அவுட்சோர்சிங் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
ஜூலை 13, 2022
புதுக்கோட்டை, ஜூலை 13 – உயர்கல்வி அமைச்சருக்கே தெரியாமல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்ட மளிப்புவிழா நடத்தியது சட்ட விரோதம் என்று தமிழக ஆளு நருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் புதன் கிழமையன்று அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இரவு-பகல் பாராமல் மக்கள் பணியில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது. அவர் விரைவில் உடல் நம்பெற வேண்டும்.
அத்துமீறும் ஆளுநர்
பல்கலைக்கழகங்களின் வேந்த ராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும், அதற்கு கீழே துணைவேந்தரும் இருக்கின்றனர். மாநில அமைச்சர வையின் முடிவுகளை அமல் படுத்தும் நிலையில் உள்ளவரே ஆளுநர். ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாமல் நடத்து வது முழுக்க, முழுக்க சட்ட விரோதம். உயர்கல்வித்துறை அமைச்சர் விழாவை புறக்கணிப்பது மட்டும் போதாது. ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும் ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பதும் சட்ட விரோதம்தான். தனது வரம்பை மீறி ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவது குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்கத் தயாரா?
ஏழைகளை வஞ்சிக்கும் ரயில்வே
தென்னக ரயில்வே சாதாரண படுக்கைகளை வெகுவாக குறைத்து குளிர்சாதனப் படுக்கைகளை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஏற்கனவே, மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குளிர்சாதனப் படுக்கை உள்ள பெட்டிகளில் வழங்கி வந்த வசதி களும் குறைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான சேவைகளையும் நிறுத்தி ரயில்வே துறையை லாபகரமானதாக மாற்றி தனியாருக்கு விற்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.
தொண்டர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
அதிமுக தற்பொழுது பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா என 3 கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. சேர்த்த ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவே அதிமுகவுக்குள் சண்டை நடந்துகொண்டு இருக்கிறது. இவர்களால் அதிமுக தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ எந்தப் பயனும் விளையப் போவதில்லை. அவர்கள் தங்களது தொண்டர்களை மட்டுமல்ல. நீதி மன்றத்தையும் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
வேலையில்லாத் திண்டாட்டம்
திமுக அரசு சில நல்ல திட்டங் களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை. பல வருடங்களாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர், அரசு ஊழியர், சத்து ணவு, மருத்துவத் துறைகளில் அதிமுக அரசு கடைப்பிடித்த அவுட் சோர்சிங் முறையையே திமுக அரசும் கடைப்பிடிப்பது சரியல்ல. அவுட் சோர்சிங், மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை முழுமையாக ரத்துசெய்து பணிநிரந்தம் செய்ய வேண்டும். இதற்கு நிதிநிலையை காரணம் காட்டக்கூடாது. மக்களுக்கு வேலை கொடுத்தால்தான் வாங்கும் சக்தி அதிகமாகும். அரசுக்கும் வருமானம் வரும். போக்குவரத்து, மின்வாரியத் தொழிலாளர்கள் தொடர்ந்து வஞ்சி க்கப்படுகின்றனர். 30, 35 ஆண்டுகள் பணியாற்றிய போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் போது கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் கிடைப்பதில்லை. வெறும் 5 ஆயிரம், 6 ஆயிரம் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்? இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:
திமுக அரசு மீது நாங்கள் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக நீங்கள் கூறுவது ஏற்புடையது அல்ல. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் உள்ள பாசிச பாஜக அரசை முறியடிப்பதில் திமுகவோடு இணைந்து நிற்போம். மற்றபடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சமரசமில்லை. மக்களுக்கு பாதகமென்றால் எதிர்த்துப் போராடுவதிலும் ஒரு போதும் தயங்கியதில்லை. நீதிமன்றத்தை காரணம் காட்டி ஏழைகளின் குடியிருப்புகளை இடித்தபோது நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம்.
போக்குவரத்துத்துறையை அரசுடைமை ஆக்கியதே கலைஞர்தான். மீண்டும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று நம்புகிறோம். தனியார்மயமாக்கினால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்பது அவர்களுக்குத் தெரியும். அமைச்சர்கள் நிதானம் காட்ட வேண்டும்.
அதிகாரிகளை, பொதுமக்களை அமைச்சர்கள் சந்திக்கும்போது மிகவும் நிதானம் காட்ட வேண்டும். இதுகுறித்து முதல்வரும் அறி வுறுத்திக்கொண்டுதான் இருக் கிறார். அதையும் மீறி சில சம்பவங் கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. ராஜகண்ணப்பனின் துறையை மாற்றியது மட்டும்போதாது; அவர்மீது வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள்தான் வலியுறுத்தினோம். ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சில ஆதரிப்பதால், அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று ஆகாது. உண்மையில் பாஜக தலைமைக்கு துணிவு இருந்தால் தங்கள் கட்சியைச் சோர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரை நிறுத்தி இருக்க வேண்டும். அப்படி நிறுத்தினால் அவர்கள் வெற்றிபெற முடியாது என்பது தெரிந்துதான் பழங்குடியினப் பெண் வேட்பாளர் என்று நிறுத்தியிருக்கின்றனர்.
பழங்குடியினர், பெண் என்பதால்தான் அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலை கருதி சில கட்சிகள் ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பகிரங்கமாக தங்களின் முக்கியத் தலைவர் ஒருவரை நிறுத்த முடியாததே பாஜகவுக்கு பின்னடைவுதான். இந்த நிலை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருபோதும் ஏற்படாது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சு.மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.