Home>>அரசியல்>>காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.
ஐயா மணியரசன்
அரசியல்இந்தியாகர்நாடகாசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்கள்வேளாண்மை

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்ட முடிவு காவிரி நீரைப் பெற்றுத் தராது!
மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்!


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அண்மையில் 11.07.2024 அன்று நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைவிட மிகவும் குறைவாக, 12.07.2024 முதல் 31.07.2024 வரை ஒரு நாளைக்கு 1 ஆ.மி.க. (டி.எம்.சி.) அதாவது, ஒரு நொடிக்கு 11,500 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று ஆணையிட்டது. உடனே கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை செயல்படுத்த முடியாது என அறிவித்தார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 14.07.2024 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அதில் 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என்று தீர்மானம் போட்டார். அதே நாளில், கபினி அணை நிரம்பி 20,000 கன அடி வெளியேற்றப்பட்டது என்ற நடைமுறை உண்மையையும் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி, காவிரிச் சிக்கலுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாமல் தவிர்த்து வந்த நிலையில், கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கர்நாடகத்தைப் போல் அனைத்துக் கட்சிக் கூட்டமாக இல்லாமல், அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டமாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடக்கும் என்று முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டமன்றக் கட்சிகளின் கூட்டமாக நடத்துவதும், முதலமைச்சர் தலைமை தாங்காமல், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார் என அறிவித்ததும் தவறு என்று காவிரி உரிமை மீட்புக் குழு கூறியது. பா.ம.க.வும் இதனை முன்வைத்தது. காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி நீர் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து, தஞ்சை நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை 16.07.2024 அன்று நடத்துவோம் என்று ஏற்கெனவே அறிவித்தது.
இப்பின்னணியில், தமிழ்நாடு அரசு 16.07.2024 அன்று நடத்திய அனைத்து சட்டமன்றக் கட்சிகள் கூட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றிய 3 தீர்மானங்களில், முதல் தீர்மானம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு 11.07.2024 அன்று வழங்கிய ஆணையை செயல்படுத்தக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்துவது என்பதாகும். காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை கடந்த ஆண்டுகளில் வழங்கிய எந்த ஆணையையும் கர்நாடகம் செயல்படுத்தியதே இல்லை. அந்த ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து என்ன சாதிக்கப் போகிறோம்?

அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலைத் தவறி, கர்நாடகத்திற்குப் பக்கச் சார்பாக செயல்படுகிறார் என்பது பல கட்டங்களில் வெட்ட வெளிச்ச மாகியுள்ளது. கடந்த 2024 பிப்ரவரியில் நடந்த ஆணையக் கூட்டத்தில், கர்நாடகம் மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி மேல் நடவடிக்கைகளுக்காக இந்திய நீராற்றல் துறைக்கு அத்தீர்மானத்தை அனுப்பி வைத்தவர் இதே ஹல்தர்தான்! இவரிடம் மேல் முறையீடு செய்வதென்பது தமிழ்நாட்டு மக்களை, குறிப்பாக டெல்டா மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும்.

இரண்டாவது தீர்மானம், தேவைப்பட்டால், காவிரி நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்பதாகும். ஒழுங்காற்றுக் குழு வழங்கிய ஆணையின் காலம் 31.07.2024 அன்றோடு முடிகிறது. அதற்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்குமா என்பது கேள்விக்குறி. அப்படியே, உச்ச நீதிமன்றம் புதிய கெடு விதித்து, ஏதோவொரு தீர்ப்பைச் சொன்னாலும் அதையும் முழுமையாக கர்நாடகம் செயல்படுத்தாது என்பதே கடந்த கால அனுபவம்!

இப்பொழுது கர்நாடகத்திலிருந்து தங்களின் அணைகளில் தேக்க முடியாத வெள்ள நீரை விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அதிகமாக வந்து கொண்டுள்ளது. வெள்ளம் வடிந்து விட்டால், அவர்கள் தண்ணீர் திறந்துவிட மாட்டார்கள். நமக்கு மேட்டூரில் 120 அடியில் இப்போது 45 அடிதான் உள்ளது. சம்பாவுக்குத் தண்ணீர் திறக்க, குறைந்தது 85 அடியாவது மேட்டூரில் தண்ணீர் வேண்டும். இந்த நிலையில், சம்பாவுக்குத் தண்ணீர் பெறுவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் குடிநீர் பெறுவதற்கும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி முன்வந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, சனநாயகப் போராட்டங்கள் – ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதே கர்நாடகத்திற்கும், இந்திய அரசுக்கும் அழுத்தம் தரும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையமோ அல்லது ஒழுங்காற்றுக் குழுவோ தண்ணீர் பகிர்ந்தளிப்பது குறித்து வழங்கிய ஆணையை எந்த மாநிலம் செயல்படுத்தவில்லையோ, அந்த மாநிலத்தின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து, அதை செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. அந்த விதியின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், தனது ஆணையை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இதுவரை கோரியதே இல்லை.

இந்த விதியை சுட்டிக்காட்டி, கர்நாடகத்தின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசும் கோரியதாகத் தெரியவில்லை. பொதுவாக காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய அரசிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டமன்றக் கட்சிகள் கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. காவிரிப் பிரச்சினையில் நடவடிக்கை எடுத்தது போலவும் இருக்க வேண்டும், கர்நாடக அரசின் பொல்லாப்பும் கூடாது என்ற “ராஜதந்திரத்தை” தமிழ்நாடு அரசு கடைபிடிக்கிறது.
ஆளுங்கட்சியின் முன்முயற்சியில், அனைத்துக் கட்சிகள் – விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு முழுவதும் சனநாயக அறப் போராட்டங்களை நடத்த வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் மட்டுமே இக்கருத்தை அனைத்து சட்டமன்றக் கட்சிகள் கூட்டத்தில் கூறியதாக ஏடுகளில் வந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு முதலமைச்சரும் மற்ற கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு அனுப்பி, மேக்கேத்தாட்டு அணை கட்டுமானப் பணிகள் நடக்கிறதா என்பதை அறிந்து, தொடக்க கட்ட வேலைகள் நடந்தால், அதைத் தடுப்பதற்குரிய மக்கள் எழுச்சியை தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி முன்னெடுத்து, அனைவரும் அதில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மேக்கேத்தாட்டு அணைக்குத் தடை கோரி அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கு அப்படியே கிடப்பில் உள்ளது. தமிழ்நாடு அரசு அவ்வழக்கை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், கட்சிகளும், இந்த நடைமுறை உண்மைகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு, கர்நாடகத்திற்கு வல்லுநர் குழு அனுப்புவது, மக்கள் எழுச்சிப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவது என்ற வகையில் செயல்பாடுகளில் இறங்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு,
பேச: 98419 49462, 94432 74002

Leave a Reply