும் சம அளவில் இருக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக அந்த போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் அதிக புள்ளிகள் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானிக்கலாம். ஒரு தொடர் முழுக்கவே ஆதிக்கம் செலுத்துபவர்கள் தான் வெற்றிக்கு தகுதியானவர்களாக நான் பார்க்கிறேன்.
எது எப்படியோ அர்ஜென்டினா வெற்றியாளராக ஆனது பலருக்கும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கால்பந்து உலகில் அர்ஜென்டினாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதேபோல புரட்சியாளர்கள் மத்தியிலும் சேக்குவேராவின் நாடு என்ற வகையில் அர்ஜென்டினா மீது ஒரு மதிப்பு உள்ளது. வல்லரசு நாடுகள் இல்லாமல் ஒரு சாதாரண நாடு கோப்பையை வெல்வது என்பது உளவியல் ரீதியாகவே பாமர மக்கள் அனைவர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதற்காக நிச்சயமாக அவர்களுக்கு நம் பாராட்டுக்களை தெரிவித்தேயாகவேண்டும்.
அதே நேரத்தில் மிகக் கடுமையான ஒரு போட்டியை கொடுத்த பிரான்ஸ் அணியும் பாராட்ட வேண்டும்.
குறிப்பாக ஒரு தனி மனிதனாக ஒன் மேன் ஆர்மியாக “எம்பாப்பே” ஹாட்ரிக் கோல்கள் அடித்து பிரான்சு அணியை தோல்வியில் இருந்து தனி மனிதனாக மீட்டார் என்றே சொல்லலாம். அவருக்கும் நிச்சயமாக நமது பாராட்டுகளை தெரிவித்தேயாக வேண்டும். தொடர் நாயகன் விருது போல கோல்டன் பூட் விருதும் அவருக்கு தான் கிடைத்துள்ளது சிறப்பு.
இன்னும் இந்தியாவிற்கு உலக அளவில் கால்பந்து அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதும் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். விளையாட்டுத்துறையில் இந்தியா பின்தங்கி இருப்பது என்பது உண்மைதான். கால்பந்து என்று இல்லை ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட எந்த ஒரு உலக அங்கீகாரம் பெற்ற விளையாட்டுகளிலும் இந்தியா பின்தங்கிய நிலையில் தான் உள்ளது.
கலையும் ,விளையாட்டும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம். ஒரு நாட்டில் பெருமையை உலகுக்கு உணர்த்த மிக முக்கிய கருவிகளாக உள்ளன.
ஆனால் ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மதவாதமும் ,வளச்சுரண்டல்களும், பெருகியோடும் இந்த நாட்டில் விளையாட்டு ஒன்னு தான் குறைச்சல் என்று கேட்கத் தோன்றுகிறது.. அடிப்படை கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரத்திலேயே இன்னும் நாம் நிறைவு பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம். மற்றபடி விளையாட்டில் தகுதி பெறவில்லை என்பது பெரிய விடயமாக தோன்றவில்லை எனக்கு.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.