Home>>அரசியல்>>கூ செ முனிசாமி வீரப்பன்- ஆவணத்தொடர் விமர்சனம்
அரசியல்கலைதிரை விமர்சனம்திரைத்துறை

கூ செ முனிசாமி வீரப்பன்- ஆவணத்தொடர் விமர்சனம்

கூ.சே. முனுசாமி வீரப்பன்.(ஆவணத் தொடர்).season 1.

Z ee 5 ott தளத்தில் கூசே முனிசாமி வீரப்பன் ன்னு வீரப்பனை பற்றி ஆவணத்தொடரின் முதல் பகுதியை (season  1) வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

வீரப்பன் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் தொகுத்து ஆவணப் படத்தோடு சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் சேர்த்து ஒரு அருமையான இணையத்தொடரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

80 ,90களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும். வீரப்பன் என்பவர் எப்படிப்பட்டவர், தமிழ் நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு எவ்வாறு  ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்று.

 

அவரைப் பற்றி காவல்துறை சார்பாக கொடுக்கப்படும் தகவல்கள் என்பது வேறு .உண்மையில் நடந்த சம்பவம் என்பது வேறு.

 

இந்த இணையத் தொடர்  உண்மையில் நடந்த நிகழ்வுகளை தக்க ஆதாரங்களோடு உள்ளது உள்ளபடி  பார்வையாளர்களுக்கு காட்டியுள்ளனர். வீரப்பன் விவாகரத்தை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த தொடரைப் பார்க்கலாம். மேலும் இந்த தொடர் மூலம்  வீரப்பன் என்பவர் இந்த ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் உருவகப்படுத்திய அளவிற்கு ஒரு பெரும் குற்றவாளியா  இல்லையா என்ற ஒரு வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படி இந்த ஆவணப்படம் தொடங்குகிறது என்பதை பார்ப்போம்.

காடுகளில் வாழும் மக்கள்  பெரும்பாலும் வேட்டைத் தொழில் மற்றும் காடுகளில் உள்ள பொருட்களை சேகரித்தல் மூலமே  தங்கள் பிழைப்பை  ஓட்டிக் கொண்டிருந்த நேரத்தில் 1972-ல் வந்த வனப் பாதுகாப்பு சட்டம்  அவர்கள் வாழ்வாதாரத்தை பெருமளவு  பாதித்த போது, வீரப்பன் போன்றவர்கள் தங்களை தங்கள் மக்களை காத்துக் கொள்ள யானைகளை வேட்டையாடி தந்தங்களை விற்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். யானையைக் கொல்வது என்பது எவ்வளவு பெரிய இயற்கைப்பேரழிவு என்பதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்கள்.

 

அதற்கான படிப்பறிவும் பொது அறிவும் துளியும் இல்லாத மக்கள்.

 

ஆகவே அந்த ஒரு பெரும் தவறை செய்கிறார்கள்.

 

ஆனா அதே நேரத்தில் வன பாதுகாப்பு சட்டம் தன் வாழ்வாதாரத்திற்காக வேட்டையாடும் மக்களை கட்டுப்படுத்தியதே தவிர, பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுபவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை குறிப்பாக வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு மிக்க மனிதர்கள்.

 

இவர்கள் மற்றும் வேட்டையாடி அவர்கள் விருப்பப்பட்ட உணவை உண்கிறார்கள்..

 

இந்த கோபம் தான் வீரப்பனையை மென்மேலும் தவறுகள் செய்யத் தூண்டுகிறது.

 

இறுதியில் யானைகளை கொன்ற  குற்றத்திற்காக  வனத்துறையால் தேடப்படும் குற்றவாளி ஆகிறார். அதனால் காட்டில் தலைமறைவாக வாழ்கிறார் .அவரை பணத்திற்காக காட்டிக்கொடுத்த இருவரை தனிப்பட்ட பகையின் மூலம் போட்டு செல்கிறார்.( அவர் தாயார் இறப்புக்கு கூட தன்னை வரவிடாமல் செய்த கோபம்).

