மன்னார்குடி என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது ராஜகோபாலசாமி பெரிய கோவிலும் அந்த பெரிய தெப்பக்குளமும்தான்.
கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக மன்னார்குடியின் அடையாளங்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அளவு மன்னார்குடிக்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களாக விளங்கிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடி என்ற நகரமே கோவிலையும் குளத்தையும் சுற்றி அமைக்கப்பட்டது தான். கோவிலை சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு விசாலமான சாலைகள் உண்டு. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் மக்கள் வசிக்கக்கூடிய தெருக்களில் மிக மிக அகலமானது இந்த வீதிகள்தான்.காரணம் வருடா வருடம் நான்கு வீதிகளையும் கடந்து பவனி வரும் தேர்த் திருவிழாவிற்காகதான் இந்த நான்கு வீதிகளும் மிக அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. கால நெருக்கடியில் எத்தனையோ அம்சங்கள் மாறினாலும் இந்த நான்கு வீதிகளும் எந்தவித ஆக்கிரமிப்புமின்றி இன்றளவும் அதேபோல தோட்டத்துடன் இருக்க காரணம் வருடா வருடம் மன்னையில் பாரம்பரியமாக நடத்தப்படும் புகழ்பெற்ற திருவிழாதான் காரணம் .
அதேபோல அப்படியே பெரிய கோவிலின் பரப்பளவிற்கு இணையாக ஏறத்தாழ 23 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குளத்தை சுற்றியும் நான் வீதிகள் அமைந்திருப்பதும் பேரழகு. தமிழ்நாட்டிலேயே பெரிய குளமாக இந்த மன்னார்குடி தெப்பக்குளம் கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட பாரம்பரியங்கள் கொண்ட இந்த மன்னை பெரிய கோவிலையும், தெப்பக்குளத்தையும் உருவாக்கியது யார் என்ற ஒரு சர்ச்சை நீண்ட காலமாகவே போய்க்கொண்டிருக்கிறது.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது இல்ல நாயக்கர்கள் வருகைக்குப்பின் தஞ்சை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதா என்ற என்ற சர்ச்சையையும் விவாதமும் நீண்ட காலமாக சென்று கொண்டிருக்கின்றன.
அதைப் பற்றிய சில வரலாற்று ஆதாரங்களை பார்ப்போம்.
மன்னை பெரிய கோவிலாகட்டும் ,பெரிய குளமாகட்டும்.இரண்டுமே சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டவைகள் தான்.
இதை ஜே. எம்.சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய “சோழர் கோவில் பணிகள்”என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு கிடைத்த கல்வெட்டுகளின் ஆதாரங்களை வைத்து அந்த புத்தகத்தை எழுதியுள்ளார் . வரலாற்று ஆதாரங்கள் என்பது பெரும்பாலும் கல்வெட்டுகளை அடிப்படையாக கொண்டதுதான்.அந்த வகையில் அந்த புத்தகத்தில் சொல்ல வந்த கருத்து,
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1118)
சுங்கந் தவிர்த்த சோழன் எனப் பெயரிய முதலாம் குலோத்துங்கன் சோழப் பேரரசை 48 ஆண்டுகள் மிக்க சிறப்புடன் அரசாண்டான். தனது நாட்டை முழுதும் அளந்து (Survey) கட்டினான். அனாவசிய மாகக் கருதிய பல சுங்கங்களை நீக்கினான். இவனே தமிழ் நாட்டில் முதன்முதலாக ஞாயிறு வழிபாட்டிற் கெனக்கோயிலைக் கட்டியவனாவான். சூரியனார் கோயிலென வழங்கும் கோயில் இவன் கட்டுவித்ததே. வேம்பற்றூர்த் திருவியலூருக்கடுத்துக் கர்க்கடேச்சுரர் எனப் பெயரிய அருமருந்து நாயகருக்குக்க கோயிலும் முன் மண்டபமும் எடுத்தவன் இவனே. குலோத்துங்கச் சோழேச்சரம் என்ற கீழைப்பழுவூர்க் கோயிலும், திருவைகாவூரிலுமுள்ள கோயிலும் கற்றளியாக இம்முதற் குலோத் துங்கன் ஆட்சியிலே கட்டப்பெற்றன. மற்றும், கோட்டாற்றிலுள்ள இராசேந்திர சோழேச்சரமும் இவன் எடுப்பித்ததே. குலோத்துங்கன் சிறந்த சிவபத்தனல்லாது பிற சமயங்களையும் போற்றிய
பெருமானாவான். இவனது கல்வெட்டுக்கள் எல்லாச் சமயத்தார் கோயில்களிலும் உள்ளன.
இவன்,
தன் தலைநகரைக் ‘கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து மாற்றி முதன்முதலாகக் காஞ்சியிலிருந்து
அரசாளத் தொடங்கினான். கி. பி. 1090-ல் நாகப்பட்டி னத்திலிருந்த இராசராச பெரும்பள்ளி என்ற புத்த விகாரத்திற்கு நிலதானம் செய்துள்ளான். அதனை லீடன் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
இவனும் இவன் சிற்றரசர்களும் மற்றச் சமயங் களை ஆதரித்துப் பௌத்த சமண பள்ளிகட்கு நிபந் தங்களை விட்டபோதிலும், தான் சிறந்த சிவபக்த னாக விளங்கி, திருநீற்றுச்சோழன் என்ற சிறப்புப் பெயரையும் எய்தினான்.
“”மன்னார்குடியிலுள்ள குலோத்துங்க சோழ விண்ணகரம் என்ற இராச
கோபாலன் கோயிலும் இச்சோழன் கட்டியதே யாகும். இதற்குப் பிற்போந்த தஞ்சை நாயக்கர். மன்னன் விசயராகவன் இதனைப் பெரிசம் திருப்பணி செய்து, 780 ஏக்கர் நிலமும், 6000 ரூபாயும் கொடுத்து ஹரித்ரா நதி திருக்குளம் வெட்டிச் சீர்திருத்தியதாகத் தெரிகிறது””
என்று அவர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து மன்னார்குடி கோவிலும் குளமும் திருநீற்றுச் சோழன் என்று அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கனால் கட்டியதாகும்
என்பது தெரிகிறது.
பிற்பாடு வந்த தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் கோவிலையும் குளத்தையும் புணரமைத்தனர்.
மன்னார்குடி பெரியகுளத்தை வெட்டி சீர்திருத்தம் செய்தது தஞ்சை நாயக்க மன்னர்கள். சீர்திருத்தம் என்றாலே ஏற்கனவே உள்ளதை மீண்டும் சரி செய்வதுதான்.
அதன் அடிப்படையில் பார்த்தால் மன்னார்குடி பெரிய கோவில் மற்றும் குளம் ஆகியவற்றை உருவாக்கியதில் குலோத்துங்க சோழனின் பங்கு மிக முக்கியமானதாகும்.அதன் பின் தஞ்சை நாயக்கர்கள் பங்கும் உண்டு
பின் குறிப்பு ;
அதே போல
தமிழகத்தின் பெரிய குளம்தான் நம் ஊர் குளம்… உலகத்திலே பெரியகுளம் என்பதும் தவறான தகவல். இந்தியாவில் 120 ஏக்கர் ல சிவசாகர் குளம் ஒன்னு அசாம் ல இருக்கு.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.