Home>>இதர>>தீரா”தே” காதல் – சிறுகதை

தீரா’தே’ காதல் (Endless Love on a  “Single Tea”)


மணி 11 ஆச்சு.. ஐய்யயோ  என் சோலி முடிஞ்சு போச்சு. இதோ ஆபத்து என்னை நோக்கி வரப்போகுது.

ஆபத்து என்னை தாக்கப் போறது நிச்சயமா இது முதல் முறையும் இல்ல. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

ஆமாம். இன்னும் ஒரு வாரம் இங்கேதான் என் வீட்டுல இருக்கப் போறேன். அடுத்த வாரம்  தான் டிக்கெட் போட்டு இருக்கேன்.

சிங்கப்பூர்ல இருந்து வருசம் மூணு தடவை தவறாமல் ஊர்ப்பக்கம் வந்துடுவேன். அப்பாவை பார்த்துட்டு அவர் கூட சில நாட்கள் இருந்துட்டு போவேன். அம்மா இருந்த போது வருடம் ஒரு முறை வந்துக்கிட்டு இருந்த நான், அம்மா போன பிறகு வருசம் ரெண்டு, மூணு தடவை வந்துடுவேன். அப்பா ஊரை விட்டு எங்கேயும் வர மாட்டார். நாம தான் அவரை பார்க்கணும். அதனால அவரை பாத்துக்கறதுக்கு வீட்லயே ஒரு வேலைக்காரியும் வச்சாச்சு .

சிங்கப்பூர்ல இருக்கும் போதெல்லாம் ஊர்ல அப்பா மற்றும் நண்பர்கள்  எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். எப்படா ஊருக்கு போவோம் அவங்களை பாப்போம்ன்னு இருக்கும். நல்ல வேளை இந்த கொரோனாக்கு பிறகு work from homeன்னு சொல்லப்படும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதி பெரும்பாலான நிறுவனங்களில் வந்துவிட்டது. எந்த நாட்டில் இருந்தாலும் அதைச் சொல்லியே நாம வந்துடலாம். விடுமுறை கிடைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை

அப்படித்தான் ஒரு வாரம் இங்க வந்தேன். வந்த இடத்துல இப்படி ஒரு பயங்கரம் என் வாழ்க்கைல நடக்கும்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.

பொதுவா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் நம்ம ஆளுங்க அவங்க அப்பா அம்மாவை தவறவிடுறாங்களோ இல்லையோ குறிப்பா சில விடயங்களை தவற விடுவாங்க.

சாப்பாடு. அது கூட இப்ப நல்ல தமிழ்ச் சாப்பாடு அங்கே பல இடங்களில் கிடைக்கிறது.

ஆனால், இங்கே நம்ம ஊர்ல சர்வ சாதாரணமாக கிடைக்கிற ஒரு அற்புதமான ஒரு பானம். அங்கே அந்த சுவையோடு கிடைக்காது.

“தே” என்கின்ற தேநீர் தான் அது.

நாம இங்க டீ ன்னு சொல்லியே பழகிட்டோம் அவங்க அதையே அழகா தேநீரை சுருக்கி “தே” என்று சொல்கிறார்கள். டீ  என்ற ஒரே ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ்ப் பதம் இது.

அப்படி ஒரு நல்ல ஒரு டீ யை அதுவும் வீட்டுல நல்ல பசும் பால்ல போடக்கூடிய அந்த தே யின் சுவைக்காகவும் தான் ஊருக்கு வந்தேன்.

ஆனா வந்த இடத்தில் அந்த வேலைக்காரம்மா இந்த மாதிரி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல.

பொதுவா ஒரு டீ சுவையா இருக்குறதுக்கு அதுல பல விடயம் சேர்ப்பாங்க. புதினா, பட்டை, கிராம்பு, இஞ்சி ன்னு

ஆனா இவங்க ஒரு டீ எப்படி எல்லாம் பண்ணா நல்லா இருக்காதோ அந்த எல்லா வழிமுறைகளையும் பின்பற்றிதான் ஒரு டீ போடுவார்கள்.

