திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 30 ஆண்டுகளுக்கு மேலான குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் அகற்ற நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற உறுப்பினர் திரு.க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற வளர்ந்து வருகின்ற நகரம் ஆகும், இந்த நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் உள்ள குப்பைகளை கடந்த 30 ஆண்டுகளாக கொட்டபட்டு மலை போல் குவிந்துள்ளதால் பல்வேறு பாதிப்புகள் எழுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், அவ்வப்போது குப்பைக் கிடங்குகளில் பற்றிக் கொள்ளும் தீ காரணமாகவும், சுகாதாரச் சீர்கேடு, காற்று மாசு என பாதிப்புகள் அதிகம். இந்த குப்பை மேட்டிற்கு 200 மீட்டர் தூரத்தில் தான் அரசு மருத்துவமனையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் 30 ஆண்டுகால பிரச்சினைக்கு முடிவு கட்டிடும் வகையில் இந்த குப்பை மேட்டை பயோ மைனிங் முறையில் அகற்ற வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் 30:05:2021 அன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடமும், 23:07:2021 அன்று மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடமும் கோரிக்கை வைத்தோடு சட்டமன்றத்திலும் வினா எழுப்பினார்.
இதனை அடுத்து 24/08/2021 செவ்வாக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை மேட்டை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்து பயோ மைனிங் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கபடுவதாக அறிவித்தார், இந்த அறிவிப்பை அடுத்து சூழலியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
—
செய்தி உதவி:
கா.லெனின்பாபு
27/08/2021