பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்
மருத்துவ ஆலோசனையின் படி பள்ளி திறப்பு குறித்த முடிவுகள் மேற்கொள் வேண்டும்.
ஒன்பது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளி திறப்பு குறித்து, பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும், ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெற்றோர்களிடமும், பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நவம்பர் 9 அன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்று தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைச் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.
ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த் தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
பண்டிகைக் காலங்களில் கடைகளுக்குச் செல்பவர்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இயலவில்லை, பெரும் எண்ணிக்கையில் மக்கள் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேரூந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகை தமிழ் நாட்டில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம், குறிப்பாக இவ்வாண்டு, அமாவாசை அன்று தீபாவளி வருவதால், அசைவம் சாப்பிடுபவர்கள் பண்டிகை விருந்தை அடுத்த நாள் கடைபிப்பார்கள், அவ்வாறு இருக்கும் போது, நவம்பர் 14 தீபாவளி, நவம்பர்15 ஞாயிறு அதற்கு அடுத்த நாள் பள்ளி திறப்பு என்பது, எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே நவம்பர் 16 பள்ளி திறப்பு குறித்த முடிவைப் பார்க்க வேண்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பண்டிகைக் காலத்தில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வியாபார நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் மக்கள் பெருங் கூட்டமாக கூடுவதை ஊடகங்களில் வரும் படங்களும், செய்திகளும் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16 அன்று நேரடியாக பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக மாட்டார்களா? நோய்த் தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த் தொற்று பரவ காரணமாக மாட்டார்களா?
மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்கள் தானே உரிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு பெற்றோர் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
பொதுச் சுகாதாரத் துறைக்குப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கும் பொறுப்பு உள்ளது. சுகாதாரத் துறை இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புக்கள் நவம்பர் 16 திறக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு திறப்பது பாதுகாப்பானதா? என்ற சுகாதார அறிக்கையை வெளியிட வேண்டும்.
பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் கடிதத்தை அடிப்படையாக கொண்டே பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித அடிப்படை ஆய்வும் மேற்கொள்ள வாய்ப்பில்லாத, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்-ஆசிரியர் கருத்து மட்டும் பெற்று, பள்ளிகள் திறக்கப்படுவது பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
பண்டிகைக் காலம் முடிந்த பிறகு, நோய்த்தொற்று தன்மை எவ்வாறு உருவெடுத்துள்ளது என்று கவனித்து, பள்ளி திறப்பு குறித்து பொதுச் சுகாதாரத் துறையின் மருத்துவக் குழு உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையை முன்வைத்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகு தான் பள்ளி திறப்பு குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், பள்ளி திறப்பு குறித்து குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் – ஆசிரியர் கருத்தின் அடிப்படையில் பள்ளி திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இத்துணை நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பயனற்றதாகிவிடுவதோடு, மிகப் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். அத்தகைய சூழலுக்கு யார் பொறுப்பேற்பது?
2020-2021 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாக குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
பாடத்தைக் குறைப்பது, பள்ளி திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ் நாடு அரசு அறிவித்தது. அக்குழு அறிக்கை தந்ததா? இல்லையா? என்ற தகவல் கூட இது வரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா? குறைப்படாதா? என்ற கேள்விக்கு இது நாள் வரை பதில் இல்லை. பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகள் திறக்கச் சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். இக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பைப் பள்ளித் திறப்பிற்கு முன்பாக தமிழ் நாடு அரசு வெளியிட வேண்டும்.
சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. பேரிடரின் தன்மையைச் சுகாதாரத்துறைதான் கணிக்க முடியும். தமிழ் நாடு அரசு பள்ளிகள் திறப்பு குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுச் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்துப் பொது மக்கள் கருத்து கேட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு அரசைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை