Home>>இலக்கியம்>>திப்பு சுல்தான் – நூல் வாசிப்பு அனுபவம்.

“திப்பு சுல்தான் (முதல் விடுதலைப் புலி)” – மருதன்

“குர்ஆனின் மதங்களிடையே நல்லுறவு என்பது அடிப்படை. குர்ஆன் பிற மதத்தவரின் விக்கிரகங்களை அவமதிப்பதைத் தடுக்கிறது. அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபடுபவர்களை அவமரியாதை செய்யாதீர்கள். அது அல்லாவையே அவமதிப்பதற்கு ஒப்பாகும். அல்லா விரும்பியிருந்தால் உலக மக்கள் அனைவரையும் ஒரே மதமாகப் படைத்திருப்பார் அல்லவா? “ இது கிபி1787ல் மன்னர் திப்பு வின் பிரகடனம்.
“ அதோ, அந்தக் கோயில் மணி ஓசையை ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள். அந்த ஓசை, எந்த மதத்தைச் சேர்ந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா? ஸ்ரீரங்கநாதன் கோயில் இஸ்லாத்துக்கு விரோதமானது என்று யார் சொன்னார்கள்? தேவாலயங்களும் இந்துக் கோயில்களும் வளர்ந்தால் இஸ்லாம் நொடித்துப் போகும் என்று எந்த இறைத் தூதர் சொன்னார்? ஒரு மதம் மற்றொன்றுக்கு விரோதமானது என்பதுதான் உங்கள் முடிவா மதத்தின் பெயரால் விரோதம் வளர்க்கலாம் என்று எந்தப் புனித நூலில் எழுதியிருக்கிறார்கள்? மதம் எதற்கு? ஒன்றுபடுத்தவா பிளவுப்படுத்தவா?

இவை திப்புவின் கேள்விகள்.

உண்மை இப்படி இருக்க திப்புவை மதவாதி என்றும் கதைகட்டியவர்களை என்ன சொல்வது.
திப்பு சுல்தானின் அரசியல், சிந்தனைகள், பொருளாதர கொள்கை, மக்கள் நலம் எல்லாம் படிக்க படிக்க சிலிர்க்க வைக்கிறது.

அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்திலும் இந்த நூற்றாண்டில் நாம் பேசும் அனைத்து சீர்த்திருத்தங்களை அன்றே கொண்டுவருகிறார்.

அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம், தற்சார்பு, அனைவருக்கும் வேலை கொடுக்கவும் நாட்டின் உற்பத்தி பொருளாதரத்தை மேன்படுத்தவும் பட்டு பூச்சிகளை வளர்த்து நூல் எடுக்கும் தொழில்சாலைகளை அமைக்கிறார் ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு. மேலும் மக்களுக்கு முத்துக்குளித்து முத்தெடுக்க மற்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்களை அழைத்துவந்து தன்நாட்டு மக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்.
நூலகம் அமைக்கிறார் நல்ல பிறமொழி நூல்களை மொழிப்பெயர்பு செய்கிறார்.

அதேபோல் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதில் அவரின் செயல் எல்லாம் என்ன சொல்வது மலபார் அவர் கட்டுபாடுக்கு வந்த பிறகு அங்கு ஒரு சமுகத்தை சேர்ந்த பெண்கள் மேலாடை அனியமல் உள்ளதை அறிந்து அதிர்ந்து போகிறார், உடனே அங்குள்ள கவர்னர்க்கு கடிதம் எழுதியுள்ளார் இப்படி, “மலபாரில் பெண்கள் தோள்சீலை இல்லாமல் நடமாடிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது, என் நெஞ்சு வலித்தது. மார்பை மறைக்காமல் பெண்கள் நடமாடுவது நீதிக்குப் புறம்பானது. இடுப்புக்கு மேல் எந்தத் துணியும் அணியாமல் இருப்பதுதான் அந்தக் குறிப்பிட்ட இனப் பெண்களின் வழக்கம் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அவர்களை அழைத்து அதை சீர்திருத்த சொல்லுங்கள்”.

“உங்கள் பகுதியில் குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதித்து வருகிறீர்கள். இனி, குற்றம் புரிபவர்கள் ஒவ்வொரு பகோடா அபராதத்துக்குப் பதில் (ரூ.3.50) கிராமத்தில் இரண்டு மாமரங்கள், இரண்டு பலா மரங்கள் நட்டு, மூன்று அடி உயரம் வளரும் வரை தண்ணீர்விட உத்தரவிடுகிறேன்.” குடிமக்கள் செய்யும் தவறுகளுக்கு இப்படியான தண்டனைகள் கொடுக்கிறார். போர்களில் சிறைபடும் பெண்கள் குழந்தைகளை விடுவிக்கிறார், வெற்றி பெற்றபின் அந்த நாட்டை நம் வீரர்கள் சூரையாடக்கூடாது என உத்தரவிடுகிறார். துரோகிகளை மன்னிக்கிறார் எதிரிகள் என்றாலும் அவர்களும் நம் நாட்டவரே அவர்களை எதுவும் செய்யவேண்டாம். நம் விரோதிகள் ஆங்கிலேயர் மட்டுமே என்பதே திப்புவின் நோக்கமாக உள்ளது.

வாழ்வின் இறுதி நொடி வரை துரோகம் துரோகம் மட்டுமே தொடர்கிறது. அவர் வாழ்நாளில் தேடியது அமைதியை மட்டுமே இறுதி வரை அவருக்கு கிடைக்க வில்லை என்பதே வேதனை. திப்பு ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகல்ந்தார் அகவே தான் ஆங்கிலேயர் அவரை கட்டுக்கடங்காத புலி என்கின்றனர். திப்பு சுல்தானின் வீழ்ச்சி பிறகே தென் இந்தியாவை முழுமையாக ஆங்கிலேயர் கட்டுபாட்டுக்கு கொண்டு வரமுடிந்தது, அடுத்ததடுத்து முத்துவடுகநாதர்,கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர் என அனைவரையும் வீழ்த்த முடிந்தது.

சிறப்பான வரலாற்று பதிவு இந்த நூல் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் இவர்களது ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம். வாய்ப்பு கிடைப்பின் வாசியுங்கள்.

நன்றி…


திரு. மனோ குணசேகரன்,
புள்ளவராயன்குடிகாடு,
மன்னார்குடி.

Leave a Reply