 

1988 ல் துப்பாக்கி வாங்க ஆசைப்பட்டு பெங்களூரில் அவர் காவலரிடம் மாட்டிக் கொள்கிறார்.

 

தன் குற்றத்தையும் ஒப்புக்கொள்கிறார் தன்னை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படியும் கேட்டுக்கொள்கிறார்.

 

மேலும் டிஎஸ்பி ஒருத்தர் கூட பணப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். ஆனால் அந்த டிஎஸ்பி மிக நேர்மையாக இருக்கவே அதற்கு அவர் உடன்படவில்லை.

 

அந்த நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் காரணத்தினால் அவர் வீரப்பனை சீனிவாஸ் என்ற ஒரு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்(DFO).

 

இதோடு வீரப்பன் சகாப்தம் முடிந்திருக்க வேண்டியது.

 

வீரப்பனை அப்பவே நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருந்தால் அதோடு எல்லாம் முடிந்திருக்கும்.

 

ஆனால் அவரை என்கவுண்டர் செய்ய முயற்சி செய்யப் போக, அங்கிருந்த அவர் தப்பிச்செல்ல அதன்பின் நடந்ததெல்லாம் ஊரறியும்.

 

வெறும் இரண்டு கொலைகள் யானைகளை கொன்று  தந்தம் கடத்தல் இதற்காக ஒருவரை என்கவுண்டர் செய்யும் அளவுக்கு போவதன் காரணம் என்ன??

 

அரசியல்  அழுத்தம் தான்  அவரை என்கவுண்டர் செய்யும் அளவுக்கு கொண்டு செல்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

 

காட்டுக்குள் தப்பி சென்ற வீரப்பன் அங்கே சந்தன மரக்கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்.

 

இந்த நிலையில் அவரைப் பிடிப்பதற்காக அந்த வனத்துறை அதிகாரி சீனிவாசன் என்பவர் கடும் முயற்சியை மேற்கொள்கிறார். அந்த நேரத்தில் வீரப்பன் தங்கையை விசாரணை செய்கிறார்கள். அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

 

இதற்கான காரணம் என்ன என்பது ஒரு சாரார் ஒரு நியாயத்தையும் மறுசாரர் வேறொரு நியாயத்தையும் சொல்கிறார்கள். ஆனா வீரப்பன் தன் தங்கையை பாலியல் ரீதியாக  துன்புறுத்தியது தான் அவள் சாவுக்கு காரணம் என்று திடமாக நம்புகிறார். அதற்கு காரணம் அந்த வனத்துறை அதிகாரி சீனிவாசன் என்று நினைத்து அவரை கொன்று விடுகிறார். இங்கு தான் முதன் முதலாக ஒரு அதிகாரியை வீரப்பன் கொலை செய்கிறார். கொன்றதோடு மட்டுமல்லாமல் அவர் தலையையும் வெட்டி எடுத்து அதை எரித்து மக்களின் பார்வைக்கு வைக்கிறார். ஏற்கனவே என்கவுண்டர் விஷயத்தில்  அவர் மீது உள்ள தனிப்பட்ட கோபம் மற்றும் அவர் தங்கையின் இறப்பு என்ற ஒரு சராசரி மனிதனின் பழிவாங்கும் குணத்தை தான் அவர் செயல்  வெளிப்படுத்துகிறது.

 

இங்கே யார் பக்கம் நியாயம்? யார் பக்கம் அநீதி என்பதை நம்மால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

 

அதன்பின் வீரப்பன் அதிகார மையத்தால் தேடப்படும் குற்றவாளி ஆகிறார்.

 

இந்த நேரத்தில் தான் காவிரி பிரச்சனை உச்சம் தொடுகிறது. 1991 இல் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 207  டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு  வருகிறது.

அது எதிர்த்து கர்நாடக கலவரக்காரர்கள் அரசின் துணையோடு   தமிழர்கள் மீது கொடும் பயங்கரவாதத்தை நிகழ்த்துகின்றனர். தமிழக மக்கள் பாதுகாப்பு வேண்டி காவல் துறைக்கு செல்ல முடியாது நிலை .அங்கேயும் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள்.

