Home>>அரசியல்>>கனடிய தேர்தல் களம் -மீண்டும் பிரதமராவாரா தமிழர்களின் அபிமானி ஜஸ்டின் ட்ரூடோ
Justin
அரசியல்உலகம்கனடாசெய்திகள்தேர்தல்

கனடிய தேர்தல் களம் -மீண்டும் பிரதமராவாரா தமிழர்களின் அபிமானி ஜஸ்டின் ட்ரூடோ

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, கனடாவில் 1,89,860 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏழு தமிழ் வேட்பாளர்களில் ஐவர் முதல் தடவையாக இத்தேர்தலில்தான் களமிறங்குகின்றார்கள்.லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவரும், தேசிய ஜனநாயகக் கட்சி, Bloc Quebecois ஆகியவற்றின் சார்பில் தலா ஒருவரும் என தமிழ் வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கியூபெக் மாகாண வரலாற்றில் இதுவரை தமிழர்கள் எவரும் அரசியலில் போட்டியிடாத போதும். எவரும் எதிர்பார்க்காத வகையில் கியூபெக் கட்சியின் சார்பில் வுற்றமொன்ட் தொகுதியில் சோபிகா வைத்தியானந்தசர்மா அவர்கள் போட்டியிடுகின்றார்.

சோபிகா வைத்தியானந்தசர்மா போட்டியிடுகின்ற வுற்றமொன்ட் தொகுதி புதிய ஜனநாய கட்சியின் வசம் உள்ள போதும் சோபிகா அந்த தொகுதியில் கடுமையான போட்டியாளராக மாறி இருப்பதாக கியூபெக் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.இவர்கள் இரு வரும் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

இந்நிலையில் கடந்தவாரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அவருக்கு தேர்தல் களத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் எதிரொலி என்று பேசப்படுகிறது.

கனடா நாட்டில் விரைவில் பிரதமர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்புடன் களமிறங்கினார்.ஆனால், சமீபத்திய எதிர்ப்புகள் அவருக்குத் தேர்தல் களத்தில் சற்றே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதா என்பதை தேர்தல் முடிவுகள் மட்டுமே உறுதிப்படுத்தும்.

கடந்த திங்கள்கிழமையன்று(2021-09-11) தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஜஸ்டின் ட்ரூடோ மீது சிலர் கற்களை வீசி எறிந்தனர். இது தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. இது குறித்து ஜஸ்டின் கூறும்போது, சிலர் என் மீது கற்களை வீசி எறிந்தனர். அவர்கள் பித்துநிலையின் உச்சத்தில் இருந்தனர். அரசியல் பேரணியில் மக்கள் இவ்வாறாக நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
தேர்தலில் ஜஸ்டினை எதிர்த்துப் போட்டியிடும் ஓ டூலியும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசியல் வன்முறையை எந்த காரணத்தைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. நீங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒரு நபரின் மீது எதையும் வீசி எறிவது சரியானது அல்ல என்று கண்டித்துள்ளார்.

ட்ரூடோவுக்கு தேர்தல் களத்தில் ஆதரவு அதிகமாக இருந்த நிலையில் அவர் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்ததாலேயே அவரின் தேர்தல் வெற்றி வாய்ப்பு மங்கி வருவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஜஸ்டின் ட்ரூடோ செல்லும் இடமெல்லாம் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடந்த மாதம் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பேரணியையே அவர் ரத்து செய்யவேண்டியதாக இருந்தது.

ஓ டூலியும் கரோனா தடுப்பூசிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும் கூட அவரது கட்சியின் நிலைப்பாடு கரோனா கட்டுப்பாட்டு மையங்கள், கட்டாய தடுப்பூசித் திட்ட எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

கனடா மக்கள் தொகையில் 83% மக்கள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். இவர்களில் 76% பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தேர்தலுக்கு வெறும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே கடைசி நேர கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் கனடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் கனடாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 151ஆசனங்களையும் , ஒடூல் தலைமையிலான பழமைவாத கட்சி 122 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 29 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 35 இடங்களையும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எந்த கட்சி வெற்றி பெற்றாலும் பெரும் பான்மையை பெற்று கொள்வதில் சவால்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த முறையும் ஜக்மீத் சிங் கனடா அரசியல் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பிருக்கிறது. நடக்கவிருக்கிற தேர்தலிலும், ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஜக்மீத் சிங் மீண்டும் ஒருமுறை கிங் மேக்கராக உருவாக வாய்ப்பிருக்கிறது

அதேவேளை கருத்து கணிப்புகள் படி ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 16 சதவீத வாய்ப்புகளும் லிபெரல் கட்சியினர் சிறுபான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்க 56 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வெறும் 1 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன், கனடா

Leave a Reply