ஆசிரியரை இந்த சமூகம் ஒவ்வொரு குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்றே பெருமையுடன் அழைக்கின்றது. குறிப்பாக, தொடக்கநிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்குத்தான் இந்த பெருமை முற்றிலும் பொருத்தமானதாக அமையும். முதல் வகுப்பில் சேர்க்கப்படும் பிஞ்சுக் குழந்தைகளைக் கவனமாகக் கையாளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. மிகுந்த பொறுமையும் தாய்மை உணர்வும் மிகுந்த அக்கறையுடன் கையாளும் திறனும் அனைவருக்கும் அவசியம்.
குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை இளம் வயதிலேயே சமச்சீராகவும் செம்மையாகவும் செழுமையாகவும் வளர தொடக்க நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. அத்தகு, தம் பணியைத் தொழிலாக அல்லாமல் தொண்டாக மேற்கொண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை மாநில அரசு தொடர்ந்து பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருவது வேதனையளிக்கத்தக்கது.
ஒன்றிய அரசுக்கு இணையாக நியாயமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியப் பலன்களையும் படிகளையும் கடந்த இரு ஊதியக் குழுவிலும் முறையாக வழங்க மறுத்து தொடர் ஊதிய இழப்பை ஏற்படுத்தி வருவதென்பது அரசுப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளாகும்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத அவலநிலையில் தான் தமிழ்நாட்டில் எளிதில் பள்ளிக்குப் போக முடியாத, போக்குவரத்து வசதியில்லாத, போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற, பாதுகாப்பு வசதிகளற்ற குக்கிராமங்களில் குழந்தைகளின் பொருட்டு, விரும்பியே இவர்கள் எண்ணும் எழுத்தும் மேம்பட நாளும் உழன்று வருகின்றனர். இதில் பெண் ஆசிரியைகளின் நிலை சொல்லவொணாதது.
கடந்த இரு ஊதியக் குழுக்களிலும் காணப்பட்ட இவர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் மற்றும் இழப்புகள் ஆகியவற்றைக் களைய அவ்வக்கால மாநில அரசுகளால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர்கள் குழு மற்றும் ஒரு நபர் குழு போன்றவற்றால் உரிய, உகந்த பலனின்றிப் போனது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சிய கண்துடைப்பு நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. பல்வேறு கட்ட அறவழி போராட்டங்களும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடனான இணைந்து கூட்டு நடவடிக்கைகளும் இந்த சமூக அநீதிக்கான தொடர் பயணங்களும் அதன்பொருட்டு நிகழும் கைது, ஊதிய இழப்பு உள்ளிட்ட அரசு ஆக்கப் பேரிடர்களும் முடிவின்றித் தொடரும் நிகழ்வுகளாகவே காணப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைப்பதில் கடந்த அரசு காட்டிய பாராமுகம் இன்றளவும் தொடர்வது துர்பாக்கியம் ஆகும்.
ஏற்கனவே, தாம் பணிபுரியும் அடிப்படைப் பணியில் எதிர்நோக்கி வரும் பெரும் ஊதிய இழப்புடன் மேலும் கூடுதலாக அண்மையில் கொண்டு வரப்பட்ட அரசாணை 243 காரணமாக, இவர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கனவை முற்றிலும் தகர்த்தது என்பது ஏற்பதற்கில்லை. உரிய கல்வித் தகுதியும் திறமையும் அனுபவமும் இருந்தும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலம் ஆறாத மனக்காயத்தை இதன்மூலம் கொஞ்சம் ஆற்றிக் கொள்ளலாம் என்கிற நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டது என்பது சரியல்ல.
மாநில முன்னுரிமை அடிப்படையில் தூக்கி நியாயப்படுத்தும் இந்த அரசாணை வலியுறுத்தும் ஒற்றை வழிப் பதவி உயர்வு பாதையில் மொத்த பணிக்காலத்தில் ஏனையோர் கிளப்பி விடும் பொய்யுரை போல் நான்கு ஐந்து பதவி உயர்வுகள் வர தற்போது வாய்ப்பே இல்லை.
மிஞ்சிப் போனால் ஒன்று அல்லது இரண்டு பதவி உயர்வுகள் கிடைப்பதற்குள் பணிநிறைவு காலமே வந்துவிடும். இப்போதே இடைநிலை ஆசிரியர்கள் பலரும் ஒரே பணிநிலையில் பத்தாண்டுகள் மற்றும் இருபதாண்டுகள் கடந்து முறையே தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை எய்தி ஒற்றைப் பதவி உயர்வு கூட கிடைக்காத நிலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைகளைத் தாண்டிக் கிடைக்கப்பெறும் பதவி உயர்வின்போது கூடுதல் பணப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்தல் தலையாய கடமை என்பது ஊதிய நியதி. இது இங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது.
பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பதவி உயர்வின்போது, அதாவது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (அண்ணனின் திண்ணை அதிர்ஷ்டவசமாக காலியானால்) நிலையில், தாம் ஏற்கனவே பெற்று வரும் சொற்ப ஊதியத்தில் அரசுப் பணியாளர்கள் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் பணப்பலன்கள் ஏதுமின்றி ஏற்கெனவே நிவாரணமாகப் பெற்று வரும் சிறப்புப்படி இழப்பைச் சந்தித்து முன்னர் பெற்று வந்ததைவிட பல நேரங்களில் குறைவாகவும் சில வேளைகளில் மிகவும் சொற்பமான ஊதியப் பலனைத் தண்டனையாகப் பெறும் அவலம் என்பது கொடுமையானது.
இதனால், பல பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் தக்க தகுதியிருந்தும், விருப்பம் இருந்தும் கடந்த காலங்களில் ஊதிய இழப்பை முன்னிட்டு நியாயமாகக் கிடைக்கும் உயர்பதவிக்கான பதவி உயர்வைப் புறக்கணித்து வரும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.
கடைநிலையாக இருக்கும் இடைநிலை ஆசிரியப் பணியிடத்திலேயே பதவி உயர்வைக் காட்டிலும் சற்று கூடுதல் பலனளிக்கக்கூடிய தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை காலத்தைத் துய்க்கும் அவலநிலையானது அவசர அவசியம் கருதி ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களால் களையப்படுதல் இன்றியமையாதது.
ஒரே பணிநிலையில் இருவேறு ஊதியத்தில் பணிசெய்யும் அவலநிலை.
தமிழ்நாட்டில் 1.6.2009 க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, மலைக்கும் மடுவிற்குமான நிலையில் மூத்தோர் மற்றும் இளையோர் ஊதியமானது கடந்த 2009 இல் நடைமுறைக்கு வந்த ஆறாவது ஊதியக்குழுவில் ஒன்றிய அரசுக்கு இணையான நியாயமான (அடிப்படை ஊதியம் 9300 தர ஊதியம் 4200) ஊதியக் கட்டுக்குப் பதிலாக அடிப்படைக் கல்வித் தகுதியையும் (+2) இரண்டாண்டுகள் ஆசிரியர் பட்டயப் பயிற்சியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கும் அடிப்படை ஊதியம் 5200 மற்றும் தர ஊதியம் 2800 என்று வெகுவாகக் கீழிறக்கி, புதிய ஊதிய நிர்ணயம் செய்ததில் ஏற்பட்ட மிகைகுறை ஊதியத்தைச் சற்று மிகை ஊதியமாக மாற்ற பாதிக்கப்பட்டோருக்கு அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த அடிப்படை ஊதியத்தை 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஈடுசெய்யும் அடிப்படை ஊதிய நிலை அதன்பின் பணிக்கு வந்தோருக்குத் தொடரப்படாதது காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் தம் உயிர்மூச்சுக்கு நிகரான சம வேலைக்குச் சம ஊதியம் ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்திக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் அரசு இவர்களுக்குத் தனி ஊதியம் ₹750 க்கு அகவிலைப்படி வழங்கி வந்ததை, தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் 7 ஆவது ஊதியக் குழுவில் அகவிலைப்படி அற்ற சிறப்புப் படியாக ₹2000 வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஒரே பணி நிலையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப் பெரும் இடைவெளி நிறைந்த இருவேறு ஊதிய நிலைகள் இருப்பது எண்ணத்தக்கது.
இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரே வழி ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஈடாக ஒன்றிய அரசுக்கு இணையான சரியான ஊதிய விகிதத்தை மறு நிர்ணயம் செய்து வழங்குவதே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏற்புடைய செயலாக இருக்கும்.
