தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அடாவடி.
சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகளை பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய பொறியியல் கல்லூரியில் சேர்க்க விரும்பினார்.அதற்காக counseling(ஒற்றைச்சாளர)முறையில் அரசு இடஒதுக்கீட்டின்படி திருச்செங்கோட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற பெண்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தார். ஒற்றைச் சாளர முறையில் அந்த சுயநிதி பொறியியல் கல்லூரிக்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் என்பது வருடம் 40000ரூ.
தன் பொருளாதாரத்திற்கு கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் என்பதால் நண்பர் மன மகிச்சியோடு அதைத் தேர்வு செய்தார்.
கல்லூரியில் சேர்ப்பதற்காக அங்கே சென்ற பின் கவுன்சிலிங் முறையில் வந்தவர்களை அவர்கள் நடத்தும் விதம் வேறு விதமாக இருப்பதை உணர்ந்தார்.
கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் முன் வந்தவர்களின் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அது புது அனுபவமாக இருக்க, அதற்கான காரணம் என்ன என்று நண்பர் கேட்க,இதுதான் இங்கு விதிமுறை என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லி இருக்கின்றார்கள்.
பின் சேர்க்கைக்காக கல்லூரி அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டும் நேரத்தில் அங்கே அவர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வருடம் ரூ 185000 கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் கவுன்சிலிங் முறையில் வந்துள்ளோம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் வருடம் நாற்பதாயிரம் ரூபாய்தானே.பின் எதற்காக இவ்ளோ அதிகமா கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு முறையான பதிலும் இல்லை. இதுதான் அவர்கள் கல்லூரியின் நடைமுறை என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார்கள்.
நண்பரும் இறுதியாக தன் மகளை கல்லூரியில் சேர்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி வந்திருக்கிறார்.
அந்த திருச்செங்கோடு கல்லூரி மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக கேட்கிறார்கள்.
பின் எதற்காக கவுன்சிலிங் என்ற ஒரு முறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்??
கவுன்சிலிங் என்பது அரசாங்கக் கல்லூரிகளுக்கு மட்டும் தான், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு போகலாமே.
என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றார்.
மிக நியாயமான ஆதங்கம் தானே. பெரும்பாலான தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். அவரகளுக்கு எதிராகப் புகார் கொடுத்தாலும் வலுவான ஆதாரம் ஏதும் சிக்காது. தாங்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சாதிப்பார்கள். அதற்காகத்தான் ஆதாரங்கள் வெளியே போய் விடக்கூடாது என்ற காரணத்திற்காக முதல் வேலையாக கைபேசிகளை பறிமுதல் செய்கிறார்கள். மேலும் இவர்கள் வாங்கும் கட்டணத்திற்கு முறையான ரசீதும் கிடையாது. துண்டு சீட்டில் மட்டுமே எழுதிக் கொடுப்பார்கள் அதை எடுத்துக் கொண்டு போய் புகார் அளிக்கவும் முடியாது.
தொடர்ந்து இதுபோன்ற பல அநீதிகள் பல ஆண்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது அரசாங்கத்திற்கு தெரிந்தும் தெரியாது போல் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். காரணம் பல தனியார் பொறியியல் கல்லூரிகளை வைத்திருப்பவர்கள் அரசியல் செல்வாக்குடையவர்களாக இருப்பதுதான். மேலிடத்தில் தங்களுக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தனியார் கல்லூரிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும். கவுன்சிலிங்கில் விதிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வாங்கும் கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி என்பது ஏற்கனவே தமிழ்நாட்டில் பெரிய வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் இரும்புக்கரம் கொண்டு இந்த அநியாயத்தை அடக்க வேண்டியது அரசின் கடமை.
எப்படி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் பெறுபவர்களை பொறிவைத்து பிடிக்கிறார்களோ, அதேபோல தனியார் கல்லூரிகளையும் கண்காணித்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும்.
இப்படி செய்தால் தான் ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவு என்பது நிறைவேறும். நல்ல மதிப்பெண்கள் பெற்றும் அரசு இட ஒதுக்கீடு கிடைத்தும் இறுதியில் படிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள். கடைசியில் நண்பர் மனம் வெறுத்து போய் தன் சொந்த ஊரிலேயே ஒரு கலைக் கல்லூரியில் தன் மகளை சேர்க்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
ஏற்கனவே நீட் தேர்வு வந்து நம் மாணவர்களின் மருத்துவப் படிப்பை வெறும் கனவாக ஆக்கிவிட்ட சூழலில் , இப்போது பொறியியல் படிப்பும் அந்த வரிசையில் சேர்ந்து விடும் போல.அடுத்து மிச்சம் இருப்பது கலைப்படிப்புதான். அந்தக் கனவையும் தகர்த்து விட்டால் பின் நமக்கு மேல்படிப்பு என்பதே வெறும் கனவாகிவிடும்.
அரசாங்கம் தயவு கூர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மாணவர்களின் மேல்படிப்பு கனவை நினைவாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
செய்வார்களா??
முடிந்தவரை இந்த கட்டுரையை அனைவருக்கும் பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி