Home>>அரசியல்>>அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை; கால்கள் அகற்றம்: சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் நடந்தது என்ன?
அரசியல்

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை; கால்கள் அகற்றம்: சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் நடந்தது என்ன?


சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப் பிறகும் நடந்தது என்ன? முழு விவரம்.

சென்னை புளியந்தோப்புக்கு அருகில் உள்ள கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. 17 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக முழங்காலில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பரிசோதித்தபோது, எலும்புகளை இணைக்கும் தசைநார்  கிழிந்திருந்தது (Ligament tear) கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக மாணவி சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை (arthroscopy) செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த மாணவியின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த பத்தாம் தேதியன்று கொண்டுவரப்பட்டார்.

இதற்கடுத்து அவருடைய காலின் ஒரு பகுதி அழுக ஆரம்பிக்கவே, அதனை அகற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை மோசமடைந்து, ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து அவர் உயிரிழந்தார்.
ப்ரியாவுக்கு பெரியார் நகரில் நடந்த அறுவை சிகிச்சையின்போது காட்டப்பட்ட அலட்சியமே அவருடைய உயிரை எடுத்திருக்கிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளின்போது, ரத்தப்போக்கை தடுப்பதற்காக பிரதானமான தமனியைச் (artery) சுற்றி Tourniquet எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த ‘டார்னிக்’ கழற்றப்படும்.

ஆனால், ப்ரியாவின் விஷயத்தில் இந்த டார்னிக்கைக் கழற்றுவதில் மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் மிகத் தாமதமாகவே அந்த டார்னிக் அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நேரம் டார்னிக் கட்டப்பட்டிருந்ததால், காலில் Vascular occlusion எனப்படும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால், டார்னிக் கட்டப்பட்டிருந்த பகுதிக்குக் கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்தன.

இந்த நிலையில்தான் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு காலை, அழுகிய பகுதிவரை எடுக்க முடிவுசெய்யப்பட்டு எடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு அழுகிய செல்களை அகற்றும் Debridement treatment எனப்படும் சிகிச்சையும் ப்ரியாவுக்கு நேற்று
ஆனால், சேதமடைந்த தசைப் பகுதியிலிருந்து Myoglobin எனப்படும் புரதம் உருவாகி, ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது. இந்த ‘மையோக்ளோபின்’ சிறுநீரகத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப் புரதம். இந்தப் புரதம் ரத்தத்தில் கலந்ததால், அந்த ரத்தத்தைச் சுத்திகரித்த சிறுநீரகம் செயலிழந்தது. இதையடுத்து கல்லீரலும், அதற்குப் பிறகு இருதயமும் செயலிழந்து மாணவி உயிரிழந்தார்.
உரிய காலத்தில் டார்னிக் அகற்றப்படாததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைக்கும் காரணம் என ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு மருத்துவர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்,

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப்பள்ளிகளை சாமான்ய மக்களே வெறுக்கும் அளவுக்குத்தான் அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் குடிநீர், சுகாதாரம் இவை அனைத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளே ஆக வேண்டும். சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதுஆனால் இன்னும் 1970 களில் உள்ள கட்டமைப்புகளை போலவே உள்ளன.
இதற்கு இத்தனை ஆண்டு காலம் நம்மை ஆண்ட மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன் பலரும் அரசு பள்ளியில் தான் படித்தார்கள். அரசு நியாய விலைக்கடையில் அரிசி ரூ 3 க்கு விற்கப்பட்டது.

ஆனால் இன்றோ நியாய விலைக்கடையில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகள்,மருத்துவமனைகள் முற்றிலுமாக சாமானிய மக்களால் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

கல்வி மருத்துவம் குடிநீர் சுகாதாரம் இவற்றில் நாம் என்றுதான் தன்னிறைவு அடையப்போகிறோம்??

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply