Home>>அரசியல்>>மன்னார்குடியில் எடப்பாடி பழனிச்சாமி – பன்னீர்செல்வம் குழுவினருக்குள் மோதல்.
அரசியல்மன்னார்குடி

மன்னார்குடியில் எடப்பாடி பழனிச்சாமி – பன்னீர்செல்வம் குழுவினருக்குள் மோதல்.

05.12.2022.
மன்னார்குடியில் ஜெயலலிதா நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக் கொண்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதற்கு அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமமுக அணிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி சிலை அருகே ஓபிஎஸ், இபிஎஸ் அணி சார்பில் நினைவு தின பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக சிவநாராயணசாமி தலைமையில் ஓபிஎஸ் அணியினர் இன்று காலை 10 மணிக்கு அங்கு வந்தனர்.

அதே நேரத்தில் நகர செயலாளர் குமார் தலைமையில் இபிஎஸ் அணியினர் வந்தனர். அப்போது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இடையூறாக இபிஎஸ் அணியினர் வைத்திருந்த பேனரை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியினர் கூறினர். அதற்கு இபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இந்த தகவல் அறிந்ததும் மன்னார்குடி ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மற்றும் டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அப்போது இபிஎஸ் அணியினர் அனுமதியின்றி வைத்துள்ள 2 பேனரை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியினர் முறையிட்டனர். இதற்கு இபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் அணியினர் அனுமதியின்றி வைத்த பேனரை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து பேனரை அகற்றாமல் போலீசாருடன் இபிஎஸ் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதன்பின்னர் ஓபிஎஸ் அணியினர், இபிஎஸ் அணியினர் தனித்தனியாக எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மன்னார்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply