தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். கடந்த 2001-ல் ஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், பட்ஜெட் தாக்கலின்போது நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், வரும் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 4 நாட்களுக்கு முன்பு இன்று (ஆக. 09) செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிடுவார் எனத் தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “என் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும் பலர் இதற்கு உறுதுணையாக இருந்தனர். முதல்வர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது. முதல்வர், அவருடைய செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் பல திருத்தங்களைச் செய்தனர். இந்த அறிக்கை தயாரிப்பின்போது, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்தோம். 2001-ல் அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த அறிக்கைகளையும் ஆய்வு செய்தோம்” எனத் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கையை தரவிறக்கம் செய்ய
செய்தி சேகரிப்பு:
செந்தில்குமரன்,
மன்னார்குடி