Home>>அரசியல்>>உண்மையிலேயே மன்னார்குடி மின்னுமா??
அரசியல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

உண்மையிலேயே மன்னார்குடி மின்னுமா??

கடந்த பத்தாண்டுகளில் “மின்னும் மன்னை” என்ற பெயரில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்களும் மற்றும் அவரை சார்ந்தவர்களும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தவிர தற்போது மன்னைக்கு நீண்ட நாள் தேவையான பாதாள சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களுக்கு தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்றாலும், உண்மையிலேயே மன்னார்குடி எப்போது மின்னும்??

1. மன்னார்குடி நகராட்சியோடு சுற்றியுள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, எல்லை விரிவுபடுத்தப்பட்டு மன்னார்குடி நகராட்சி தங்களை அன்போடு வரவேற்கிறது என்று எல்லை பலகைகள் இடம் மாற்றப்பட்டு
புது வர்ணப்பூச்சிகளோடு இருக்கும்போது.

2. புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறப்புவிழா கல்வெட்டில் மாண்புமிகு முதல்வர் பெயர் இடம்பெறும் போது.

3. பாதாளச் சாக்கடை பணி நிறைவுற்று தெருக்கள் தோறும் ஓடும் கழிவுநீர் இன்றியும், சேகரிக்கப்பட்ட திரவக்கழிவுகளை முறையாக சுத்திகரித்து கழிவு மேலாண்மை செய்யும் போதும், சாக்கடை பகுதியிலேயே வாழும் எம் பகுதி மக்களின் தெருக்கள் பளிச்சென்று தூய்மையாக இருக்கும் போது.

4. மன்னை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அறிவிக்கப்படாத, பத்துக்கும் மேற்பட்ட வார்டு மக்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நகரின் மையப் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கு, முறையாக அகற்றப்பட்டு அந்த இடத்தில் உள்விளையாட்டு அரங்கம் உயர் கோபுரமின்விளக்கோடு விளங்கும் போது.

5. நீண்ட காலமாக போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும் நீடாமங்கலம் ரயில்வே கேட் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது.

6. நீர்நிலைக்கு செல்லும் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டு நீர் மேலாண்மையில் மன்னை சிறக்கும் போது.

7.நகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகத்தரமான முறையில் புனரமைக்கப்படும் போது.

8. பாமணிஆறு முறையாக வருடா வருடம் குடி மராமத்து பணிகள் செய்யப்பட்டு, கரையை சுற்றியுள்ள தரிசு நிலங்கள் குறுங்காடுகளாக உருவாக்கப்படும் போது.

9. 2017ல் ஏற்கனவே சொன்ன வாக்குறுதியாம் பின்லே விளையாட்டு மைதானத்தை உலகத்தரம் மிக்க ஒரு விளையாட்டு மைதானமாக மாற்றும் போது.

10. மன்னைக்கு அழகாம் பெரிய கோவில் மற்றும் தெப்பக்குளம் இவ்விரண்டையும் நல்லதொரு சுற்றுலாத்தலமாக மாற்றி முறையாக பராமரிக்கும் போது.

12. மன்னார்குடியில் உள்ள பொதுமருத்துவமனை மற்றும் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் போது.

13. மன்னார்குடியில் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் போது.

14. அதிமுக அரசால் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறுதிகட்ட பணியில் இருந்த மன்னை சுற்றுவட்டபாதைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு சாலையோரம் உள்ள மின் விளக்குகள் புதுப்போலிவோடு தோன்றும் போது.

15. மன்னையில் தரமான ஒரு அரசு பட்டயக்கல்லூரி வரும் போது, இவை யாவும் நிறைவேற்றப்படும் போதுதான் மன்னை உண்மையிலேயே மின்னும். இவை யாவும் நிறைவேற நாங்களும் உங்களுக்கு கரம் கொடுத்து உதவுவோம்!!

இல்லையெனில் கடந்த 10 ஆண்டுகளாக மின்னாத மன்னையை மின்ன வைக்க மிகத்தீவிரமாக குரல் கொடுப்போம்.


கட்டுரை:
அமிர்தராஜா,
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply