அரசியலில் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் பல பணிகள் இருக்கும், இருப்பினும் நாம் அவரை தொடர்புகொண்ட நாளிலேயே நமக்காக நேரம் ஒதுக்கி நாம் கேட்ட அனைத்தும் கேள்விகளுக்கும் எந்த தயக்கமும் இன்றி சிறப்பாக பதில் அளித்தார். அவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.
எதையெல்லாம் மன்னார்குடி நகராட்சியின் தற்போதைய பிரச்சனைகளாக நீங்கள் பார்க்கிறீர்கள்?
தூய்மை பணியை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்.
என்னுடைய பணிக்காலத்தில் கொண்டு வந்த நூலகத்தை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும், இதன் மூலம் பல பள்ளி மாணாக்கர்கள் தொடர்ந்து பயன்பெற இது பெரிதும் உதவும்.
கோபாலசமுத்திரம் போன்ற உள்ளூர் அரசு பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சிகளை மாணாக்கர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் செலவை நகராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குடியியல் தேர்விற்கு நகராட்சியின் மூலம் பயிற்சி வழங்க வேண்டும். என் பணிக்காலத்தின் பொழுது இதற்கென தீர்மானம் போடப்பட்டது. அதை மேற்கொண்டு முயற்சி செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் சென்னை போன்ற ஊர்களுக்கு சென்று படிக்கும் நிலை குறைக்கப்படும்.
என்னுடைய பணிக்காலத்தில் பொழுதுப்போக்கு பூங்கா (Theme park) 2 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. அதை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். அதை உருவாக்க R.P. சிவம் நகரில் நகராட்சிக்கான இடம் கைவசம் உள்ளது. மிக பெரிய பொழுது போக்கு இடமாக அது அமையும்.
தெப்பக்குளம் படகு வசதி ஏற்ப தர வேண்டும், மற்றும் இதை சுற்றுலா கோணத்தில் மேம்படுத்த வேண்டும்.
நகராட்சியில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?
நகராட்சியில் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாக ஆணையரகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
மன்னார்குடியை முன்மாதிரி நகராட்சியாக மேம்படுத்த உங்களிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன?
காற்றை தூய்மைப்படுத்த வீட்டிற்கு வீடு மூங்கில் போன்ற மரங்களை கொடுத்து வளர்க்க செய்து தூய காற்றை மக்கள் பெற செய்ய வேண்டும்.
சிறப்பான கல்வி அனைவருக்கும் தர வேண்டும்.
பல வணிக கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
குடிசைமாற்று வாரிய உதவியுடன் பலருக்கு வீடு கட்டி தர வேண்டும்.
மாநகரத்திற்கு இணையான கட்டமைப்பு மன்னார்குடியில் வேண்டும், அதே நேரம் நகரத்திற்கான வாழ்க்கை முறை உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.
இறைவழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்களுக்கு மரக்கன்று, செடிகளை கொடுக்கலாம், மக்கள் நம்பிக்கை வழியாக மாற்றம், வளர்ச்சியை கொண்டு வர இயலும். இதன் மூலம் பருவநிலை மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் நம் நிலத்தை நாம் காக்க இது பெரிதும் உதவும்.
அடிப்படை தேவைகளை விரைவாக சரிசெய்து அதன் அடுத்தக்கட்டமாக பணிகளை துவங்க வேண்டும்.
என் பணிக்காலத்தில் சுமார் 22 கோடி செலவில் நீர்நிலைகளை மீட்க கேட்டுள்ளேன். இன்றைய நிலையில் அதற்கு அதிகம் தேவைப்படலாம்.
நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபடாமல் இருக்க வேண்டும்.
என் பணிக்காலத்தில் நெகிழியை பயன்பாட்டை குறைக்கபட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து மக்களிடம் இருந்து பெற்ற நெகிழியை பயன்படுத்தி ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு E.B. நகரில் சாலை போடப்பட்டது. இன்றும் பயன்பாட்டில் அந்த சாலை உள்ளது. இதை மேலும் தொடர வேண்டும்.
பல வீடுகளை திறம்பட நிர்வகிக்கும் பெண்களுக்கு மத்தியில், தங்களைப்போன்ற வெகு சிலரே அரசியலுக்கு வருகிறார்கள். பல பெண்கள் அரசியலுக்கு வர என்ன மாதிரியான கல்வியை, விழிப்புணர்வை பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கு வரும் விசயங்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி இருந்தால் போதும். மற்றும் சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் உற்று நோக்க வேண்டும். தங்களுக்கு பிடித்த நூல்களை தொடர்ந்துபடிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் அடிப்படை சட்டம் தெரிந்து இருப்பது நல்லது.
மற்றும் இங்கு சக போட்டியாளர்களாக பெரும்பாலும் ஆண்களே உள்ளார்கள். இங்குள்ள பெண்களின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கடைசியாக அவர்களை ஒடுக்க எடுக்கும் ஆயுதம் என்றால் அது “அவர்களின் நடத்தை சரியில்லை” என்று கூறுவது தான்.
இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் இவைகளை பொருட்படுத்தாமல் முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்.
மன்னார்குடியின் வளர்ச்சிக்கு அரசியல் கடந்து நீங்கள் எப்படி பிறருடன் நட்பு பாராட்டி செயல்படுகிறீர்கள்?
அரசியல் கடந்து அனைவருடனும் நட்பு பாராட்டுகிறேன். கொள்கையில் மாறுபட்டு இருப்பது அரசியல் மேடையில் மட்டுமே.
மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் அவர்கள் எனக்கு நண்பர்களே.
அரசியல்வாதியாக பயணிப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?
சக போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் போட்டி இருக்கும், ஆனால் அரசியலில் மட்டுமே பல்முனை சவால்கள் இருக்கும். அதை என்னால் முடிந்தவரை திறம்பட கையாண்டு வருகிறேன்.
உள்ளூர் அரசியல் ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளில் உள்ள அரசியல் பற்றி அறிந்துக்கொள்ள தங்களுக்கு போதுமான அளவு நேரம் கிடைக்கிறதா?
நேரம் செலவிட்டு கவனிக்கிறேன், குறிப்பாக கியூபா நன்றாக இருக்கும் அதைப் போன்று நம் நிலத்தில் மருத்துவம், கல்வியை போன்றவற்றை முழுவதும் இலவசமாக கொண்டு வர வேண்டும் என்பதே எண்ணம்.
ஒவ்வொரு நாட்டில் உள்ள நல்லவைகளை நாம் கவனத்தில் கொண்டு, ஆய்வுக்கு உட்படுத்தி நம் நிலத்திற்கு ஏற்ப அவைகளை செயல்படுத்த வேண்டும்.
உங்களுக்கு பிடித்த நூல்கள்?
ஓசோ,
பிடல் காஸ்ட்ரோ பற்றி நூல்
வாழ்க வளமுடன்
The Secret
குடும்ப பொறுப்பிற்கு இடையில், இந்த அரசியல் பணிகளுக்கு சராசரியாக எவ்வளவு நேரம் தங்களால் ஒதுக்க இயல்கிறது?
வேலைக்கு தகுந்த நேரத்தை ஒதுக்கி உள்ளேன். பெரும்பாலும் நகராட்சியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செலவிட்டுள்ளேன். பணி காலத்தில் நான் வீட்டில் நேரம் செலவிட்டதை விட, நகராட்சி அலுவலகத்திலும், அதன் பணிகளிலும் அதிக நேரம் செலவிட்டுள்ளேன்.
சராசரியாக மாநில அரசிடம் இருந்து மன்னார்குடி நகராட்சிக்கு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள்?
நகராட்சி என்பது சுயாட்சி போன்றது, நகராட்சி வருவாய் மூலமே கையாள வேண்டும். மேற்கொண்டு செயல்படுத்த நினைக்கும் திட்டங்களுக்கு ஏற்ப அந்தந்த மாநில அமைச்சகத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற வேண்டும்.
