இரட்ட.
குற்ற உணர்ச்சி என்பது குற்றம் செய்தவருக்கு மட்டுமல்ல. சில சமயங்களில் குற்றம் செய்தவரை விட வேற ஒருவருக்கும் செல்லலாம் என்ற முற்றிலும் புதிய ஒரு கருத்தை வைத்து வந்துள்ள படம் தான் “இரட்ட” மலையாள படங்களின் தரத்தை புகழ்ந்து புகழ்ந்து நமக்கே அலுத்து போகும் அளவுக்கு மூச்சுத் திணற திணற இடைவிடாமல் நல்ல படங்களா கொடுத்து தள்ளிக்கிட்டே இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ரோகித் கிரிஷ்ணன் திரைக்கதை இயக்கத்தில், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “இரட்ட” படமும் சேர்ந்துள்ளது.
படம் ஆரம்பிக்கும் போது ஒரு கொலை மர்மப் படமாக ஆரம்பிக்கிறது. ஆனா செத்தது யாருன்னு காட்டும்போதே படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதன்பின் படம் வழக்கமான பாணியிலே ஒரு கொலை மர்மப் புலனாய்வு படம் எப்படிப் போகுமோ அதே போலத்தான் போகிறது. கொலையா, தற்கொலையா, கொலை என்றால் யார் கொலை செய்திருப்பார்கள் என்ன நோக்கம் என்ற வகையிலே படம் நகர்கிறது.
கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு முன்பு ஒரு 15 நிமிடங்கள் வரை படம் மிகச் சாதாரணமாகவே படம் நகர்கிறது. இருந்தாலும் படம் ரசிக்கும்படியே நகர்கிறது.
Pre climax ல் தான் படத்தின் கொலை முடிச்சை அவிழ்க்கிறார்கள். அது நமக்கு ஒரு பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. சப்புன்னு ஆயிடுது இதுக்கு தான் இவ்வளவு மெனக்கட்டிங்களான்னு நமக்கே அலுப்பு தட்டுது.
என்னடா ஒரு சிறப்பான படம்னு சொல்லிட்டு இப்படி வரிசையா எதிர்மறையாக சொல்கிறேன் என்று நினைக்கலாம்.
படம் நமக்கு என்ன அனுபவத்தை கொடுக்கிறது என்பதை பொறுத்தே நான் சொல்கிறேன். நாளை பின்ன படம் பார்ப்பவர்கள் இதுக்கு போயா இப்படி பெருசா சொன்னிங்கன்னு யாரும் கேட்கக் கூடாதுல😝.
ஆனால் க்ளைமேக்ஸ் காட்சி கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் இந்த படம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அதிசயப்பட வைக்கிறது. குறிப்பாக இந்த படத்தை மூன்று விதமாக பிரிக்கலாம்.
ஒன்று pre climax.
இதைப்பற்றி சொல்லியாச்சு.
அடுத்து இறுதிப்பகுதி ஒன்று – இந்தப் பகுதி தான் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது ஜீரணிக்க முடியாத ஒரு முடிவை அளிக்கிறது. கொரியன் படம் போல உள்ளது இந்த காட்சி. ஏற்கனவே இதேபோல ஒரு காட்சி புகழ்பெற்ற ஒரு கொரியன் படத்தில் உள்ளது. மிகவும் சர்ச்சைக்குள்ளான படம். அதைக் கூட பின்னாடி ஹாலிவுட்ல ரீமேக் பண்ணாங்க. அந்த படத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை அதை சொன்னால் இந்த படத்தின் கதை தெரிந்து விடும்.
கிளைமாக்ஸ் பகுதி 2:
இந்தப் பகுதிதான் எந்த ஒரு கொரியன் ஈரானியப் படங்களிலும் பார்க்க முடியாத ஒரு அசாத்தியமான காட்சி.
இந்த காட்சியை தயவு செய்து இரண்டு மூன்று முறையாவது பாருங்கள். இந்த காட்சி கொடுக்கும் ஒரு அனுபவம் ஒரு வாழ் நாள் அனுபவம் என்றே சொல்லலாம். இன்னும் அந்த காட்சியிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. மிரட்டி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் கூட ஒருத்தன் யோசிக்க முடியுமா, இப்படி எல்லாம் கூட ஒரு படம் எடுக்க முடியுமா என்று நம்மை அசர வைக்க கூடிய ஒரு காட்சி.
வெறுமனே கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் ஒருவன் தன் மனைவியிடம் இரண்டு நிமிடம் ஃபோனில் பேசும் அந்த காட்சி, இதை சொல்லும்போது இது ஒண்ணுமே இல்லாத காட்சி போல தான் தோன்றும் ஆனா படத்தில் பார்க்கும் பொழுது கண்டிப்பாக அந்த இயக்குனருக்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
இயக்குனர் ரோகித்தை நிச்சயம் பாராட்டலாம் அவரே திரைக்கதை எழுதி அவரே இயக்கியும் இருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த படம். இதுதான் அவருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். முதல் படத்திலேயே அசத்தி விட்டார்.
அடுத்து கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ். அற்புதமான நடிகர். ஜோசப் படத்தில் இவர் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகர் இது போன்ற ஒரு கதாபாத்திரம் நடிக்க தயங்குவார்கள். ஆனா ரொம்பவே தைரியமாக நடித்திருக்கிறார். ரொம்ப நுணுக்கமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடுத்து மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு நபர் இசையமைப்பாளர். ஜேக்ஸ் பிஜோய். இவரின் துருவங்கள் பதினாறு, இஸ்க், ஐயப்பனும் கோசியும் படங்களின் இசையை கண்டு வெகுவாக வியந்திருக்கிறேன்.
இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சி கடைசி பத்து நிமிஷம் இசை நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்கிறது. படம் முடிந்த பின்னரும் கூட படத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு உன்னதமான இசையை வழங்கியுள்ளார்.
இந்த படத்தின் கதை என்ன கதாபாத்திரம் என்ன என எதையுமே என்னால் சொல்ல முடியாது. யாவற்றையும் படத்திலே பார்த்து தெரிந்து கொண்டால் தான் அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
எப்பேர்பட்ட அயோக்கியனா இருந்தாலும் குற்ற உணர்ச்சி என்பது ஒருவனுக்கு கொடுக்கப்படும் ஆகப்பெரிய தண்டனை. அதிலிருந்து மீள்வது என்பது முடியாத ஒன்று. ஒருவரின் தவறு மற்றொருவரை பாதிக்கும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் குற்றம் செய்தது ஒருவர் ஆனால் குற்ற உணர்ச்சியை சுமப்பது வேறு ஒருவர்.
இதுதான் அந்த இரட்ட நிலைப்பாடு.
இந்த படம் ஒருமுறை மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய படம் .படம் முடிந்த பின் தான் பல நுணுக்கமான விஷயங்கள் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. படத்தின் முடிவை பார்த்த பின்னால் தான் படத்தில் உள்ள மற்ற காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு விளங்குகிறது.
அவ்வளவு எளிதாக இந்த படத்தை விட்டு நம்மால் வெளியே வர முடியாது. அப்படி ஒரு காவியமாக வந்துள்ள படம் தான் இந்த “இரட்டை”…
2023 ல் இதுவரை வந்த படங்களில் இதுவே மிகச்சிறந்த படம் என்று சொல்லலாம்.
கண்டிப்பாக தவறே விடவேக் கூடாத ஒரு அற்புதமான திரைக்காவியம்.
—
மன்னை செந்தில் பக்கிரிசாமி.