சம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர் போராட்டத்தை ஆகச்சிறந்த செயலால் முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
தமிழ்நாட்டில் காணப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2009 மே 31ஆம் நாள் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 4500 உடன் 1.86ஐ பெருக்கி ரூ.8170 என நிர்ணயிக்கப்பட்ட ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 இல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒருநாள் வேறுபாடு காரணமாக அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய இழப்புடன் அதன்பின் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தகுதியுள்ள நபர்கள் பலர் தொடர்ந்து 2012, 2014 களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் சற்றேறக்குறைய 20 ஆயிரம் இளம் ஆசிரியப் பெருமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6ஆம் நாள் வரை தொடர் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசு இதையடுத்து ஒரே பணிநிலையில் உள்ள ஆசிரியர்களின் இருவேறு ஊதிய முரண்பாடுகள் இருப்பது தொடர்பாக ஆலோசித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூன்று மாதங்களில் தம் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால், அதில் தாமதம் ஏற்படுவதால் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை அண்மையில் திரளாக முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 23 முடிய முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். அரசும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் முனைப்பில் வருவோரை சென்னையில் ஆங்காங்கே அவர்கள் திரளாகக் கூடுவதற்குள் கோழியை அமுக்குவது போன்று காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் சென்று பொதுவான ஓர் இடத்தில் அடைத்து வைத்து அன்று இரவுக்குள் விடுவிக்கப்படுவதும் மறுநாளும் இதையே தொடர்வதும் என்று ஒரு வாரம் கழிந்து விட்டது.
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதிவு பெற்ற பழைய சங்கங்கள் பலவற்றில் இவர்கள் உறுப்பினராகவும் பொறுப்பாளர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய ஆழ்மனத்தில் தூவப்பட்ட அவநம்பிக்கை விதை நாளாக ஆக வளர்ந்து தற்போது முழு நம்பிக்கை இழந்து நிற்கிறது.
பத்து அல்லது இருபது அம்ச கோரிக்கைகளுள் ஒன்றாக இவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக விளங்கும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதை முன்வைத்துப் போராடுவதை இவர்களால் ஏற்க முடியவில்லை. அதன் காரணமாகவே, மரபுவழி இயக்கங்கள் நடத்தும் இவர்களுக்கான போராட்டங்களில் கூட இவர்கள் முழு மனத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருக்க முடியாமல் போனது என்பது வருத்தத்திற்குரியது.
இவர்களது ஊதிய இழப்பை எப்பாடுபட்டாவது மீட்பது என்று சூளுரைத்து தம் இன்னுயிரையும் துச்சமாகக் கருதி மேற்கொள்ளும் ஊதிய மீட்பு போராட்டத்தை முன்னெடுக்கும் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்திடம் முழுதாகத் தம்மை ஒப்படைத்து விட்டதை ஏனைய சங்கங்கள் இவர்களின் தீரா வலியை நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
பசியில் தாம் பெற்ற பத்துப் பிள்ளைகள் ஒருசேர அழுதாலும் முதல் பிடிச்சோறு யாருக்குத் தர வேண்டும் என்பதை ஒரு தாய் எப்போதும் நன்கு அறிந்து வைத்திருப்பாள். அது குழந்தைகளுக்கும் புரியும். ஆனாலும், அது தமக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என்கிற நப்பாசையில் குய்யோ முறையோ என்று குதித்துக் கொண்டு வீரிட்டு அழும். அதேவேளையில் உணவூட்டும் தாய் ஒருபோதும் தம் நிதானத்தை இழப்பதில்லை.
இத்தகைய சூழ்நிலையில், அரசு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களைப் பாராமுகமாக நடத்துவது என்பது சகிப்பதற்கில்லை. கூட்டுப் போராட்டத்தை நசுக்குவதும் ஒருங்கிணைந்த போராட்டத்திற்குள் பிளவுப் பாம்பை உள் நுழைப்பதும் அண்மைக்காலமாக மலிந்து விட்டது வேதனைக்குரியது.
உரிமைக்காகப் போராடுவது என்பது உலகம் ஒப்புக்கொண்ட அறம் ஆகும். வீதியில் இறங்கிப் போராடும் ஓர் இனத்தின் எழுச்சியை வெற்று வேடிக்கை முழக்கம் என்று புறந்தள்ளுவது சரியாகாது. உண்மையான, உணர்வான, நியாயமான இருதரப்பு நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இணை இங்கு எதுவுமில்லை. கோரிக்கையில் நீதிக்குப் புறம்பானதும் வாக்குறுதியில் ஏமாற்றும் சூழ்ச்சியும் கண்டிப்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இடம்பெறக் கூடாது.
முன்வைக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் படைத்தவர்களிடம் எதிர்நிலை போக்கு, முரட்டுப் பிடிவாதம், வெறுப்புப் பேச்சு போன்றவற்றைக் காட்டும் தீய குணங்கள் தேவையற்றது. இதற்காக வானத்திலிருந்து திடீர் மீட்பர் ஒருவர் உதிக்கப் போவதில்லை. விட்டுக் கொடுப்பது கோழைத்தனமல்ல. அது வீரத்தின் உச்சநிலையாகும். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிணக்குகள் மலிந்தாலும் ஆணை இடும் அதிகாரம் இருப்பவர்களிடம் இணங்கிப் போவதும் இணைந்து போவதும் போராட்டத்தின் உரிய உகந்த உத்தியே ஆகும்.