 

இந்த நிலையில்  வீரப்பன் அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கர்நாடக எல்லையை கடந்து வரை ஒரு எல்லைச்சாமி போல எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். தமிழக மக்கள் மேல் சித்தரவைகள் உட்படுத்திய காவல் நிலையத்தையும் சூறையாடுகிறார். காவலர்களையும் சுட்டுக் கொல்கிறார்.

 

இதுவரை வீரப்பன் பக்கம் சில நியாயங்கள் இருக்கின்றது. ஆனால்,

 

அதன்பின் அவரை பிடிக்க வந்த கோபாலகிருஷ்ணன் என்னும் காவல் அதிகாரியை  கொல்ல  கன்னி வெடி வைக்க போய் அதில் 22 காவலர்கள் இறந்து விடுகின்றனர்.

 

இதிலிருந்து தான் தமிழக கர்நாடக மாநிலங்களின் அரசுகள் மற்றும் காவல்துறை யின் ஒட்டுமொத்த கோபமும் வீரப்பன் மீது திரும்புகிறது.

 

இங்குதான் வீரப்பன் என்பவர் நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கொலைகாரர் என்ற பிம்பம் வருகிறது

 

அதனால்  வீரப்பன் ஒரு கொடூரமான கொலைக்குற்றவாளியாகவும், அவரைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரு கோபம் அதிகாரம் மையத்தின் மீது இருப்பதும் நியாயமாகவே படுகிறது..

 

ஆனால்,

 

அதன் பின் 1993 ல்,

 

வீரப்பனை பிடிக்கிறேன் என்ற போர்வையில் அவர் சார்ந்த கிராம மக்களின் மீது தமிழக ,கர்நாடக  காவல்துறை நடத்திய வக்கிரத் தாண்டவம்,அரசப்பயங்கரவாதம் வார்த்தைகளால் சொல்லவே நா கூசுகிறது..

இந்த வருடம் வெளிவந்த விடுதலை படத்தில் வெற்றிமாறன் இது சூசகமாக காட்டி இருப்பார் ஆனால் அவர் காட்டியதெல்லாம் உண்மையில் நடந்ததில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதை உணரும் போது , தாங்க முடியாத வேதனையை நம் மனம் அடைகிறது.( குறிப்பாக நான்காவது எபிசோடை இளகிய மனம் உள்ளவர்கள் பெண்கள் குழந்தைகள் தவிர்க்கவும்).

மீறி பார்த்தால் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது.

 

வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் கேட்கவே சகிக்க முடியாத மனித உரிமை மீறல்களை

 தைரியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்

 

கொலை, கூட்டு பாலியல் வன்புணர்வு, சித்திரவதைகள் என்பதனையும் தாண்டி

 

அப்பா வை கட்டாயப்படுத்தி மகளுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவது

 

மகனை கட்டாயப்படுத்தி தாயுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட துன்புறுத்துவது

 

மார்பு காம்புகளிலும் பிறப்புறுப்புகளிலும் மின்சார அதிர்ச்சியை  கொடுப்பது, கர்ப்பிணிப் பெண்களை கூட  விட்டு வைக்காமல் கூட்டுக்கலவி செய்வது, விசாரணையின் போதே குழந்தையை பெற்ற ஒரு பெண்மணியை குழந்தை பெற்ற இரண்டு நாட்களில் மின்சார அதிர்ச்சி கொடுத்து துன்புறுத்துவது

 

 என இது போன்ற அரக்கத்தனமான சிறிதும் மனிதத்தன்மையற்ற  கொடுமைகள் நடந்திருக்கிறது..இதற்கு மேல் சொல்லவே நா தழு தழுக்கிறது.

 

வீரப்பன் ஒரு கொலை குற்றவாளி தான்.யானைகளை கொல்கிறார், தன்னை எதிர்க்க வந்த காவல் அதிகாரிகளை கொல்கிறார் வனத்துறை அதிகாரிகளை கொல்கிறார், காசுக்காக தன்னை காட்டிக்கொடுக்கும் informer  அவர்களையும் ஈவிரக்கம் இல்லாமல் கொல்கிறார்..

