Home>>இதர>>வரலாற்றின் சுவடுகளில் ராஜமன்னார்குடி – 2
இதர

வரலாற்றின் சுவடுகளில் ராஜமன்னார்குடி – 2

பகுதி 2 – முதலாம் ராஜாதிராஜ சோழரும் மன்னார்குடியும் :

 

பொதுவாக ஒவ்வொரு அரசருக்கும் அவரது ஆட்சிக்காலத்தில் முக்கிய ஊர் என சில ஊர்கள் இருக்கும். அது அந்த மன்னர்களுக்கு பிடித்த ஊராகவோ அல்லது அவர்களது ஆட்சிக்காலத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஊராகவோ இருக்கும். அப்படித்தான் முதலாம் ராஜராஜசோழருக்கு தஞ்சாவூரும், அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழருக்கு கங்கைகொண்ட சோழபுரமும் திகழ்ந்தன. 

 

இவர்கள் இருவருக்கும் அடுத்து அரசுக்கட்டில் ஏறியவர் முதலாம் இராஜாதிராஜர்; இவர் கங்கைகொண்ட சோழராம் முதலாம் இராஜேந்திரரின் புதல்வர் ஆவார். வரலாற்றின் பக்கங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சிறந்த வீரர். தன் வாழ்நாளின் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட நாட்களை போர்க்களத்தில் கழித்து, சோழ பேரரசை நிலைநிறுத்திய மாவீரர். 

 

மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனுடன் கி.பி.1054ம் ஆண்டு நடந்த கொப்பம் போரில், போர்க்களத்திலேயே யானை மேலிருந்து வீர மரணம் அடைந்து, ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ என பட்டம் பெற்ற வீராதி வீரர் (இவரது காலத்துக்கு முன் வாழ்ந்த இராஜாதித்த சோழரும் தக்கோலம் போரில் யானையின் மேல் இருந்து உயிர் துறந்து யானை மேல் துஞ்சிய தேவர் என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது). 

 

அப்படிப்பட்ட மாவீரர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்திருந்தாலும், அவரது ஆட்சிக்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஊராக நம் மன்னார்குடியே திகழ்ந்துள்ளது என நினைக்கத் தோன்றும் அளவுக்கு வரலாற்றில் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

 

முதலாம் இராஜாதிராஜ சோழர் காலத்தில் மன்னார்குடி மிகுந்த சிறப்புடன் இருந்துள்ளது. ஊர் பெயரில் தொடங்கி, கோவில்கள், வாய்க்கால்கள் என அனைத்தும் அவர் பெயராலேயே அந்த காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த ஊரே அவரது பெயரால், ‘இராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. 

 

அது மட்டுமின்றி அவரது ஆட்சியில், இந்த ஊருக்கு ‘தனியூர்’ என்ற சிறப்பு அந்தஸ்தையும் வழங்கியுள்ளார். மன்னார்குடியில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில் ‘இராஜாதிராஜ விண்ணகரம்’ என்றும், ஜெயங்கொண்ட நாதர் கோவில் இராஜாதிராஜ சோழரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றான ஜெயங்கொண்ட சோழன் என்ற பெயரை வைத்து ‘ஜெயங்கொண்ட சோழீச்சரம்’ என்றும், கைலாசநாதர் கோவில் ‘ஸ்ரீ கயிலாசமுடையாரான ராஜாதிராஜீசுவரமுடையார்’ திருக்கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. 

 

ஜெயங்கொண்ட நாதர் கோவில் தற்பொழுது மன்னை நகர் அருகிலும், கைலாசநாதர் கோவில் புதுப்பாலம் பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் பிடாகையான (பிடாகை – பெரிய கிராமம் அல்லது நகரத்திற்குள் அடங்கிய சிற்றூர்) சோழநல்லூரில் இரு வாய்க்கால்கள் இராஜாதிராஜரின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளன; அவை இராஜாதிராஜவதி வாய்க்கால் மற்றும் ஜெயங்கொண்ட சோழ வாய்க்கால் என்பன ஆகும். 

 

இதை எல்லாம் வைத்துப் பார்க்கையில், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் முறையே ராஜராஜருக்கும் இராஜேந்திரருக்கும் முக்கிய ஊர்களாக திகழ்ந்தது போல், நம் மன்னார்குடி இராஜாதிராஜருக்கு முக்கிய ஊராக திகழந்துள்ளது என்ற ஒரு ஊகமான முடிவிற்கு நாம் வர இயலும்.

 

தகவல் : திருவாரூர் மாவட்ட தொல்லியல் வரலாறு

எழுத்தாக்கம் : அபிராமி பாஸ்கரன், மன்னார்குடி.

மன்னையின் வரலாறு தொடரும்…!

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply