Home>>கவிதை>>முடிவில்லா கவிதைகள்
கவிதை

முடிவில்லா கவிதைகள்

நெருக்கமாய் நீ,

உருக்கமாய் நான்,

சுருக்கமாய் என் கவிதைகள்…!

 

எளிமையாக கவிதை சொல்ல 

என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ? 

உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா!

உயிர் தூண்டிடும் கவிதை ஒன்றை எழுதிட உன் உதவி வேண்டும். 

 

உன் இதழ் மை கொண்டு என் இமைகளில் கற்பனையை வார்த்திடு! 

யார் செய்த புண்ணியமோ, 

உன்னிடம் சரணடைந்தாயிற்று… 

 

நான் மட்டுமல்ல என் கவி வரிகளும் தான்!

நீ இல்லாமல் ஏது காதல்? 

நீ இல்லாமல் நான் எழுதும் கவிதைகள் ஏது!

அன்பே நீ தான் என் பெரும் கவிதை,

அதனால் உன் இதயத்தை துளையிட நினைத்தேன் 

என் கற்பனை எழுதுகோல் கொண்டு… 

 

உன் ஓரப்பார்வை பட்டதும் என் உடல் முழுவதும் கவிதை ஆனது! 

நீ படிக்கத் தொடங்கியதும் உடலின் உயிர் களவு போனது… 

நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வது போல 

காதலோடு சேர்ந்து கவிதையும் வளர்கிறதே! 

வாசிக்க மட்டுமே தெரிந்த என்னை 

வர்ணிக்கவும் செய்தது நீயடா!… 

என் எண்ண சிறகுகளை விரிக்க 

உன் சின்னப் புன்னகை போதும்!

 

நீ வாசிக்கத் தொடங்கினாய்,

என் வரிகள் சுவாசிக்கத் தொடங்கியது!

தொடர்ந்து வாசி…. 

என் வரிகள் முடிவில்லா கவிதைகளாக தொடரட்டும்…

  

பொன்மணி தர்மராஜன், BE., பரவாக்கோட்டை.

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து )

 

Leave a Reply