 

ஆனால் அவரை விட பெரும் குற்றவாளி இந்த அதிகார மையம்தான்..  வீரப்பனை பிடிக்க தங்கள் உயிரை பணயம் வைக்காமல் அப்பாவி மக்கள் உயிரை பணயம் வைத்த காவல்துறை , கணக்கில் அடங்காத பெண்களை கற்பழித்தும் துன்புறுத்திய காவல்துறை தான் ஆகப்பெரும் குற்றவாளி. வீரப்பனை காட்டிக் கொடுத்தால் வீரப்பன் கொல்கிறார் ,காட்டிக் கொடுக்காவிட்டால் காவல்துறை அவர்களை துன்புறுத்துகிறது. மிரட்டுகிறது. இந்த இருவர் பகையினால் பாதிக்கப்பட்டது என்னமோ பெரும்பாலும் இந்த அப்பாவி மக்கள் தான்.

 

வீரப்பன் என்னும் கொலை குற்றவாளிக்கு அவர் குற்றத்திற்கான தண்டனை கிடைத்து விட்டது. அவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

அவரைவிட ஜீரணிக்கவே முடியாத ,சிறிதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு பெரும் கொலைப் பாதங்கள் புரிந்த அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது??

 

சதாசிவம் கமிஷன் வைத்து எல்லாம் நிரூபணமான பின்னும் அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது ஏன்??

 

மாறாக வீரப்பன் இறந்த பின்பு 108 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு விருதுகளும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

 

நமது காலத்தில் நம் கண் முன்னே ஈழப் படுகொலைக்கு முன்பே நிகழ்ந்த  ஒரு குரூரம் ..

 

இதற்கு அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளும் விதிவிலக்கல்ல.

 

ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசுதான் இந்த கொடூர அரச பயங்கர வாதத்தை நிகழ்த்தியது..

 

ஆனால் அதன்பின் வந்த கருணாநிதி அரசோ அவர்களும் இதற்கு எந்த தீர்வும் காண வேண்டும் என்று யோசிக்கவில்லை .அதேபோல தவறிழைத்த அந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் எந்த தண்டனையும் வாங்கித் தரவில்லை. எப்படி ஸ்டெர்லைட் படுகொலையை எடப்பாடி அரசு முன் நின்று நடத்த, அதை எதிர்க்கட்சியா இருக்கும் போது ஆவேசமாக எதிர்த்த ஸ்டாலின் அரசு ஆட்சிக்கு வந்து ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ அதேபோலத்தான் அப்போதும் நடந்துள்ளது.

 

தான் பிறந்த குழந்தையாக  இருக்கும் பொழுதே வீரப்பனால் படுகொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி போலீஸ் அதிகாரியின் மகள் தன் தந்தை கொல்லப்பட்டதை மனம் நொந்து விவரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில்,

 

கொலை செய்த வீரப்பனின் மகள் பகிரங்கமாக தன் தந்தை செய்தது தவறுதான் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார்.

 

இதுதான் தர்மம் . ஆனால் தவறு செய்த எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அதுபோல மன்னிப்பு கேட்கிறாரா இல்லை அவர் குடும்பம் தான் கேட்கிறதா??

 

இங்கே புலப்படுகிறது தவறு யார் மீது என்று.

 

வீரப்பன் நல்லவனா இல்லையா என்ற விவாதத்திற்கு  எல்லாம் நாம போக வேண்டியதில்லை..

 

வீரப்பன் என்ற ஒரு தனிமனித குற்றவாளியின் பிரச்சினையை மிக எளிதாக முடிக்காமல் அதை வளர விட்டு, அவரை பிடிக்கிறோம் என்ற சாக்கில் ஏராளமான மக்களை பலி கொடுத்த இந்த அரச பயங்கரவாதத்திற்கு என்ன தண்டனை??

 

வீரப்பன் கூட அவர் செய்த குற்றங்களுக்காக மன்னிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் இந்த அரச பயங்கரவாதத்தின் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது..

 

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply