– – மன்னை ராம், மன்னார்குடி
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
இன்றைய மக்களின் பார்வையில் யார் திறமையானவர்கள் என்றால் கை நிறைய பணம் சம்பாதிப்பவர்களே திறமையானவர்கள் என்பர்.
குறிப்பாக படித்து முடித்தவுடன் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்களே திறமையானவர்கள் ஆகின்றனர்.
சொந்த மண்ணில் குறைந்த சம்பளத்திலோ அல்லது சொந்தமாக பணி செய்து குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் கையாலாதவர்கள், திறமையற்றவர்கள் என்றே முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அந்த நபர்கள் சமூக பணியில் ஈடுபடுபவராக இருந்தால் போதும் என்னன்ன அவமதிப்பை தர இயலுமோ அவை அனைத்தையும் அவர்கள் மேல் வாரி தெளிக்கப்படும்.
சமூகத்தை குறை சொல்லி பயன் இல்லை,
நம் வீட்டிலும் அதோ நிலைமை தான்.
நாம் சுயமாக ஒரு வேலை செய்வதாக முடிவெடுத்து அதை நடைமுறை படுத்தும் காலத்திலே வேறு எங்கோ ஒரு நபர் வெளிநாடு சென்று முதல் மாத வருமானத்தை அனுப்பி இருப்பார். அவ்வளவுதான் நம் வீடு இரண்டாக மாறிப்போகும்.
குறிப்பாக சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் செயல்படுபவர் என்றால் அவர்கள் நிலை சொல்லி மாலாது.
தமிழகத்தில் தினம் தினம் ஒரு போராட்டம்
மீத்தேன், காவிரி, நீர்நிலை பிரச்சனை, சல்லிகட்டு, நீட் தேர்வு, தற்போது நெடுவாசல், கதிராமங்கலம் என நம் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்லும்.
இத்தனை பிரச்சனைகளையும் மனதில் கொண்டும் பல போராட்டங்களில் கலந்து கொண்டும் அதே நேரத்தில் தன் பொருளாதாரத்தையும் குடும்ப நலன்களையும் கவனித்து கொண்டு இருக்கும் நபர்கள் நம் சமூகத்தின் பார்வையில் வேலை வெட்டி இல்லாத திறமையற்றவர்களா ஆகி போகிறோம்.
வீட்டில் போராட்டம் என்றாலே ஒரு வித அச்ச உணர்வினாலே நம்மை பங்கேடுக்க விடுவது இல்லை. அப்படி ஆகிவிட்டது ஆக்கபட்டது நம் தமிழகத்தின் நிலை அப்படி ஓர் போராட்டம் நடைபெற்றாலும் குறைந்தபட்ச நபர்களே பங்கெடுக்கிறோம்.
இளைஞர்கள் இணைய வழியில் செய்யும் புரட்சிகளை ஒரு சதவீதம் கூட களத்தில் செய்ய விரும்புவது இல்லை.
இவற்றை எல்லாம் பார்த்து கடந்து போராட்டம், விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்து கொள்வதாலோ என்னவோ மக்களின் பார்வைக்கு நாங்கள் திறமையற்றவர்களாக ஆகி போகிறோம்.
எதோ ஓர் அயர்ச்சியில் அல்லது மறதியில் சில வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்போம்.
அதற்கு வரும் முதல் கேள்வியே… ஊருக்கு என்றால் ஓடுவாய், வீட்டுக்கு என்றால் செய்யமாட்டாயா என்று.
ஊரில் தானே நம் வீடும் அடங்கி உள்ளது. அங்கு செய்யும் நன்மைகள்
நம் வீட்டிற்க்கும் சேர்த்து தானே, எனோ அவர்களுக்கு இது புரிவது இல்லை.
இதை படித்து கொண்டு இருக்கும் வெளியூர், வெளிநாட்டில் பணி புரியும் தோழர்களுக்கு கேட்க தோன்றும். ஏன் எங்களுக்கு சிரமம் இல்லையா?
எங்களுக்கு மக்கள் மீது நலன் இல்லையா? என்று.
நிச்சயமாகமாக உங்கள் கேள்விகளுக்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டேன்.
வெளியூர், வெளிநாடுகளில் அல்லும் பகலும் உழைத்து, உணவின்றி, உறக்கம் இன்றி உவர் நிர் குடித்து வாழும் உங்கள் மன வேதனைகளையும் அறிவேன் தோழர்களே. நீங்களும் வெளியில் இருந்து தங்களால் இயன்ற அனைத்து உதவியையும் போராட்டத்திற்கு வழங்குகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் எனது ஆதங்கம் இந்த மக்களின் பார்வையின் மீதே தவிர உங்கள் மீது அல்ல.
எனது தலைப்பிற்கான பதிலை நான் இறுதி வரை சொல்லவில்லை என்று உங்களுக்கு தோன்றலாம்.
இந்த கட்டுரையை படிக்கும் மக்களாகிய உங்கள் பார்வைக்கே இதன் விடையை விட்டு செல்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
யார் திறமையானவர்கள் என்று !!!!!!
படஉதவி: @olav_ahrens