உதாரணத்திற்கு சுற்றுலா தொடர்பான திட்டம் என்றால், அந்த துறை அமைச்சகத்திடம் நிதி கேட்போம்.
மாநில அரசிடம் இருந்து மன்னார்குடி நகராட்சிக்கு வழங்கப்படும் நிதி இல்லாமல், மத்திய அரசிடம் இருந்து நமக்கு நிதி கிடைக்குமா? ஆம் எனில் சராசரியாக எவ்வளவு வழங்குவார்கள்?
ஆம், மத்திய அரசிடம் இருந்து பணம் வரும். ஆனால் அதை நாம் தான் தேவைக்கு ஏற்ப கேட்டு பெற வேண்டும்.
உதாரணத்திற்கு என்னுடைய பணிக்காலத்தில் கட்டப்பட்ட மீன்சந்தை கட்டிடத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் தேவைப்பட்டது.
அதை தமிழக மீன்வள துறை அமைச்சகத்திடம் கேட்ட பொழுது, மாநில அரசு உச்சவரம்பு மன்னார்குடி போன்ற தேர்வுநிலை நகராட்சிக்கு 40 முதல் 50 லட்சம் வரை மட்டுமே என்று கூறினார்கள்.
மாநில மீன்வள துறையை அலுவலரே மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து, பின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நம் மன்னார்குடி நகராட்சி மீன்சந்தை கட்டிடத்திற்கு ரூ.80 லட்சம் நிதி உதவி வழங்கினார்கள். அதனுடன் மன்னார்குடி நகராட்சியின் வருவாயில் இருந்தும் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டிட பணி நிறைவு பெற்றது.
ஆனால் மீன் சந்தை திட்டத்திற்கு மட்டும் 4 ஆண்டுகள் அலைந்தேன்.
மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட பகுதியில் இருந்து நமக்கு வரும் வருவாயின் அளவு என்ன? மற்றும் அது நகராட்சி பணிகளை கையாள போதுமானதாக இருந்துள்ளதா உங்கள் பணி காலத்தின் பொழுது?
என் பணிக்காலத்தில் ஆண்டு வருமானம் சுமார் 10 கோடி மட்டுமே, அதில் நகராட்சி பணியாளர்களுக்கான சம்பளம் மட்டுமே மாதத்திற்கு சுமார் ரூ.40 லட்சம் வந்தது.
மாநில நிதித்துறை 4 அல்லது 5 மாதத்திற்கு ஒரு முறை 2 கோடி ஒதுக்குவார்கள். நம் மன்னார்குடி நகராட்சிக்கு வழங்கினார்கள்.
முதல் 2 ஆண்டு பற்றாக்குறையாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தேன். அதன் பின் அமைச்சர்கள் மூலம் போதிய நிதிகளை பெற்று படிப்படியாக 3 ஆண்டு நிதிநிலை உபரியாக இருந்தது.
மன்னார்குடி நகராட்சியின் வருவாயை பெருக்க நிர்வாகம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினால் வரியை ஏற்ற இயலும். என் காலத்தில் அதை தற்காலிமாக நிறுத்தி வைத்து இருந்தேன் மேம்படுத்திய பின்னர் கொண்டு வரலாம் என்று.
பழைய கட்டிடங்களை கொடுத்து கூடுதல் நிதி கேட்டால் சரியாக இருக்காது.
தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் நகராட்சியின் நிர்வாகம் இணையம், செயலி போன்றவைகள் மூலம் வெளிப்பட தன்மையை பின்பற்றுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
அதில் எனக்கு உடன்பாடு உண்டு. என்னுடைய பணிக்காலத்திலேயே நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணினி போன்று கொடுக்க உரையாடல்கள் சென்றது. ஆனால் நடைமுறைபடுத்த இயலவில்லை.
