Home>>அரசியல்>>மது, மாது போதைகளால் ஒரு நாட்டை எப்படிச் சீரழிக்க முடியும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மது, மாது போதைகளால் ஒரு நாட்டை எப்படிச் சீரழிக்க முடியும்.

போதை
கடந்த 1980-களில் எத்தியோப்பியாவில் மங்கிஸ்து ஹைலமரியம் எனும் ஸ்டாலினிசம் பேசிய இராணுவ அதிகாரி ஒருவர் ஆட்சி புரிந்தார். அந்த கேடுகெட்ட அரசின் கீழ் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தேன் நான்.

அப்போது மங்கிஸ்து அரசு மது, விபச்சாரம் இரண்டையும் தாராளமயமாக்கி அந்நாட்டு இளைஞர்களை எழுந்து நிற்கவோ, ஏனென்று கேள்வி கேட்கவோ முடியாமற் செய்தது. யாரும் (குறிப்பாக இளைஞர்கள்) சிந்திக்கக் கூடாது, சேரக் கூடாது, செயல்படக் கூடாது என்பதுதான் அரசின் முக்கியமானக் கொள்கையாக, திட்டமாக இருந்தது.

மது, மாது போதைகளால் ஒரு நாட்டை எப்படிச் சீரழிக்க முடியும், அதிகார வர்க்கம் இவற்றை எப்படி பலமிக்க அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும் என்பவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்த்தேன் நான். அப்போது நானும் ஓர் இளைஞன்தான். இவற்றையெல்லாம் கவனமாகத் தவிர்த்து, என் மாணவ, மாணவியரிடம் அந்நாட்டின் அரசியல் நிலைமை, அவர்களின் குடும்ப நிலைமை, வருங்காலம் பற்றியெல்லாம் பேசி, என்னையும், பலரையும் காத்துக் கொண்டேன்.

இப்போது “எந்தையும் தாயும் (எல்லோரும்) மகிழ்ந்து குலாவி இருந்த” நம் நாடே, மது போதை, பாலியல் வக்கிரம், போதைப் பொருட்கள் என தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
காவல்துறை, உளவுத்துறைகள், நீதித்துறை, சிறைத்துறை போன்றவை இதனை நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கவிஞர் கண்ணதாசன் பாடியது போல, ஆட்டுவிக்கிறவர்கள் போதைகளை அனுமதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சிந்திக்கிறவர்கள், மக்களைச் சேர்க்கிறவர்கள், செயல்படுகிறவர்கள் சமூக விரோதிகளாக, ஆபத்தானவர்களாக தேவையற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். நாட்டில் இன்றைக்கு நிலவும் ஏற்பாடு ஏற்புடையதல்ல, எனவே “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” (அண்ணல் அம்பேத்கர்) என்று யாரும் தெருவுக்கு வரக்கூடாது. போதைகளில் சிக்கி, பொலிவிழந்து, வலுவிழந்து, பொசுங்கிப் போக வேண்டும் என்பதுதான் அதிகார வர்க்கத்தின் விருப்பமும், கனவுமாக இருக்கிறது.

அதிகார வர்க்கத்தினர் குடிக்கவில்லையா, கும்மாளமிடவில்லையா, வீடியோ எடுக்கவில்லையா, விபரீதங்கள் புரியவில்லையா என்று கேட்டால், அவர்கள் அனைத்தும் செய்கிறார்கள்தான். ஆனால் யாரும் எளிதில் புகமுடியாத தங்களின் அதிகார அக்ரகாரத்துக்குள் அமர்ந்திருந்து, தங்கள் ஈடுபாடுகள் அனைத்தையும் காத்துக்கொண்டு, “அனுபவிக்கிறார்கள்,” அழியவில்லை! அவர்களின் வாரிசுகள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தொழில் முனைவோராக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு நாடெங்கும், உலகெங்கும் சொத்துக்கள் இருக்கின்றன.

நீங்களும், நானும், அந்த அதிகார அக்ரகாரத்துக்குள் நுழையவிடாமல் செய்வதுதான் இங்கே முக்கியமானதாக அமைகிறது. பெரும்பாலான மக்களை, குறிப்பாக சமூக-பொருளாதார-அரசியல் மாற்றங்களை விரும்பி நிற்கும் இளையோரை, காயடிப்பதும், காலி செய்வதும்தான் ஆளும் வர்க்கத்தின் முக்கியமான நோக்கம்.

இந்தியாவில், நம்முடைய தமிழ்நாட்டில், மது அதிகாரபூர்வமாக மாநில அரசுகளால் விற்கப்படுகிறது. இப்போது பல்வேறு போதைப் பொருட்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் குறைந்த விலையில், தங்குதடையின்றி, தாராளமாகக் கிடைக்கின்றன. பலர் புதுப் பணக்காரர்கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். லஞ்ச லாவண்யம் பெருகிக் கொண்டிருக்கிறது. பணமும், தொடர்புகளும் பெருகும்போது, குற்றங்கள் செய்வதற்கு, கொலைகள் புரிவதற்கு தயங்க வேண்டியதில்லை. மொத்தத்தில், இந்தியா (தென் அமெரிக்க நாடான) கொலம்பியா போல ஆகிக் கொண்டிருக்கிறது.
அதிகார வர்க்கம் எளிதில் மாறாது. அதிகார பீடத்தை அண்டி வாழும் அனைவரும் தற்போதையே ஏற்பாடேத் தொடரட்டும் என்றுதான் விரும்புவார்கள். மக்கள்தான் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள், நிறையப் பேசுங்கள், எல்லாவற்றைப் பற்றியும் பேசுங்கள். பணத்திற்குப் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு, பிள்ளைகளின் பின்னால் போங்கள். அவர்களின் கல்விக்கூடங்களை, ஆசிரியர்களை, பணியிடங்களை, நண்பர்களை, தொடர்புகளை அவதானியுங்கள். வருமுன்னர்க் காப்பதுதான் அறிவுடைமை.

இளையோர் “தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழுங்கள்” தவறில்லை. ஆனால் உங்கள் உடலை, உள்ளத்தை, உறவுகளை, ஒட்டுமொத்த வாழ்வைச் சிதைக்கும் விடயங்களை கவனமாகத் தவிர்த்து விடுங்கள். It’s not worth it, my friends!

“வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”
“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?”

என்று தினமும் ஒருமுறையாவது திறந்த வெளியில் நின்று, உரத்தக் குரலில், உரக்கக் கத்துங்கள். பிரபஞ்சம் உங்கள் குரலைக் கேட்கும்.

தன்னைத் தான் காத்துக் கொள்வதே இவ்வுலகில் ஆகச் சிறந்த பாதுகாப்பு! என்னையும் காத்துக் கொண்டு, என்னுடன் இருப்போரையும் காத்துக் கொள்வேன் என்று இயங்குங்கள்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

(என்‌ குடியை உயரச்செய்வேன்‌ என்று முயலும்‌ ஒருவனுக்கு/ஒருத்திக்கு ஊழ்‌, ஆடையை இறுகக்‌ கட்டிக்‌கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்‌.) நன்றி!


ஓர் அப்பனாக,
சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
மே 7, 2024.

Leave a Reply