ஆள்பவர்களைப் பகைத்துக் கொண்டு நாம் நம் கோரிக்கையை யாரிடம் நிறைவேற்றித் தரும்படி மன்றாடப் போகிறோம்? சில நேரங்களில் வெற்றிகரமான தோல்வியும் பல நேரங்களில் தோல்விகரமான வெற்றியும் போராட்டங்களின் போது நிகழும். எல்லா போராட்டங்களும் முழுமையான வெற்றியில் முடிவதில்லை. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இன்றைய இளைய சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. ஏனெனில், பெரும் நம்பிக்கை பேராபத்து மிக்கது. தம் ஆன்மாவை அஃது இழக்கும் சமயங்களில் ஒட்டுமொத்த நம்பிக்கையும் நிலைகுலைந்து போகும்.
அதேவேளையில், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களும் போராடுபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். எதிரி மனப்பாங்கைக் காட்டுதல் கூடாது. அதற்காக, இப்படி ஒரு தொடர் அறவழிப் போராட்டம் நடப்பது குறித்த பிரக்கினை அற்றும் இருப்பது முறையாகாது.
நல்ல தகுதியும் திறமையும் உழைப்பையும் சிந்தும் போராட்டம் நடத்துபவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் கற்போர் அனைவரும் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள் ஆவார்கள். வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் அடிப்படை ஊதியத்திலேயே பெரும் இழப்பு என்கிற நிலையில் இனி புதிதாக இழப்பதற்கு இங்கு எதுவுமில்லை என்று நாள்தோறும் விடாமல் தெருவில் இறங்கிய இவர்களைக் கிள்ளுக்கீரையென எண்ணுதல் பிழையாகும்.
சிறைக் கொடுமைகளை அனுபவிக்கவும் ஊதியமில்லா விடுப்பினால் எதிர்கொள்ளும் மாதாந்திர ஊதிய இழப்புகள் குறித்துக் கவலைக் கொள்ளாமல் அனைத்தையும் எதிர்கொள்ளவும் இவர்கள் துணிந்து விட்டனர். இதை இவர்களின் ஒவ்வொரு முறையும் கட்டுக்கோப்பு மிக்க போராட்டத்தின் போது நிச்சயம் காண முடியும்.
குறிப்பாக, இளம் பெண் ஆசிரியைகள் பலரும் தம் குடும்பத்தின் ஒத்துழைப்புடன் போதுமான அடிப்படை வசதிகள் குன்றிய அல்லது அதிகார வர்க்கப் பேரிடரால் சிதைக்கப்பட்ட போராட்டக் களத்தில் தம் உடல் உபாதைகளைக் கருத்தில் கொள்ளாமல் நவீன வேலுநாச்சியார்கள் போன்று உணர்வுடன் ஒன்றி நிற்பதும் அறவழியில் தொடர்ந்து பயணிப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவர்களது செம்மையான வீரம் கண்டு உண்ணாநிலையிலும் ஒரு சமூகத்தின் மாபெரும் விடியலுக்காக தோழமைமிக்க ஆணாசிரியர்கள் தம் ஆவிபோக பம்பரமாகச் சுழன்று போராட்டத்தை ஒருங்கிணைக்கின்றனர். நேரடியாகப் போராட்டக் களத்திற்கு வர இயலாதவர்கள் கூட பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து நேரும் இழப்புகள் குறித்து சிந்திக்காமல் வீட்டிலிருந்து போராட்டம் (Strike From Home) செய்வதை முழுமனதுடன் ஏற்று செவ்வனே செய்து வருகின்றனர்.
பல்வேறு புள்ளிவிவரப்படி சம வேலைக்கு சம ஊதியம் எனும் ஒற்றை முழக்கத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு போராட்டதத்தின் போதும் குறைந்தபட்சம் 90 விழுக்காட்டிற்கு மேலாக இருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.
இரு தரப்புக்கும் இடையே நம்பிக்கை தரும் ஒரு நல்ல பேச்சுவார்த்தை காலத்தில் நிகழ்ந்திட வேண்டும். அனைத்து ஆசிரியர் தோழமை இயக்கங்களின் ஒட்டுமொத்த ஆதரவு குரலும் எண்ணமும் வேண்டுதலும் அதுவேயாகும். அவ்வாறு நடக்கும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது என்ற அவநம்பிக்கையைப் போக்கும் விதமாக உடன்பாட்டில் தெளிவும் நம்பிக்கையும் இருத்தல் முக்கியம்.
விடாக் கொண்டன் கொடாக் கொண்டன் நோக்கும் போக்கும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். போராட்டத்தை இரு தரப்பும் ஏற்கத்தக்க வகையில் வெற்று வாக்குறுதிகளாலான அலங்காரச் சொற்களால் அன்றி ஆக்கப்பூர்வமான ஆகச் சிறந்த செயலால் வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! வகுப்பறைகள் சிறந்த கடின உழைப்பாளிகளான இவர்களின் வருகைக்காக ஏங்கித் தவம் கிடக்கின்றன.
—
முனைவர். மணி கணேசன்,
மன்னார்குடி.