ஒரு கட்டு கரும்பு,
நாளை பழுத்துவிடும் என்று
வாங்கிவந்த
வாழைத்தார்!
அதோடு உதிராத
இஞ்சிக்கொத்தும், மஞ்சள்கொத்தும்..!
கடனுக்கு வாங்கி வந்த
கண்டாங்கி புடவை ஒன்னும்,
வெள்ளை வேட்டி ஒன்னும்!
வரிசைப்பணம் நூறும்,
வடக உருண்டை பையும்
என அம்மா அனுப்பி வைப்பாள்.
என் அக்காவுக்கு –
பொங்கல் சீர்!
சைக்கிளை எடுத்து,
எழுந்து பெடல் மிதித்து
விருட்டென போகும்
என்னை,
தெருமுனையில் திரும்பும் வரை
பார்த்து விட்டு
பின் மறைவாள்
என் அம்மா..!
அடுத்த ஊரில்
இருக்கும்
அக்கா வீடு போவதற்குள்,
மூச்சு வாங்கியிருக்கும்,
உடம்பெல்லாம்
வியர்த்திருக்கும்.
தம்பி வாடா, என
தவிப்போடு எனையழைக்கும்
அக்காவின் வீட்டுக்குள்…
ஆட்டுக்கறி கொழம்பும்…!
அம்மியில்
அரைச்சு வச்ச
மீன் குழம்பும்
எனை இழுக்கும்…
அட்டை விசிறி தந்து விட்டு
நீர் எடுத்து வர,
சமையலறை நோக்கி ஓடும்
அக்காவுக்கு,
பிறந்த வீட்டு சீரைக் கண்டு
பெருமை –
இருப்புக்கொள்ளாது.
இடித்து பேசும் மாமியாக்காரி.
இளக்காரமாய் பார்க்கும் கட்டியவன்
இவர்கள் – பார்க்கட்டும் என்பதற்காகவே
திண்ணையிலேயே
பரப்பி வைப்பாள்
பிறந்த வீட்டு – சீதனத்தை!
சாப்பிட்டு முடித்ததும்..
வரிசைப் பணத்தைக்
கையில் திணித்துவிட்டு
“வரேன் அக்கா” என்ற
ஒற்றைச்சொல்லுக்கு
ஓ! வென்று-
அழுவாள்…! பின் –
அழுகையை அடக்கி
சிரிக்க முயன்று
கண்ணீர் மறைத்து
சோகம் மறைத்து
போய் வா! என தலையசைக்கும்
அக்காவை
இன்று நேற்றா
பார்க்கிறேன்….!
சரி –
இனி எப்போது வரும் .
அடுத்தப் பொங்கல்..!?
– முனைவர்.சா.சம்பத், மன்னார்குடி.
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)