கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம்
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்திலும், அதற்கு வெளியே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 6 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் 9 அதிகாரிகள் என மொத்தம் 16 பேருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:
அன்புடையீர், வணக்கம்!
பொருள்: கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, நீடித்திருக்கும் போக்குவரத்துக்கான Regional Mobility Hub ஆக மாற்ற வேண்டும்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் – வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றவும், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப்போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான Regional Mobility Hub ஆக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் நவீனமான முறையில் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பினை Mobility Hub என அழைக்கின்றனர். இதன்மூலம் பல்வேறு வகையான பொதுப்போக்குவரத்து வசதிகளையும் மக்கள் மிக இலகுவாக பயன்படுத்த வழிசெய்யப்படுகிறது. நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு அவரவர் வீட்டு வாசலில் தொடங்கி, சென்றடையும் இடத்தின் வாசல் வரை எளிதாக சென்று சேரும் வசதிகளை அளிக்கும் முறை இதுவாகும்.
இதற்கான பொருள் விளக்கம் (definition) பின்வருமாறு கூறப்படுகிறது:
- Mobility Hubs are urban infrastructures that provide at least several (two or more) shared modes of transport in the same place. (Mobility Hubs, an Innovative Concept for Sustainable Urban Mobility? Maxime Hachette & Alain L’Hostis, Springer, 2024)
- One of the essential functions of mobility hubs will be to foster seamless integration between transit modes, systems, and routes, while accommodating efficient connections to all modes of access to and from the station. (Transit Oriented Development -TOD- Guidance Document, Ministry of Urban Development, Government of India, 2016)
- A Mobility Hub is a welcoming environment that enables travellers of all backgrounds to access multiple transportation options and supportive amenities. Built on the backbone of frequent and high-capacity transit, mobility hubs offer a safe, comfortable, convenient, and accessible space to seamlessly transfer across different travel modes. (Metropolitan Transportation Commission, San Francisco Bay Area, USA, 2021)
பொதுபோக்குவரத்து வசதிகளை அதிகமாக்குதல், பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுத்தல், அனைத்து பிரிவினருக்கும் மேம்பட்ட பயணத்தை அளித்தல், மக்களின் செலவுகளை குறைத்தல், நெரிசலையும் மாசுபாட்டையும் குறைத்தல், உடல்நலத்தை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பலவிதமான பலன்களை Mobility Hub அளிக்கிறது.
தனியார் கார் பயன்பாட்டை குறைத்து – பேருந்து, தொடர்வண்டி, வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து மற்றும் ஒன்றுக்கு மேற்பட்டோர் பகிரும் போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்க இது பயன்படுகிறது. மேலும், மிதிவண்டி போக்குவரத்துக்கும், நடைபயணத்துக்கும் வழிவகுப்பதால் இது மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை உருவாக்கி தொற்றாநோய் (NCDs) அதிகரிப்பை தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் காற்று மாசுபாட்டை தடுக்கவும் இது பயன்படுகிறது. மாநகரங்களை ஒரு பெருமிதமான பகுதியாக மாற்றவும் மக்களிடையே சமுதாய உணர்வை மேம்படுத்தவும் Mobility Hub வழி செய்கிறது.
நவீனமான முறையில் Mobility Hub கட்டமைப்புகளை உருவாக்கும் நடைமுறை தற்போது உலகமெங்கும் பல்வேறு மாநகரங்களில் புகழ்பெற்று வருகிறது. இந்தியாவில் கொச்சி நகரில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- மாநகரின் ஒரு வட்டாரத்தில் அமைக்கப்படுவது Neighborhood Mobility Hub ஆகும்.
- மாநகரின் முதன்மையான பகுதியில் அமைக்கப்படுவது Central Mobility Hub ஆகும்.
- மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் மாநகரினை இணைக்கும் வகையில் அமைக்கப்படுவது Regional Mobility Hub ஆகும்.
– அத்தகையை ஒரு Regional Mobility Hub ஆக கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கை (Transit Oriented Development – TOD)
கார்களையும் தனியார் வாகனங்களையும் சார்ந்த பழைய நகர்ப்புறப் போக்குவரத்து முறைகள் சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து, மக்களின் உடல்நலத்தைப் பாதித்து, ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதாக இருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஒருங்கிணைந்த, இயற்கையை அதிகம் பாதிக்காத, மக்களின் நலவாழ்வுக்கு நன்மைபயக்கும் போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பது போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி (Transit Oriented Development – TOD) ஆகும். இதனை இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 2022 – 23 கொள்கை அறிக்கையில் சென்னை மாநகரில் இதனைப் பின்பற்றுவோம் என அறிவித்துள்ளது.
1. நடைபாதை (Walk), 2. மிதிவண்டி (Cycle), 3. இவற்றுக்கான பாதைகளை இணைத்தல் (Connect), 4. அதிகமான மக்கள் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து மற்றும் அதனுடன் இணைந்த பாதைகள் (Transit), 5. போக்குவரத்துப் பாதைகளிலேயே பலதரப்பட்ட சேவைகளும் கிடைக்கச் செய்தல் (Mix), 6. குறுகிய பரப்பளவில் அதிகமான மக்கள் வசிக்கும் சூழலை உருவாக்குதல் (Densify), 7. ஏற்கெனவே இருக்கும் நகரப்பகுதியை வளர்த்தல் (Compact), 8. தனியார் கார்களுக்கான தேவையைக் குறைத்து, நகரில் அவற்றுக்கான இடத்தையும் குறைத்தல் (Shift) ஆகியன போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கைகளாகக் கொள்ளப்படுகின்றன.
மேற்கண்ட அறிவியல்பூர்வமான TOD வழிமுறைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை. மாறாக, “குறுகிய பரப்பளவில் அதிகமான மக்கள் வசிக்கும் சூழலை உருவாக்குதல் (Densify)” என்கிற ஒரே ஒரு TOD கருத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக, சென்னை MRTS பறக்கும் ரெயில்பாதை மற்றும் கடற்கரை, வண்டலூர், மீஞ்சூர், திருநின்றவூர் இடையேயான அனைத்து நகர்ப்புற ரயில்பாதைகளுக்கு இருபுறமும் தளப்பரப்பு குறியீட்டு (floor space index – FSI) விதிகளை தளர்த்தி 14.01.2024இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், TOD கொள்கையின் முதன்மையான பொதுப்போக்குவரத்து வழிமுறைகளை செயலாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை தரவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
Mobility Hub கட்டமைப்புகளை உருவாக்குவது Transit Oriented Development கொள்கையின் ஒரு முக்கியமான அங்கம் ஆகும். சென்னை மாநகரில் இக்கட்டமைப்புகளை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
Regional Mobility Hub: கட்டமைப்புகளின் உத்தேச பட்டியல்
Mobility Hub கட்டமைப்பு முறைகள் நவீனமானவை ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப செயலாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சூழலில் பொதுவாக பின்வரும் கட்டமைப்புகளைக் கொண்டு Mobility Hub உருவாக்கப்பட வேண்டும்.
- வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் – மாநகர பேருந்துகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் உடனுக்குடன் MTC பேருந்து இணைப்பு கிடைக்க வேண்டும்.
- தொடர்வண்டி, மெட்ரோ இணைப்பு எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்க வேண்டும்.
- ஆட்டோ, வாடகை கார் இணைப்பு எளிதாகவும் நியாயமான கட்டணத்திலும் கிடைக்க வேண்டும்.
- மேற்கண்ட அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயணிகள் எளிதாக செல்வதற்கு இணைப்பு வசதிகள் இருக்க வேண்டும். தடையற்ற வழிகள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள், நடை மேம்பாலம், சுரங்கப்பாதை உள்ளிட்ட வசதிகள் வேண்டும்.
- தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களில் வருவோர் எளிதாக இறங்கவும் ஏறவும் வசதிகள் வேண்டும்.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எளிதில் அணுகும் வகையில் தரமான, இலகுவான நடைபாதைகள் அமைக்க வேண்டும்.
- சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளோர் மிதிவண்டி மூலம் புறநகர் பேருந்து நிலையத்தை அணுகும் வகையில் பாதுகாப்பான மிதிவண்டி பாதை அமைக்க வேண்டும். போதுமான இலவச மிதிவண்டி நிறுத்தம் வேண்டும்.
- இருசக்கர வாகன நிறுத்தம் கட்டுப்படியான கட்டணத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தனியார் கார் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கூடாது.
- அனைத்து இடங்களுக்கும், அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் வழிகாட்டும் பலகைகள், இலச்சினைகள் வேண்டும்.
- மாநகர பேருந்துகள், தொடர்வண்டி, மெட்ரோ இரயில்களின் புறப்பாடு குறித்த நேரலை நேர அட்டவணைகள் புறநகர் பேருந்து நிலையத்திற்குள் பல இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
- இலவச வைஃபை இணைப்பு, செல்பேசி மின்னூட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
- வழிகாட்டும் பணியாளர்கள் இருக்க வேண்டும்.
- இலவச கழிப்பிடங்கள், தூய்மையான காத்திருப்போர் பகுதி தேவை
- தூய்மை, வெளிச்சம், பாதுகாப்பு உள்ளிட்டவை பராமரிக்கப்பட வேண்டும்.
- கடைகள், உணவங்கள் தரமாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு, Regional Mobility Hub போக்குவரத்து நிலையத்தில் இருக்க வேண்டிய வசதிகளில் பெரும்பாலானவை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இல்லை. இதனை மாற்றி ஒரு முழுமையான Regional Mobility Hub ஆக கிளாம்பாக்கத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள்:
- உடனடியாக 300 முதல் 500 புதிய MTC பேருந்துகளை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளுக்கு இயக்க வேண்டும்.
- கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை உடனடியாக அமைத்து, நகர்ப்புற தொடர்வண்டிகள் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். வெளியூர் செல்லும் தொடர்வண்டிகள் நின்று செல்லும் நிலையமாகவும் இது அமைய வேண்டும். (மேலும், வேளச்சேரி – பரங்கிமலை MRTS பறக்கும் இரயில்திட்டத்தில், கடந்த 17 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் 500 மீட்டர் இணைப்பை கட்டி முடித்து, உடனடியாக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்.)
- கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் – இனி அமைக்கப்பட இருக்கும் தனியார் புறநகர் பேருந்து நிலையம் இரண்டுக்கும் இடையே கட்டணமில்லா பேருந்து இணைப்பை உருவாக்க வேண்டும்.
- சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே உடனடியாக மெட்ரோ இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
- கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை Regional Mobility Hub ஆக மாற்றும் திட்டத்தை உடனடியாக வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், சென்னை மாநகரின் 16 பேருந்து பணிமனைகளை வணிக வளாகங்களாக மாற்றும் முயற்சியை கைவிட்டு, அவற்றை மாநகர அளவிலான Mobility Hub ஆக மாற்ற வேண்டும். அவற்றுடன் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு தொடர்ச்சியான பேருந்து இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.