இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 நவம்பர் 25 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் அ.சவுந்தராசன், உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்-1 :
மழை, வெள்ள பாதிப்புக்குள்ளான
அனைவருக்கும் நிவாரணம் வழங்குக!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் உபரிநீர் வெளியேற்றம் காரணமாக, வயல் வெளிகள் நீரில் மூழ்கியும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நெல், வாழை, மணிலா, உளுந்து, மரவள்ளி, பயிறு, பருத்தி, வெங்காயம் ஆகிய பயிர்கள் அழிந்து போயுள்ளன. ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிறுக்கு ஏக்கருக்கு ரூ.8000-மும், மறு நடவு செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவது என்றும் அறிவித்துள்ளது. இதனால் மழையால் பயிர் அழிந்து பாதிக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, நடவு செய்து அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000/-மும், தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகள் இறப்பு ஆகியவற்றிற்கு பாதிப்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க முன்வர வேண்டுமென்று மாநிலக்குழு கோருகிறது.
வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், தொடர் மழையின் காரணமாக வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ.5,000/- நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
மழை மற்றும் இயற்கை பேரழிவு நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள தொகையை ஒன்றிய அரசு தாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டுமென்று மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்-2 :
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரிகிருஷ்ணன், நிவேதா மரணம்!
சாதி ஆணவக் கொலையா? உண்மையை கண்டறிய
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடுக!!
சிபிஐ(எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்!!!
கள்ளக்குறிச்சி வட்டம், குதிரைசந்தல் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நிவேதா மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகிய பள்ளி மாணவர்களை 23.11.2021ல் சோமண்டார்குடி ஆற்றங்கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கண்டறிந்துள்ளனர். இவர்கள் மரணம் சாதி ஆணவ கொலையாக இருக்கக் கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
1) இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களின் காதலை ஏற்காத நிவேதாவின் உறவினர்கள் இவர்களை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கொலை செய்துள்ளனர் என்று சந்தேகிக்க வாய்ப்புள்ளது.
2) அரிகிருஷ்ணன் மரத்தில் தூக்கில் தொங்கியபடியும், நிவேதா ஆற்றுதண்ணீரில் மூழ்கியபடியும் வெவ்வேறு இடங்களில் இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
3) அரிகிருஷ்ணனின் முகம், உடம்பு முழுவதும் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது என்றும், அரிகிருஷ்ணனின் மார்பு, முதுகு ஆகியவற்றில் பலத்தகாயங்கள் உள்ளன. கை, கால் எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன.
மேற்கண்ட சந்தேகங்கள் அனைத்தையும் எழுத்தறிவு வாய்ப்பு மறுக்கப்பட்ட அரிகிருஷ்ணனின் தாத்தா சீனிவாசன் காவல்துறையிடம் சொன்னபிறகும் அதை புகாராக்காமல், காவல்துறையினர் சொல்படி ஒருவர் எழுத அதில் சீனிவாசனை கையெழுத்து போட வைத்து 174CRPC-யில் வழக்குபதிவு செய்திருப்பது உண்மை சம்பவத்தை திசைதிருப்பும் முயற்சியாக தெரிகிறது.
சாதி மறுத்து காதலிப்பவர்கள் படுகொலை செய்யப்படுவதும், அதை காவல்துறையினரின் ஒருபகுதி திசைதிருப்பி மறைப்பதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உண்மை குற்றவாளிகள் மற்றும் வழக்கை மூடி மறைக்க முயற்சித்த காவலர்கள் தண்டிக்கப்படுவதற்காக இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும். இந்த விசாரணை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
வாழ்க்கை இணையரை தேர்வு செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுவானது. அதனை நிராகரிப்பதும், கொலை செய்வதும் அரசியல் சாசனத்திற்கு மட்டுமல்ல, மனித மாண்புகளுக்கே எதிரானது. சாதி மறுப்பு, பாலின சமத்துவம் போன்ற விழுமியங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது முக்கியமானது என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
வாக்கு வங்கி அரசியல் மற்றும் சாதிய கண்ணோட்டம் காரணமாக இத்தகைய ஆணவக் கொலைகளை கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அநீதிகளுக்கு எதிராக சாதி, மதம் கடந்த ஒற்றுமை கட்டமைக்கப்பட வேண்டும் என கருதுகிறது.
தீர்மானம் – 3:
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தல்களை நேரடி தேர்தல்களாக நடத்திடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு வேண்டுகோள்!!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதையொட்டி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான தயாரிப்புகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட காலமாக நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்கின்ற நேரடி தேர்தல்களாக நடைபெற்று வந்தன. கடந்த அஇஅதிமுக ஆட்சி காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தலை நேரடி தேர்தலாக நடத்தாமல் கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்ற மறைமுக தேர்தலாக நடத்தும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதில் ஜனநாயக முறைகேடுகளும், ஊழல்களும் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதால் மீண்டும் நேரடித் தேர்தல்களாகவே தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் அரசை வலியுறுத்தி வந்தன. அப்போது எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடி தேர்தலாகவே நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தல்கள் நடத்த நடவடிக்கைகள் எடுத்து வரும்போது தலைவர் தேர்தலை நேரடி தேர்தல்களாக நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படாமல் மறைமுக தேர்தல்களாக நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த மறைமுக தேர்தல் என்பது மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதற்கும், ஜனநாயக விரோதமான முறையில் ஆள்கடத்தல் மற்றும் பல லட்சம் ரூபாய்க்கான பேரங்கள் நடப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இது மக்களினுடைய உண்மையான தேர்வாக அமையாது. ஜனநாயக மீறல்கள் நடப்பதற்கு வழிவகுக்கும்.
எனவே, ஏற்கனவே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தலை நேரடி தேர்தலாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளதால், மக்களும் ஜனநாயக முறையில் முறைகேடுகளற்ற வகையில் தலைவர் தேர்தல் நடைபெற வேண்டுமென்று விரும்புவதால் தமிழக அரசு தேவையான சட்டத்திருத்தத்தை அவசர சட்டமாக பிறப்பித்து நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தல்களை நேரடி தேர்தலாக நடத்திட முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்).