Home>>அரசியல்>>சங்கரும், பெலிக்சும் உலகமகா பயங்கரவாதிகள் அல்ல.
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

சங்கரும், பெலிக்சும் உலகமகா பயங்கரவாதிகள் அல்ல.

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட்! இவ்விருவரின் கூட்டணி (பேட்டிகள், தொடர்புகள், பரிவர்த்தனைகள், பழக்க வழக்கங்கள்) பற்றி நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பாஜக, அதிமுக “பின்புலம்” பற்றியும் பலரும் பேசுகிறார்கள்.

இவர்கள் இருவரும் என்ன தவறுகள் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், அதற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பவற்றையெல்லாம் காவல்துறை, நீதித்துறை, அரசு பார்த்துக் கொள்ளட்டும். அதில் தலையிடுவதற்கோ அல்லது கருத்துச் சொல்வதற்கோ நான் யாருமல்ல. அது எனது வேலையுமல்ல.

எது எப்படி இருந்தாலும், மேற்படியார் இருவரும் மனிதர்கள். அவர்களுக்கும் மனித உரிமைகள் இருக்கின்றன. அவை மதிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.
காவல்நிலையச் சித்திரவதைகள், படுகொலைகள், சிறைச்சாலைக் கொடுமைகள், அழித்தொழிப்புக்கள் போன்றவற்றை எக்காலத்திலும், எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சனநாயக நாடு! “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” எனும் அவலத்தைச் சாடும் தமிழ்நாடு. இது ஒரு Banana Republic அல்ல! இங்கே சிலரை சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, சிறையில் அடைத்துவைத்து அடிக்கலாம், கை கால்களை உடைக்கலாம் என்பதையெல்லாம் 21- ஆம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்நிலைய, சிறைக்கொடுமைகள் தொடர்கதையாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஸ்வாதி கொலைவழக்கில் கைதான ராம்குமார் ஜாமீனில் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னால் சிறையில் கொல்லப்பட்டான். மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கதை சொன்னார்கள். அதேபோல, முத்து மனோ (?) என்கிற இன்னொரு ஒடுக்கப்பட்டச் சமூக இளைஞன் பாளைச் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டான். சக கைதிகள் கொன்றுவிட்டதாக கதை சொன்னார்கள்.
இது போன்று தமிழ் நாடெங்கும் நூற்றுக்கணக்கானோர் செத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவை குறித்து ஏதாவது நீதி விசாரணை நடக்கிறதா என்றால், கிடையாது. அரசு சொல்லும் கட்டுக் கதைகளை பெரும்பாலான ஊடகங்கள் ஏற்று பொதுப்புத்திக்குக் கடத்துகின்றன. எங்கோ நடக்கிற இழவு என்றெண்ணி நாமும் கடந்து செல்கிறோம்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ராம்குமார், முத்து மனோ போன்றவர்களின் படுகொலைகள் பற்றி நான் இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு மனித உரிமை ஆர்வலர் எனும் அடிப்படையில், அது எனது கடமை என்றெண்ணுகிறேன்.

சங்கர், பெலிக்ஸ் இருவரின் மனித உரிமைகள், மாண்புகள் மீறப்படுவதை ஒரு சக மனிதனாக தட்டிக் கேட்கிறேன். சங்கர் சிறையில் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பெலிக்ஸ் தில்லியில் கைதுசெய்யப்பட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டாலும், அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவலை அவருடைய மனைவிக்கேத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் நண்பர்கள்.

சங்கரும், பெலிக்சும் உலகமகா பயங்கரவாதிகள் அல்ல, தொடர் கொலைகாரர்கள் அல்ல, இவர்கள் வழக்கில் இவ்வளவு பெரிய அணிதிரட்டலுக்கானத் தேவை என்ன? ஊர் பேர் தெரியாத உத்தமர்கள் வரிசைக்கட்டி வகுப்பெடுக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், ஊடகர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் என யாரும் குரல் கொடுக்க மறுக்கிறார்களே, ஏன்? இது என்ன நியாயம்?

மீண்டும் சொல்கிறேன், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்நாட்டின் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும். மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் சிறையில் அடைத்துவைத்து அடிப்பது, கொடுமைப்படுத்துவது, கை கால்களை உடைப்பது போன்றவை மாபெரும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், தண்டிக்கப்பட வேண்டியத் தவறுகள்.
பிடித்தவர்–பிடிக்காதவர், நல்லவர்–கெட்டவர் போன்ற அதிகார அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவப்படுபவையல்ல மனித உரிமைகள். அவை எல்லோருக்குமான வை; சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் உட்பட!


சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
மே 12, 2024.

Leave a Reply