மனுசன் அதை வாயிலே வைக்க முடியாது. சுக்கு டீ கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது சுக்கு நூறா உங்களை காலி பண்ணும் டீ.

வந்த புதிதில் முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு எப்படியோ கசாயம்ன்னு நினைச்சு முழுங்கிட்டேன்.

நானும் அவங்ககிட்ட ரெண்டு, மூணு தடவை சொல்லி பாத்துட்டேன் அவங்களும் என்னென்னமோ முயற்சி பண்ணி பாத்துட்டாங்க. இருந்தும் விளைவு அதே தான். இன்னும் பால், சக்கரை, டீ தூள் இது மூணு தான் மாத்தல..

ஆனாலும் முடியல. என்ன பண்றதுன்னு  தெரியாம  என் நண்பன் கிட்ட ஒரு உதவி கேட்டேன். அவன் தான் சொன்னான், நீ ஏண்டா அதை சிரமப்பட்டு குடிக்கிற. பாத்திரம் விளக்கும் இடத்தில ஊத்திட்டு டம்ளரை குடிச்ச மாதிரி வையின்னு.

இது நல்லா இருக்கே. இனிமே இந்த டீ லிருந்து நமக்கு விடுதலைன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த டீ குடிக்காம இருக்க நான் தீக்குளிக்கவும் தயாராக இருந்தேன். கீழதானே ஊத்தப்போறோம்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா நாம ஒன்னு நினைக்க தெய்வம் ஒன்னு நினைக்கும்ன்னு சொல்வாங்க.

நேத்தும் அப்படித்தான் நடந்தது. வழக்கமா டீய குடுத்துட்டு உடனே போற அந்த அம்மா,

நேற்று பார்த்து ஊர் கதை,உலக கதை எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நானும் பொறுமையா கேட்டுட்டு இருந்தேன்.

“தம்பி! டீ ஆறுது பாருங்க. சூடா இருக்கும்போதே குடிச்சிருங்க”ன்னு சொன்னாங்க பாருங்க.

அதை வேற ஏமா இப்ப ஞாபகப்படுத்தி தொலைச்சீங்கன்னு, வேற வழியே இல்லாம…

இன்னிக்கும் அதே மாதிரி கதை பேச ஆரம்பிச்சா என்ன பன்றதுன்னு யோசிக்கும் போது தான், இருக்கவே இருக்கான் நம்ம நண்பன் அவன் கிட்ட ஒரு ஐடியா கேட்போம்ன்னு கேட்டேன். அந்த அம்மா வரும்போது சும்மா பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு போயிருடா. போயிட்டு ஒரு ரெண்டு நிமிசம் கழிச்சு வா அவங்க போயிடுவாங்க. அதுக்கப்புறம் எடுத்து கீழே ஊத்திடுன்னு சொன்னான்.

இவனுக்கு மட்டும் எப்படி புதுசு புதுசா இவ்ளோ ஐடியா வருதுன்னு தெரியல. ஒருவேளை இவ்வளவு அனுபவிச்சு இருப்பான் போல ன்னு நினைச்சேன்.

அப்பதான் சரியா 11 மணிக்கு டீயை எடுத்துட்டு வந்துட்டாங்க.

“நீங்க டீய வச்சிட்டு போங்க நான் பாத்ரூம் போயிட்டு வந்து குடிக்கிறேன்”

“அப்படியா தம்பி! உங்ககிட்ட முக்கியமான விடயம் பேசணும். நீங்க போயிட்டு வாங்க நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கேன்”

பட்ட சிரமம் எல்லாம் பாழாய் போச்சு. ராச தந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போய் விட்டன. பயிற்சி பத்தல போல”

இன்னிக்கும் அதே துன்பம் தான். நான் பாட்டுக்கு வந்த உடனே டீ சூடா இருக்கும் போதே குடிச்சி இருக்கலாம். பாத்ரூம் எல்லாம் போயிட்டு வந்து சீன் போட்டு கடைசில ஆறி போன ஒரு கசாயத்தை தான் குடிச்சேன். அது இன்னும் மோசம்.

இப்படி நாளுக்கு நாள் இந்த டீ குடிக்கிறது பெரும் துன்பமா இருக்கு காலைல மட்டும் இல்ல சாயங்காலமும் இதே தொல்லை.

என்ன பொழப்பு இது! ஒண்ணுக்கும் வழியில்லாமல் கைல காசே இல்லாமல் இருப்பவர்களை பார்த்து தான் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கிறான் என்பார்கள்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் என்ன பலன்?

நானும் சிங்கிள் டீக்கு நாயா அலையுறேன்..

இந்த அலுவலக வேலை வேற என்ன அங்கே இங்கே நகர  விட மாட்டேங்குது.

இல்லனா கூட வெளியே போய் ஒரு நல்ல டீ குடிச்சுட்டு வரலாம். டீக்கடை ரொம்ப தூரம் வேற. தூரம் என்ன தூரம்.

ஒரு நல்ல டீ குடிக்கிறதுக்கு எவ்வளவு தூரம் வேணும்னாலும் போகலாம்.

90 களில் சக்ரா கோல்ட் டீக்கு ஒரு விளம்பரம் வரும்.

மோகன் தேடிச் செல்கின்றார் ஒரு தங்கமான டீ ருசிக்காக.

“காடு மலை எல்லாம் தேடி பாத்துட்டேன் ஒரு தங்கமான  டீ சுவையே காணோம்”ன்னு ஒருத்தர் சொல்வார். உடனே அந்த டீ பேரை சொல்லி இதை அருந்துங்கள்ன்னு சொல்வார்கள். அவரும் அத குடிச்சிட்டு இதுதான் நான் தேடிய” டீ  என்பார்.

இந்த விளம்பரத்தை நான் கல்லூரியில் படிக்கும் பொழுது cultural ல  ஒருத்தன்  இதை கலாய்ச்சி ஒரு  நிகழ்ச்சி பண்ணான்.

டீ வேணும்னா டீக்கடைக்கு போடா! ஏன்டா காடு மலை எல்லாம் அலையுற! லூசாடா நீன்னு ஓங்கி அறைவான் அவனை.

அது என்னமோ இப்ப ஞாபகத்துக்கு வந்தது. உண்மைதானே! நல்ல டீ வேணும்னா டீ கடைக்குத்தானே போகணும்.

பொதுவா டீ மற்றும் ஆம்லெட் இரண்டுமே கடைகளில் மட்டும் தான் நல்லா இருக்கும். வீட்ல அந்த சுவை வராது. காரணம் சூடு தான்.

பாலை எந்த அளவு கொதிக்க வச்சுட்டே இருக்குமோ அந்த அளவுக்கு டீயும் சுவை அதிகமாகும். அதேபோல கல்லு எந்த அளவுக்கு சூடா இருக்கோ அந்த அளவுக்கு முட்டை ஆம்லெட் நல்லா வரும். அந்த அளவுக்கு எல்லாம் நம்ம தாய்மார்கள் வீட்டுல கொதிக்க வைக்க மாட்டார்கள். அப்புறம் கேஸ் விக்கிற விலைக்கு என்ன பண்ணுவாங்க..

அதுவும் இல்லாம இங்கே வீட்டில பாலையும் டீ தூளையும் ஒண்ணா போட்டு கொதிக்க வைக்கும் தம் டீ தான் செய்வார்கள். அது அவ்ளோ சுவையை கொடுக்காது. ஒரு நல்ல சுவையான டீ க்கு பால்தான் நீண்ட நேரம் கொதிக்க வேண்டுமே தவிர தேயிலைத்தூள் ரொம்ப நேரம் கொதிக்க கூடாது. தேயிலையின் தன்மையே மாறிவிடும். அதனால்தான் கடைகளில் பாலை தனியாக கொதிக்க வைப்பார்கள் அப்பறம் அதன் மீது வடிகட்டி மூலம் தேயிலைத் தூள் மீது வெந்நீரை கொட்டி அந்த நீரை கலப்பார்கள். இதுதான் சரியான அணுகுமுறை அதனால்தான் கடைகளில் போடப்படும் டீ யானது நல்ல மணத்தோடு சுவையாக உள்ளது.அதிலும் பால் மற்றும் வடிகட்டிய தேநீரின் அளவு முக்கியம். இரண்டும் சரிசம அளவில் இருந்தால் அது ஒரு சுவை.அளவு மாறும் போது சுவையும் மாறும்.

 

ஒரு வழியா இன்னைக்கு மதியம் ஆபீஸில் லீவு விட்டானுங்க. அப்பாடா வந்ததுல இருந்து வெளியே போய் ஒரு டீ குடிக்கவே இல்ல. இன்னைக்கு போயே ஆகணும் ன்னு முடிவு பண்ணிட்டேன். சரியா எப்போதும் நாலு மணிக்கு டீ கொண்டு வருவாங்க. அதனால கொஞ்சம் முன்னாடியே 3:30 மணிக்கே வெளியே போகணும்னு முடிவு பண்ணிட்டேன்.

நேரம் இப்ப 3.30 மணி,

இதோ வீட்டை விட்டு கிளம்பிட்டேன். வண்டி எடுத்துகிட்டு வாசல் தாண்டல.

அதுக்குள்ள,

“தம்பி! பாத்தீங்களா டீ சாப்பிடாமலே ஏதோ வேலையா வெளியே போறீங்க! உங்களுக்காக நான் இன்னிக்கு சீக்கிரமே டீ போட்டேன் பாருங்க.

இந்தாங்க! டீயை குடிச்சுட்டு வெளில  போங்க”.

என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா?

டீ குடிச்சுட்டு வெளியே போறதா, நான் வெளியே போறதே டீ குடிக்க தானே..

அதுக்கு மேல பேச வார்த்தையே இல்லை.

வேற என்ன செய்றது. இன்னைக்கு என்னை கடவுள் தான் காப்பாத்தணும் மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

அப்பதான் கடவுள் மாதிரி என்னுடைய காட்பாதர் குரல் கேட்டுச்சு.

“அவன் தான் வெளிய போறானே அங்கேயே டீ சாப்பிட்டுக்குவான். வேணா விட்டுடுன்னு”

எந்த ஒரு தகப்பனும் தான் பட்ட சிரமத்தை அல்லது தான் படும் கஷ்டத்தை தன் பிள்ளை ஒருபோதும் படக்கூடாது என்பதைதான் விரும்புவார்கள்..

அப்படித்தான் ஒரு தெய்வம் போல வந்து என்னை காப்பாற்றினார் என் தெய்வத்தகப்பன்..

ஆனால் பாவம். அவர் நிலமையை யோசிச்சு,

“அப்பா! கடைத்தெருவுக்கு போனும் ன்னு சொன்னிங்களே வரிங்களா”ன்னு தான் கேட்டேன்.

உடனே அந்த அம்மா, கிடைச்ச கேப்பில் கிடா வெட்ட ஆரம்பிட்டாங்க.

“ஆமாம்பா இருப்பா! ஐயா டீ குடிச்சிட்டு வருவாரு. நீ யும் வாப்பா. டீ குடிச்சிட்டு போலாம். இன்னிக்கு இஞ்சி, கொத்தமல்லி, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு எல்லாம் போட்டு ஸ்பெஷலா மசாலா டீ பண்ணி இருக்கேன்”

இதையெல்லாம் போட்டு ரசம் தான வைப்பாங்க விசம் மாதிரி ஒரு டீ கூடவா வைப்பாங்கன்னு

நினைச்சுக்கிட்டு, இல்ல…

நான் வெளியே போறேன்ன்னு சொல்லி,

இதோ கிளம்பிட்டேன்..

ஒரு நல்ல “தே” யின் சுவையைத்தேடி.


எழுத்து:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

படம்:
கி. மாணிக்கம்.

Leave a Reply