சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற தீராத வேட்கை காரணமாக 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதிய அவர், மருத்துவப் படிப்பில் சேரத் தேவையான மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பாண்டும் நீட் தேர்வு எழுதிய மாணவர் சுபாஷ் சந்திர போஸ், இம்முறையும் தம்மால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்று அஞ்சியுள்ளார். அந்த அச்சம் காரணமாக நீட் முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னதாக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த சுபாஷ் சந்திர போஸ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 5 நாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்திருக்கிறார். நீட் தேர்வு அச்சத்தால் மேட்டூர் கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி, காட்பாடி தலையராம்பட்டு சவுந்தர்யா ஆகிய 3 மாணவச் செல்வங்கள் செப்டம்பர் நீட் தேர்வு நடைபெற்ற போது தற்கொலை செய்து கொண்டனர். இப்போது நீட் முடிவுகள் வெளியான நிலையில் இன்னொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
நீட் தேர்வு அது கொண்டு வரப்பட்ட நோக்கங்களான மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுப்பது ஆகியவற்றை சிறிதும் நிறைவேற்றவில்லை. மாறாக, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படுவதையும், அது ஒரு தனி வணிகமாக வளர்வதையும் தான் நீட் தேர்வு ஊக்குவிக்கிறது. தனிப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைப்பதையும், பறிப்பதையும் மட்டும் தான் நீட் தேர்வு செய்து கொண்டிருக்கிறது. இது தேவையற்றது. அதனால் நீட் ரத்து செய்யப்பட வேண்டும்; குறைந்தது தமிழகத்திற்கு விலக்களிக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது கண்டிப்பாக அகற்றப்பட்டாக வேண்டும். அதே நேரத்தில் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு மாணவர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வது எந்த வகையிலும் பிரச்சினைக்கு தீர்வாகாது. ஒருமுறை நீட்டில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் அடுத்த முறை முயன்று வெற்றி பெற வேண்டும். அதேபோல், இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும். அதற்கான சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஐம்பது நாட்களுக்கும் மேலாகி விட்டது. எனினும், தமிழக அரசின் சட்டம் இன்னும் ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தி நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.