ஏற்கனவே ஊதிய முரண்பாடுகளாலும் தொடர் ஊதிய இழப்புகளாலும் துவண்டு கிடக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இப்புதிய அறிவிப்பாணையானது மேலும் அத்தகையோருக்கு மிகுந்த மனவலி உண்டாக்கும் அழித்தொழிப்பு செயலாகும் என்பது மிகையல்ல.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி தாமாக கிடைத்தபோதும் அது வேண்டாம் என்று இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பை வேண்டி விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்த காலகட்டமும் இங்கு இருந்தது அறியத்தக்கது. ஆனால் தற்போதைய சூழலில் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பை யாரும் விரும்புவதே இல்லை என்ற நிலைதான் உள்ளது. காரணம், அதன் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பல்லாண்டுகள் காத்துக்கிடந்து மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியப் பணி நியமனத் தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய ஆட்சிப் பணிக்குக் கூட இத்தனைத் தடைகளும் தேர்வு முறைகளும் இருப்பதாகப் படவில்லை. அரசின் கடைநிலை ஊழியராகக் குறைந்த கல்வித்தகுதியுடன் விளங்கும் அலுவலக உதவியாளர் பெறும் ஊதியக்கட்டில் நல்ல கல்வித் தகுதியுடன் பல்வேறு கட்ட போட்டித் தேர்வுகளைக் கடந்து தம் தகுதிக்குக் குறைந்த ஊதியத்தில் இன்றைய இளைய இடைநிலை ஆசிரியர் சமுதாயம் பணிபுரிய விரும்பவில்லை. அதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது தொடர்ந்து நடத்தி வரும் வேறு பல பணிக்கான போட்டித் தேர்வுகளில் தம் கவனத்தை இவர்கள் அண்மைக்காலமாகத் திசைதிருப்பிவிட்டனர்.
2009 இல் ஒரு நாளில் 1.86 ஐ பெருக்கிக் கொண்டு தம் அடிப்படை ஊதியத்தை மாற்றி நிர்ணயம் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டவர்களுடன் அதன்பின் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து சம வேலைக்குச் சம ஊதியம் என்று கேட்டு குடும்பத்துடன் உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்தியது கடந்த கால வரலாறு ஆகும். அப்போராட்டத்தில் ஒரு சிலர் தொடர் உண்ணாநிலை இருந்து உயிர் நீத்ததும் ஊடகங்கள்வழி அறிந்த ஒன்றாகும்.
பல்வேறு இன்னல்களுக்கும் உயிர் தியாகங்களுக்கும் இடையில் போராடிப் பெற்ற ஒன்றிய அரசிற்கு இணையான மாநில அரசின்கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை, மாநில அரசின் நிதிநிலையைக் கவனத்தில் கொண்டு கண்ணீரோடு கேட்கத் துணியாமல் அதைவிட பல மடங்கு குறைவான சம வேலைக்குச் சம ஊதியம் நோக்கி இன்றைய இடைநிலை ஆசிரியர்கள் தம் உரிமை துறந்து தள்ளப்பட்டிருப்பது வேதனையான துன்பியல் நிகழ்வாகும்.
பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிகளும் வேறுவழியின்றி இந்த முழக்கத்தின் பக்கம் கடைநிலை ஆசிரியரின் விருப்பத்திற்கிணங்க நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
அதாவது, தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதிய உரிமையில் ஒரு பகுதி அளவு மட்டும் நிறைவேறிட பாதிக்கப்பட்டவர்களையே குற்றவுணர்ச்சியுடன் தொடர்ந்து போராட வைத்துக் கொண்டிருப்பது என்பது வருந்தத்தக்கது.
அன்றைக்கு இடைநிலை ஆசிரியர்களைத் தரம் இறக்கிய இன்றைய அரசே இதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் யாருக்கும் எந்தவொரு பிரச்சினையும் நேராதவண்ணம் மீளவும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதிய விகிதத்தை ஏனையோருக்கு 2009 இல் நிர்ணயித்தது போல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தில் புதியதொரு நம்பிக்கை விடியலை அரசு நிச்சயம் ஏற்படுத்தித் தர வேண்டியது அவசர அவசியமாகும்.
—
முனைவர். மணி கணேசன்,
மன்னார்குடி.