ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எந்தெந்த துறைகளில் வரவேண்டும்? நம் நாட்டின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது? அடிப்படையில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் ஒரு அரசு?
கல்வித்துறை எந்த அளவில் உள்ளது? பெரும்பாலான பள்ளிகள் தனியார் வசம் விளைவு, பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓடி ஓடி உழைத்து பெரும்பகுதி பள்ளிக் கட்டணத்திற்கே போய்விடுகின்றது. ஏன் இந்த நிலை? ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? அரசு பள்ளிகளின் இன்றைய நிலை என்ன? அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இல்லாமை, குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமை, கட்டிட வசதி கூட இல்லாமல் மரத்தின் கீழ் வகுப்பறை இவைகளுக்கு யார் பொறுப்பு? அரசியல்வாதிகள் இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை இதற்கு செய்யலாமே! அடிப்படை வசதியில்லாத பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை சரி செய்தால் கல்வித்தரம் உயருமல்லவா! தனியார் வசமாகியதால் கல்வி கட்டணம் இஷ்டம்போல் வசூலிக்கின்றனரே, அதற்கு யார் பொறுப்பு ?
அடுத்தபடியாக சுகாதாரம் அதுவும் இப்போது தனியார் வசம், அரசு மருத்துவமனைகளில் எத்தனை மருத்துவமனை அடிப்படை வசதிகளோடு சிறப்பாக செயல்படுகின்றன? விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளது. தனியார் வசம் மருத்துவத்திற்கான கட்டணத்தை ஒருவர் செலுத்த ஒன்று சொத்தை விற்கணும் அல்லது வாழ்நாள் முழுக்க கடனுக்கு வட்டி கட்டியே சாகணும். மக்கள் தொகைக்கு தகுந்தாற்போல் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நியமனம் செய்யவேண்டியது அரசின் கடமையல்லவா?
உணவு விநியோகத்தில் அரசின் நிலை இலவச அரிசி, வேஷ்டி மற்றும் சேலை. இது எத்தனை சதவீதம் உரியவர்களுக்கு சென்றடைகின்றது? பெரும்பகுதி கள்ளமார்க்கெட்டில் கடத்தப்பட்டு அண்டை மாநிலங்களில் விற்கப்படும் அவலநிலை. எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். குறுக்கு வழியில் சம்பாதிக்க லஞ்சம் கொடுத்து தவறுக்கு மேல் தவறு செய்யும் கூட்டம் ஒருபுறம், அந்த கலப்பட உணவைத் தின்று நோயுடன் மருத்துவமனைகளுக்கு அலையும் கூட்டம் ஒரு புறம்! ஏன் இந்த அவலம்? இதற்கு யார் பொறுப்பு?
எந்த துறைகளை எடுத்தாலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்து துறையில் பணத்தை வாங்கிக்கொண்டு லைசென்ஸ் கொடுக்கின்றான். தினம் தினம் விபத்துக்கள்,மரணங்கள். தவறு செய்பவன் வசதி உள்ளவனாக இருந்தால் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறான். அங்கும் ஊழல். அரசே என்றைக்கு மதுக்கடைகளை திறந்ததோ அன்றே நாட்டின் கேடுகாலம் ஆரம்பித்து விட்டது.
நன்மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு, நமக்கென்ன என்று இராமல் நம்மால் நாட்டின் நலன் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து நாட்டின் நலம் பேணுவோம்.
—மு. தமிழ்த்தியாகன்
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)