Home>>அரசியல்>>தமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்!
அரசியல்இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேளாண்மை

தமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்! –
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


இந்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத்துறை ஏல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் – அரியலூர் – தஞ்சாவூர் – திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கிழக்கு சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய மூன்று வட்டாரங்களில், எந்தெந்த கிராம விளை நிலங்களுக்குக் கீழே எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துச் செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உட்பட பல விவரங்களை அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் (Vadaseri Lignite Block) எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், அரியலூர் மாவட்டம் – உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில், இத்திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்கத் தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்க அழைப்பு விடுத்துள்ளது இந்திய அரசின் சுரங்கத்துறை! ஏலம் கேட்கக் கடைசி நாள் 2023 மே 30 என்றும், நிலக்கரிச் சுரங்கத்றையின் தேர்வுக்கழு 2023 சூலை 14 அன்று தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர் பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பும் என்றும் சுரங்கத்துறை ஏல அறிவிப்பு கூறுகிறது (நாள் – 29.03.2023).

வடசேரி நிலக்கரி வட்டாரத்தில், தஞ்சை மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர், கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி ஆகிய ஊர்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கேட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை முதலிய கிராமங்களிலும் – இவற்றின் நெல் வயல்களில் நிலக்கரி எடுக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களில் மீத்தேன் எடுக்க இந்திய அரசு ஆழ்குழாய்களை இறக்கியபோது, உழவர்களைத் திரட்டிக் கொண்டு அவற்றைப் பிடுங்கி எறிந்து, மக்கள் திரள் போராட்டம் நடத்தினார் இயற்கை வேளாண்மைப் புரட்சியாளர் ஐயா நம்மாழ்வார். உழவர்கள் பெருந்திரளாகத் திரண்டு இப்போராட்டங்களை நடத்தினர். அப்போது முதல்வராக இருந்த செயலலிதா அம்மையார் 2015இல் மீத்தேன் எடுக்க நிரந்தரத் தடை விதித்து ஆணை இட்டார்.

அதன்பிறகு, சூழ்ச்சியாகப் பெயரை மாற்றிக் கொண்டு ஐட்ரோ கார்பன் எடுப்பதாகச் சொல்லி ஆழ்குழாய்கள் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி. இறங்கியபோது, கட்சி சார்பற்ற தன்னார்வப் போராளிகள் அங்கங்கே மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர். எமது காவிரி உரிமை மீட்புக் குழுவும், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் இப்போராட்டங்களில் பங்கெடுத்தன. தோழர்கள் கைதானார்கள். காவிரிப்படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரினர். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 2020 பிப்ரவரியில் அதற்கான சட்டப் பாதுகாப்பைச் செய்தார்.

ஆனால், இப்போது பழுப்பு நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரிபொருட்களை எடுக்க இந்திய அரசு சுரங்கத்துறை ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டவிரோத வேலைகளை நரேந்திர மோடியின் இந்திய அரசு எந்தத் துணிச்சலில் செய்கிறது? இங்குள்ள தி.மு.க. அரசுக்கு வடசேரி வட்டத்தில் 66 ஆழ்கிணறுகளும், மைக்கேல்பட்டியில் 19 ஆழ்கிணறுகளும் தோண்டி, பல மாதங்களாக நடத்திய ஆய்வுகள் தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா அல்லது இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்புகழ்ச்சியிலேயே காலம் கழிக்கிறதா என்ற வினாக்கள் எழுகின்றன.

இப்போது முதல்கட்ட ஆய்வு தான் நடந்துள்ளது. அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சொல்வது, என்ன நேர்மை? இது வேளாண்மை அழிப்பு – சுற்றுச்சூழல் கேடு மட்டுமல்ல, தமிழர் தாயகத்தை சிதைக்கும் நடவடிக்கையும் ஆகும்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இப்பொழுதாவது விரைந்து செயல்பட்டு, காலக்கெடு விதித்து அதற்குள் தமிழ்நாட்டில் அறிவித்துள்ள பழுப்பு நிலக்கரி ஏல அறிவிப்பை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். காவிரிப்படுகை பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நீடிக்க இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்து அழுத்தம் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு,
பேச: 98419 49462, 94432 74002

Leave a Reply