புதுச்சேரி – காரைக்கால் திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த புதுச்சேரி அரசுக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை!
புதுச்சேரி – காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை, வழிபாடு, குடமுழுக்கு ஆகியவற்றை மேற்கொள்ள புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து, கடந்த 19.01.2022 அன்று, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் அவர்களிடம் நேரில் மனு வழங்க புதுச்சேரி அரசுத் தலைமைச் செயலகத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ், நிர்வாகி ஐயா இராஜாராமன், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் நேரில் சென்றனர். செயலாளர் மருத்துவ விடுப்பில் இருந்ததால், அவரது மனு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
“புதுச்சேரி – காரைக்காலில் உள்ள இந்து சமயத் திருக்கோயில்கள் தமிழர்களால் உருவாக்கப்ட்ட பழம்பெருமை வாய்ந்த திருக்கோயில்கள் ஆகும். இக்கோயில்களில் வரலாற்றுக் காலம் தொட்டு தமிழ் மொழியே வழிபாட்டு மொழியாக இருந்தது. தமிழரின் பழம்பெரும் இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த / மறைமொழி தானே மந்திரம் என்ப” என்று நம் தொல்காப்பியம் தமிழ் மந்திரம் பற்றிக் கூறுகிறது. “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறு!” என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் “அர்ச்சனை பாட்டு தமிழே ஆகும்” என்று தேவாரத்தில் பாடியிருக்கிறார். திருநாவுக் கரசர், “போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார்” எனக் கருவறை உள்ளே சென்று வழிபட்டதை குறிப்பிடுகிறார். புதுச்சேரி – காரைக்காலில் உள்ள திருக்கோயில்கள் பெரும்பாலனவற்றில் தமிழிலேயே கல்வெட்டுப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு தமிழ் மொழியிலேயே நடந்து வந்த திருக்கோயில் வழிபாட்டில், பிற்காலத்தில் வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள்தான் தமிழைத் தீண்டத்தகாத மொழியாக அறிவித்து நீக்கிவிட்டு, அவர்கள் கொண்டுவந்த சமற்கிருத மொழியை இங்கே வலிந்து திணித்தார்கள். இதுவே இங்கு நிலைத்து வழக்கமாகி நீடிக்கிறது.
மனிதர்களிடத்தில் வரலாற்றுவழியில் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட பிறப்பு வழியிலான தீண்டாமையை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டம் தீண்டாமையைத் தடை செய்துள்ள நிலையில், இன்று அனைத்துத் துறைகளிலும் தீண்டாமை நீக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோயில்களில் தமிழ் இன்னும் தீண்டப்படாத மொழியாகவே உள்ளது. அதனை நீக்க தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கடந்த 29.8.1997 அன்றும், 18.9.1997 அன்றும் – தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடத்த தமிழ்நாடு – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கைள் வெளியிட்டார். இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது (வழக்கு – வி.எஸ் சிவகுமார் க்ஷிs தமிழ்நாடு அரசு, வழக்கு எண் : W.P. Nos. 15791 and 16932 of 1998 and W.M.P. Nos. 23847 of 1998 and 25575 of 1998, தீர்ப்பு நாள் – 19.03.2008). அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் மற்றும் கே. சந்துரு தலைமையிலான அமர்வு, சமற்கிருதம் மட்டுமே கடவுளை தொடர்பு கொள்ளும் ஒரே மொழி என்ற வாதத்தை நிராகரித்ததுடன், தமிழில் அர்ச்சனை நடத்துவது சட்டப்படியும், ஆகமப்படியும் சரியானதுதான் எனத் தீர்ப்பு வெளியிட்டனர்.
கடந்த 03.09.2021 அன்று, 2008இல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அம்மனுவை விசாரணை நிலையிலேயே தள்ளுபடி செய்து, தமிழில் அர்ச்சனை நடத்தத் தடையில்லை என உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனை மொழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோல், எங்கள் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தபோது, தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (வழக்கு எண் – W.P. (MD) No. 1644 of 2020, தீர்ப்பு நாள் – 31.01.2020). இத்தீர்ப்பையொட்டி கரூர் பசுபதீசுவரர் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
புதுச்சேரி ஒன்றியப் பகுதிக்கென தனி உயர் நீதிமன்றம் கிடையாது. புதுச்சேரியின் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமே ஆகும். எனவே, அங்கு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புகள் புதுச்சேரிக்கும் பொருந்தக்கூடியவை ஆகும்.
இவ்வாறு வரலாற்றின்படியும், சட்டப்படியும் இந்து சமயத் திருக்கோயில்களித் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்த எவ்விதத் தடையும் இல்லாத நிலையில், தமிழர்களின் இன்னொரு முக்கியத் தாயகமாக விளங்கும் நம் புதுச்சேரியில் தமிழில் அர்ச்சனை நடத்த மறுக்கப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது.
எமது தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் புதுச்சேரி – காரைக்கால் இந்து சமயத் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 03.07.2021 அன்று புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் சமயச்சான்றோர்களை ஒன்றுதிரட்டி நாங்கள் அறவழி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். கடந்த 21.08.2021 அன்று புதுச்சேரி அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் முன்பு பக்தர்களிடம் தமிழ்வழி அர்ச்சனைக்காக பரப்புரை இயக்கம் நடத்தி மக்கள் ஆதரவைப் பெற்றோம்.
இந்நிலையில், கடந்த 04.01.2022 அன்று புதுச்சேரி – காராமணிக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் – சுப்பிரமணியர் திருக்கோயிலில் நாங்கள் தமிழில் அர்ச்சனை செய்ய தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் பக்தர்கள் அனைவரும் ஆண்களும், பெண்களுமாக சென்று கேட்டபோது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்துவிட்டனர்.
தமிழுக்காக வாழ்ந்து மறைந்து, புதுச்சேரிக்குப் புகழ் தேடித் தந்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண்ணில், பெரும்பாவலர் பாரதியார் உலவிய மண்ணில், தமிழுக்கு இடமில்லை எனும் நிலை மிகவும் வருந்தத்தக்கது.
எனவே, தாங்கள் அருள்கூர்ந்து இவற்றைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி – காரைக்கால் இந்து சமயத் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்மென தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, இக்கோரிக்கையை ஏற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழர்கள் எழுப்பியுள்ள திருக்கோயில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக – அர்ச்சனை மொழியாக – குடமுழுக்கு மொழியாக அறிவித்து, அதற்கேற்ப அரசாணை வெளியிட வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வலியுறுத்துகிறோம்!”
—
செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை.