ஆவின் அதிகாரிகளின் தவறை மறைக்க மளிகைக் கடைக்காரரை பலிகடா ஆக்குவதா? -பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
“தாய்ப்பாலுக்கு நிகரானது ஆவின் பால்” என அரசு விளம்பரம் செய்து தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினுடைய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் சூழலில் ஆவினில் பணியாற்றுகின்ற பொதுமேலாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எவரும் தங்களின் கடமையை சரிவர செய்வதில்லை என்பதற்கு சாட்சியாக ஆவின் பால் பாக்கெட்டிற்குள் ஈ, பல்லி, புழு இருந்த அருவருக்கத்தக்க நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதும், பாக்கெட்டில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட மிகக் குறைவான அளவில் உற்பத்தி செய்த பால் பாக்கெட்டுகள் நுகர்வோருக்கு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அண்மை காலங்களில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து வந்த செய்திகள் உறுதிபடுத்துகின்றன.
அப்படிப்பட்ட சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை, சேத்துப்பட்டில் நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கவும், தங்கள் பக்கம் உள்ள தவறுகளை மறைக்கவும் மளிகைக் கடைக்காரர் மீது பழி போட்டு ஆவின் அதிகாரிகள் தப்பிக்க நினைப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏனெனில் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் 24 பால் பாக்கெட்டுகள் கொண்ட டப்புகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் அதனை ஒதுக்கி ஓரம் வைத்து விட்டு சுத்தமான காலி டப்புகளில் பால் பாக்கெட்டுகளை அடுக்கி சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் செய்வதை பால் முகவர்களாகிய நாங்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். மேலும் சில்லறை வணிகர்களும் தங்களின் குளிர்சாதன பெட்டியில் பால் பாக்கெட்டுகளை அடுக்கும் போது நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகே அடுக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் போது பால் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புழு ஒட்டிக் கொண்டிருக்க 100% வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தனியார் நடத்தும் வணிக நிறுவனங்களிலோ, உணவகங்களிலோ இது போன்ற தவறுகள் நடைபெற்றதாக தகவல் கிடைத்த உடன் உடனடியாக அங்கே அதிரடி சோதனைகள் மேற்கொள்ளும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைவு, பால் பாக்கெட்டில் ஈ, பல்லி, புழு, ஆவின் இனிப்புகளில் பூஞ்சை, காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப் போன இனிப்புகள் மற்றும் பால் பொருட்கள் என்றெல்லாம் ஆதாரங்களோடு தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும் கூட இதுவரை ஒரு பால் பண்ணையிலோ, ஆவின் பாலகங்களிலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை செய்யாதது ஏன்..? அந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், ஆவின் பால் பண்ணைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு இதுவரை ஏன் உத்தரவிடவில்லை..? எனத் தெரியவில்லை.
ஒருவேளை இதே குற்றச்சாட்டுகள் தனியார் பால் நிறுவனங்கள் மீது எழுப்பப்பட்டிருந்தால் அப்போது தமிழக அரசும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இதே அமைதி காத்திருப்பார்களா..? புலிப்பாய்ச்சல் பாய்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள் தானே..? தங்களுக்கு வந்தால் ரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்கிற ரீதியில் அமைதி காக்கும் தமிழக அரசும், பால்வளத்துறையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையும், ஆவினும் யாரைக் காப்பாற்ற ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள் என தெரியவில்லை.
பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் நலனிற்காக உருவாக்கப்பட்ட பால்வளத்துறையும், ஆவினும் தற்போது அந்த நோக்கத்தில் இருந்து தடம் மாறிச் செல்வது என்பது ஆவினுக்கு மட்டுமல்ல பால் உற்பத்தியாளர்களையும் வீழ்ச்சியடையச் செய்து விடும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பையும் கபளீகரம் செய்து விடும் என்பதையும், அது ஆவின் நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறது.
எனவே தற்போது ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தரம் குறைந்து வருவதாக அல்லது தரமின்றி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தவறுகள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் 27மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலும், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்து அவற்றை பதப்படுத்தி இருப்பு வைக்கப்படும் கிடங்குகள் உள்ளிட்டவற்றிலும் அவற்றின் தரம், சுகாதாரம் போன்றவை முறையாக பேணப்படுகிறதா..?
அங்கே சுற்றுப்புறச்சூழல் சரியான பாதுகாப்பு நடைமுறைகளோடு பராமரிக்கப்படுகிறதா..? என்பதை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை, பால்வளத்துறை அதிகாரிகள், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
—
திரு. சு.ஆ. பொன்னுசாமி,
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
21.10.2022 / பிற்பகல் 1.08 மணி.