நகராட்சியை மேம்படுத்த மக்களின் கருத்துகளை எப்படி பெற்று, ஆய்விற்கு உட்படுத்தலாம் என உங்கள் பார்வையில் கூறுங்கள்.
அன்றைய தினம் Walkie-talkie பயன்படுத்தி கருத்துகளை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் சேகரித்தோம். இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப WhatsApp, Website, App போன்றவைகள் மூலம் மக்கள் கருத்துகளை எளிதாக பெறலாம்.
நகராட்சி பணியாளர்களின் குறைகளை தீர்க்க என்னென்ன வழிகளை கையாள வேண்டும்?
தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக இருக்க அவ்வப்பொழுது போதிய மருத்துவம் செய்து தர வேண்டும், கை உறை, மற்றும் இதர கருவிகள் தர வேண்டும்.
மன்னார்குடி நகராட்சியில் தானே குப்பைத்தொட்டி எடுத்து கொட்டுவது போன்று Hydaurlic Machine கொண்டு வந்தது நான் தான்.
மன்னார்குடியில் 4 வாட்டில் பாதாள சாக்கடை 40 – 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் பல பாதாள சாக்கடைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் தான் அதிக விழிப்புணர்வு இந்த துறையில் வந்துள்ளது.
நகர்மன்ற தலைவராக நீங்கள் இருந்த பொழுது எந்தெந்த பணிகளை கையாண்டீர்கள்?
அலுவல் நிர்வாகம் மட்டுமின்றி பொதுமக்களின் மக்கள் குறைகளை கவனித்து செயல்பட்டேன்.
எந்த மாதிரியான பிரச்சனைகள் மற்றும் தேவைகளுக்கு பொதுமக்கள் நகராட்சியை நாடலாம்?
மக்களுக்கு தேவையான நீர், சாலை, சுகாதாரம் என அனைத்திற்கும் தொடர்புக் கொள்ளலாம்.
மன்னார்குடி நகராட்சி நீங்கள் நகர்மன்ற தலைவராக இருந்த பொழுது சிறந்த நகராட்சிக்கான விருதை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களிடம் பெற்றது. மீண்டும் நீங்கள் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பெற்றால் எந்த மாதிரியான பணிகளை செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள்?
தற்போதைய மன்னார்குடி பேருந்து நிலையம் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
நகராட்சிக்கு கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் வணிகங்களை அதிகப்படுத்துதல்.
நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், போக்குவரத்து வசதிகள் மற்றும் மேம்படுத்த வேண்டும்.
தற்பொழுது மன்னார்குடி தலைமை மருத்துவமனை தூய்மைப்படுத்தும் பணி சுகாதார துறையிடம் உள்ளது, அந்த உரிமையை நகராட்சிக்கு பெற்று முன்மாதிரியாக மருத்துவமனையின் தூய்மை பணியை திறம்பட கையாள்வோம்.
சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் மிக குறைந்த இடத்தில் மட்டும் செயல்படுத்தபட்ட பாதாள சாக்கடை வசதியை மன்னார்குடி நகரம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அதற்கான செலவாக சுமார் ரூ.100 கோடி தேவை என முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அதற்கு கூடுதல் தொகை தேவைப்படும். ஒரு வேளை எனக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
பல புதிய பாதாள சாக்கடைகளை உருவாக்க வேண்டும், கழிவுகளை மேலும் திறம்பட கையாள்வோம்.
முன்னாள் முதல்வரிடம் இது தொடர்பாக கற்க, சிங்கப்பூர் சென்று வர கோரிக்கையாக வைக்கப்பட்டது.
இறுதியாக சகோதரி சுதா அன்புச்செல்வன் நம்முடன் பகிர்ந்துக்கொண்டது …
“மன்னார்குடி மக்கள் நல்லதொரு வாய்ப்பு கொடுத்தார்கள். கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது, பின்னடைவும் இருந்தது. அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
பொதுமக்கள் வீடுகளில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்து கொடுத்தாலே மன்னார்குடி நகராட்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கேட்டு கொள்கிறேன்.”